தமிழ் முரசு நாளிதழ் நிறுவனர் கோ.சாரங்கபாணியின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழவேள் விருது இவ்வாண்டு 1995, 1997 தமிழ்மொழி வார ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் வழக்கறிஞருமான திரு க.நிர்மலன் பிள்ளைக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பாக சிங்கப்பூரில் தமிழ்மொழி வாரத்தைத் தோற்றுவித்து தமிழ்மொழிக்கு விழா எடுத்தவர்களின் குழுவுக்குத் தலைமையேற்றவர் திரு நிர்மலன் பிள்ளை.
பற்பல சவால்களைத் தாண்டி வெற்றிகரமாக இரண்டு தவணைகள் வரை நடத்தியவர். தமிழ்மொழிக் கொண்டாட்டம், ஒரு வார விழா எனத் தொடங்கி, தமிழ்மொழி மாதமாக உருப்பெற்று, இப்போது மாபெரும் தமிழ்மொழி விழாவாக வளர்தமிழ் இயக்கத்தால் கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு வித்திட்டவர் திரு நிர்மலன் பிள்ளை.
“தகுதியானவருக்குப் பொருத்தமான விருது என்று பலரும் பாராட்டுகிறார்கள். அந்த விருதைத் தமக்காகப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அன்று தம்மோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள் அனைவரின் சார்பாகவும் பெற்றுக்கொள்கிறேன்,” என பெருந்தன்மையுடன் கூறிய அவர், அவர்களை எல்லாம் மேடைக்கு அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ஏப்ரல் 27ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவின்போது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா.தினகரன் விருதையும் சான்றிதழையும் வழங்கினார்.
வழக்கம்போல் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிறார்களின் மாறுவேடப் போட்டியின் இறுதிச்சுற்றுகள் அனைவரையும் கவர்ந்தன.
அத்துடன், பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நடத்தப்பட்ட மாணவர் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்புடன் நடுவர்களுக்கான நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.