சிறுவர்கள், குடும்பங்கள், சமூகத்தினரை ஒன்றிணைக்கும் வகையில் ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ (‘எச்ஐஏ’) அமைப்பின் ‘தி அல்ஃபபெட் புராஜெக்ட்’ (‘டிஏபி’) எனும் சமூக இயக்கம் ஏற்பாடு செய்த விழா, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் நடைபெற்றது.
கற்றல், பொழுதுபோக்கு, சமூகத் தொடர்பு ஆகியவற்றை மையமாகக்கொண்டு நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் கலந்துகொண்டன.
வெளிநாட்டு ஊழியர்கள், வீடற்றோர் உள்ளிட்ட பல்வேறு உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதே 2018ல் தொடங்கப்பட்ட ‘டிஏபி’யின் நோக்கமாக இருந்தது.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 2022முதல் அமைப்பு ஆதரவை விரிவுபடுத்தியது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வழங்கிய ‘காம்லிங்க்+’ குடும்பங்களின் விவரங்களை கொண்டு குழந்தைகளைச் சென்றடைந்ததாக ‘எச்ஐஏ’யின் தலைவர் எசேக்கியேல் டான் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் உதவி தேவைப்படும் 1,000 குழந்தைகளைச் சென்றடைவதை அது இலக்காகக் கொண்டுள்ளது.
குழந்தைகளின் எழுத்தறிவுத் திறனை வளர்க்கவும் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
“சிறாருக்கு ஒரு முழுமையான, பன்முகமான கல்வியை வழங்குவதே எங்களது நோக்கம். அவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதுடன், அவர்களின் பண்புகளை வளர்க்கும் வகையில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் அவர்களை ஈடுபடுத்துகிறோம்,” என்றார் அவர்.
“எந்தப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுக்கொள்ளவும், வளர்ச்சியடையவும், தங்களது திறனை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்,” என்று திரு எசேக்கியேல் கூறினார்.
‘டிஏபி’ விழாவில் முதல்முறையாக ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் மாணவர் தொண்டூழியர்களும் இணைந்தனர். அவர்கள் நிகழ்வின் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டதுடன், குழந்தைகளுக்கான பல்வேறு நடவடிக்கைகளையும் வழிநடத்தினர். விழாவின் சிறப்பு விருந்தினராக உட்லண்ட்ஸ் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் மரியாம் ஜாஃபார் கலந்துகொண்டார்.
“சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் முழுத் திறனை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். குழந்தைகளுக்கு ஆதரவாகப் பலர் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெற்ற கதை சொல்லும் போட்டியில் சிறார் கலந்துகொண்டிருந்தனர். அப்போட்டியில் வெற்றிபெற்ற 10 வயது ஆண்டி அஹ்லான் ஷாஃபி, ‘டிஏபி’ விழாவில் தனது கதையைக் கூறினார்.
“‘டிஏபி’ ஏற்பாடு செய்துவரும் பயிலரங்குகளில் ஆண்டி 1 மாதமாகப் பங்கேற்று வருகிறார். அதிலிருந்து அவனின் தன்னம்பிக்கை நிறைய வளர்ந்திருக்கிறது,” என்று அவனின் தாயார் ஹாஃபிசா இஸ்மாயில் கூறினார்.
விழாவில் உணவு நிலையங்கள், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள், கலை நடவடிக்கைகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், புகைப்பட அரங்கு உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றிருந்தன.
விளையாட்டுகளில் திருவாட்டி சாய்பு நிஷாவும் அவரின் பேரப்பிள்ளைகளுடன் கலந்துகொண்டார். அவரின் பேத்தி, நூர் ஜாஹிதா ஜாஹிர்டின், 7, ‘எச்ஐஏ’யின் பங்குதாரர்கள் ஒன்றின் தனியார் பயிற்சி வகுப்புக்கு இரண்டு மாதங்களாகச் சென்று வருகிறார். “வகுப்புகளில் நிறைய நண்பர்களைச் சந்தித்தேன். பேசவும் துணிச்சலாகச் செயல்படவும் கற்றுக்கொண்டேன்,” என்றார் ஜாஹிதா.
எழுத்தறிவு, திறன் வளர்ப்பு, பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகள் மூலம், குறைந்த வசதிகளைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆதரவை வழங்கி சமூகத்துடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்த ‘டிஏபி’ மேற்கொண்டு வரும் முயற்சிகளை விழா எடுத்துக்காட்டியது.

