தமிழ்ப் பணி செய்தோர்க்குத் தமிழர் திருநாளில் விருது

தமிழ்ப் பணி செய்தோர்க்குத் தமிழர் திருநாளில் விருது

4 mins read
cbc69b8e-0bd6-4da4-9609-b483bc82c613
தமிழர்களுக்கான ‘தமிழ் மொழி’ விருதுகள் விழா சிங்கப்பூரின் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 17) நடந்தேறியது. - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

தமிழ் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில், ‘உலகத் தமிழர்களுக்கான தமிழர் திருநாள் 2026’ விருது விழா சிங்கப்பூரின் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) நடந்தேறியது.

தமிழ் முரசு நாளிதழின் நிறுவனர் தமிழவேள் கோ சாரங்கபாணியால் 1952ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விழாவை, தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயமும் பன்னாட்டுத் தமிழ் அமைப்புகளும் இணைந்து மீண்டும் முன்னெடுத்துள்ளன.

தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயத்தின் தலைவரும் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திரு மா. கோவிந்தராசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கலைஞர்களும் கலந்துகொண்டனர். தமிழவேள் நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் ப. தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

திரு ப.தியா­க­ரா­ஜன் சிறப்பு விருந்தினராகக்  கலந்துகொண்டார்.
திரு ப.தியா­க­ரா­ஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

ஒற்றுமையே முக்கியம்

சாதி, சமய பேதமின்றி 1952ல் தமிழவேள் சாரங்கபாணி தமிழர்களை எவ்வாறு ஒற்றுமைப்படுத்தினாரோ, அதே உணர்வை மீட்டெடுப்பதே இவ்விழாவின் முதன்மை இலக்கு என்று திரு கோவிந்தராசு குறிப்பிட்டார்.

தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயத்தின் தலைவரும் விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான திரு மா.கோவிந்தராசு.
தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயத்தின் தலைவரும் விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான திரு மா.கோவிந்தராசு. - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

“பிற இனத்தவர் தங்கள் பண்டிகைகளின்போது வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைவதைப்போல, தமிழர்களும் ‘தமிழர் திருநாள்’ என்ற குடையின்கீழ் ஒன்றிணைய வேண்டும்.

“கோலங்கள் இடுவது முதல் பெரியவர்களை வணங்குவது வரையிலான நம் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தமிழுக்குப் பங்காற்றிய ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தமிழவேள் நினைவில் விருது

தமிழவேள் கோ சாரங்கபாணியின் தொண்டரும் அவரது கொள்கைகள், திட்டங்களின் பற்றாளருமான 87 வயது ப. தியாகராஜனுக்குத் ‘தமிழவேள் பணித் தொண்டர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தமிழர் திருநாளின் தொடக்கக் காலங்களில் தமிழவேளுடன் பணியாற்றியதை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார் அவர்.

தமிழவேள் தோற்றுவித்த தமிழர் திருநாளை, அந்தப் பெயர் மறையாமல் பல ஆண்டுகள் ஏற்பாடு செய்து நடத்திவந்த அமரர் என்.ஆர்.கோவிந்தனுக்குத் ‘தமிழர் திருநாள் சுடர்’ விருது வழங்கப்பட்டது. அவ்விருதை அவர் வழிநடத்திய மாதவி இலக்கிய மன்றத்தின் தற்போதைய தலைவர் சித்ரா மெய்யப்பன் பெற்றுக்கொண்டார்.

தமிழவேள் கோ சாரங்கபாணியின் உருவப்படம் தாங்கி வெளிவரும் ‘செம்மொழி’ இதழின் ஆசிரியரும் தமிழவேள் குறித்த இரு நூல்களை எழுதியவருமான திரு எம். இலியாஸ் ‘தமிழவேள் தமிழ்ப்பணி’ விருதைப் பெற்றார்.

தொழில்நுட்பத்தில் தமிழ்

கணினித் துறையில் தமிழுக்கான தரவுத்தளங்களை விரிவுபடுத்துவதில் தமிழகத்தில் முக்கியப் பங்காற்றி வரும் பேராசிரியர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரிக்கு ‘சொற்களஞ்சியச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது. உலக அளவில் இணைய அகராதிக் கட்டமைப்பைக் கொண்டுள்ள 174 மொழிகளில், 24வது இடத்தில் இருந்த தமிழை 7வது இடத்திற்கு உயர்த்தத் தாம் முயற்சி செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி.
பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி. - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

“செயற்கை நுண்ணறிவு காலகட்டத்திற்கு ஏற்றவாறு தமிழை மாற்றியமைப்பதே எனது இலக்கு. இது மனிதர்கள் மட்டுமல்லாது, இயந்திரங்களும் தமிழைப் புரிந்துகொள்ள உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவுப் படைப்பாளர் எஸ். குணசேகரன் ‘அறிவியல் தமிழ்’ விருதால் கௌரவிக்கப்பட்டார்.

அயலகத்தில் தமிழ் வளர்ச்சி

இந்தோனீசியாவில் வசிக்கும் தமிழர்களுக்காகச் சேவையாற்றி வரும் முனைவர் விசாகன் மயிலாச்சலத்துக்கு ‘வாழ்நாள் தமிழ் இலக்கியச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது. அங்கு நான்கு பள்ளிகளில் தொடங்கி, தற்போது 10 பள்ளிகள் வரை தமிழ்க் கல்வியை விரிவுபடுத்தியதாக அவர் கூறினார். இந்திய அரசின் உதவியுடன் ஆசிரியர்களை நியமித்துத் தமிழ்க் கல்வியை வழங்கி வருவதாக முனைவர் விசாகன் கூறினார். 2026க்குள் 2,000 குழந்தைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்ப்பதே தமது இலக்கு என்றார் அவர்.

முனைவர் விசாகன் மயிலாச்சலம்.
முனைவர் விசாகன் மயிலாச்சலம். - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

சுவிட்சர்லாந்தில் 43 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் கங்கைமகனுக்கும் ‘வாழ்நாள் தமிழ் இலக்கியச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது. விழாவில் அவரது ஒன்பதாவது நூலான ‘கங்கைமகன் கவிதைகள்’ வெளியிடப்பட்டது.

விருது பெற்றுக்கொள்ளும் முனைவர் கங்கைமகன் (இடது).
விருது பெற்றுக்கொள்ளும் முனைவர் கங்கைமகன் (இடது). - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

மலேசியாவைச் சேர்ந்த மூவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எழுத்தாளர் செண்பகவள்ளிக்கும் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் அரசுக்கும் வாழ்நாள் எழுத்துச் செம்மல் விருதும் தொழில்நுட்ப நிபுணர் விமலநாதனுக்கு அறிவியல் தமிழ்ச் செம்மல் விருதும் வழங்கப்பட்டன.

இலக்கியம்வழி தொண்டு

மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செ.ப. பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற மூத்த தமிழாசிரியரும் எழுத்தாளருமான பொன். சுந்தரராசு, முன்னாள் வானொலிப் படைப்பாளரும் தமிழாசிரியையுமான முனைவர் மீனாட்சி சபாபதி ஆகியோருக்கும் வாழ்நாள் தமிழ் இலக்கியச் செம்மல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. எழுத்தாளர் தவமணி வேலாயுதம் வாழ்நாள் தமிழ் எழுத்தாளர் விருதைப் பெற்றார்.

எழுத்தாளர்கள் ராஜராஜன் மகேந்திரன், சுவர்ணலட்சுமி ஜெயராமன், தமிழ் ஆசிரியர் கலைவாணி இளங்கோ, கவிஞர் பிரம்மகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோருக்குத் ‘தமிழ் எழுத்தாளர்’ விருது வழங்கப்பட்டது.

கலைவழி தொண்டு

கடந்த 48 ஆண்டுகளாக மாணவராகவும், கலைஞராகவும், ஆசிரியராகவும் இசைத்துறையில் ஈடுபட்டு வரும் விக்னேஸ்வரி வடிவழகனுக்கு இசை வாயிலாகத் தமிழுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ‘இசைத்தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றுக்கொள்ளும் திருவாட்டி விக்னேஸ்வரி வடிவழகன்.
விருது பெற்றுக்கொள்ளும் திருவாட்டி விக்னேஸ்வரி வடிவழகன். - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

“இக்கால இளையர்களும் நம் பாரம்பரிய இசையின் மீது ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழுக்கும் இசைக்கும் என் பங்களிப்பு தொடரும்,” என்று திருவாட்டி விக்னேஸ்வரி குறிப்பிட்டார்.

கலை, பண்பாட்டுத் துறைகளுக்கு பங்காற்றியதற்குக் கலாசாரப் பதக்கம் பெற்ற புல்லாங்குழல் கலைஞர் கானவினோதன் ரத்னத்திற்கும் ‘இசைத்தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

‘தலாக்’ என்ற நாடகத்தின் மூலம் தமது மேடைப் பயணத்தைத் தொடங்கி, ‘மேக்பத்’ போன்ற நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள மூத்த நாடகக் கலைஞர் நர்கிஸ் பானுவுக்கு ‘நாடகத் தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது. நாடகம் என்பது சமூகத்திற்குப் பயனளிக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்று திருவாட்டி நர்கிஸ் வலியுறுத்தினார்.

விருது பெற்றுக்கொள்ளும் திருவாட்டி நர்கிஸ் பானு.
விருது பெற்றுக்கொள்ளும் திருவாட்டி நர்கிஸ் பானு. - படம்: தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்

பரதநாட்டியக் கலைஞர் நல்லியப்பன் பெருமாள் ராஜா, நடனக் கலைஞர் பக்தி தேவி சுந்தரம் இருவருக்கும் ‘நடனத்தமிழ் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாலர்பள்ளித் தமிழாசிரியர் லூயிஸ் ஜெய ரூபி கரோலினுக்கு ‘மழலையர் கலைச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற இளையோர்

இளையர் பிரிவில், பாரம்பரியத் தற்காப்புக் கலைஞர் ரக்சித் நெவின் மணிவண்ணன், இளம் எழுத்தாளர் பூபாலன் சுபால், மேடைப் பேச்சாளர் பூபாலன் சுவாதி ஆகியோர் விருது பெற்றனர்.

“அடுத்த தலைமுறையிடம் தமிழைக் கொண்டுசேர்ப்பவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம்,” என்று திரு மா.கோவிந்தராசு கூறினார்.

குறிப்புச் சொற்கள்