ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் வீடுகளிலிருந்து வீசும் உணவின் மணம் பசியை மட்டுமன்று, கடந்த கால நினைவுகளையும் தூண்டுவதுண்டு.
அந்த வகையில், சிங்கப்பூரில் தலைமுறைகள் கடந்தும் குடும்பப் பாரம்பரியச் சமையற்கலைகளைப் பேணிக்காக்கும் குடும்பங்கள் பல உள்ளன.
மூன்று தலைமுறை கடந்த பிரியாணிப் பாரம்பரியம்
ஹவ்காங்கில் வசிக்கும் 62 வயது திருவாட்டி பஷீரா பீவி, சிறுவயதில் அப்பர் பூன் கெங் ரோட்டில் ஏழு சகோதரர்களுடன் வாழ்ந்த கூட்டுக்குடும்பக் காலத்தை நினைவுகூர்ந்தார்.
அவரின் தாயார், ஹஜ்ஜுப் பெருநாள் அதிகாலையில் எழுந்து சமைக்கும் கோழி பிரியாணி, அந்த வட்டாரம் முழுவதும் பிரபலம். தாயார் அந்த ‘தம்’ பிரியாணியைச் செய்வது எப்படி என்பதை பஷீராவின் மூத்த சகோதரிக்குச் சொல்லிக்கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு மூத்த சகோதரியிடமிருந்து திருவாட்டி பஷீரா அதைத் கற்றுக்கொண்டார்.
இன்று பெருநாள் காலத்தில் திருவாட்டி பஷீராவின் வீட்டிற்கு மூன்று பிள்ளைகளும் வாழ்க்கைத்துணையோடும் 9 பேரப்பிள்ளைகளோடும் வருகை தந்து, அவர் கையால் செய்யும் கோழி பிரியாணியை ஆவலோடு ரசித்து உண்கிறார்கள்.
தற்போது பாரம்பரியக் கோழி பிரியாணியைச் செய்யும் குறிப்பை, அவரின் இரண்டு மகள்கள் 40 வயது ரசூல் பீவீக்கும் 37 வயது நூர் ஜரீனாவுக்கும் கற்றுக்கொடுத்துள்ளார் திருவாட்டி பஷீரா.
“இப்படிப்பட்ட குடும்பப் பாரம்பரியச் சமையல் குறிப்புகள் வெறும் உணவு முறைகள் அல்ல; அவை நம் குடும்பத்தின் அடையாளம். அவற்றை நாம் போற்றிப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும்,” என்று ரசூல் பீவி பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாட்டியின் நினைவோடு சமைக்கும் ஷஹிரா
புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் 14 வயது ஷஹிரா நஸ்னின், சமையல் கலைக்கு வயது ஒரு தடையன்று என்பதை நிரூபிக்கிறார். மறைந்த பாட்டி மரியம் பீவியிடமிருந்து பல இந்திய முஸ்லிம் சமையல் குறிப்புகளை அவர் கற்றுக்கொண்டர்.
ஆண்டுதோறும் ஹஜ்ஜுப் பெருநாள் அதிகாலையில், பாட்டியுடன் சேர்ந்து சமையலறையில் காய்கறிகளை நறுக்க ஷஹிராவும் அவரது 15 வயது அக்கா சாலிஹாவும் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள்.
பாட்டி செய்யும் ‘ஜாலர்’, கமகமக்கும் கோழிக்கறி, இனிப்பான வட்டலப்பம் முதலியவை ஷஹிராவிற்கும் சாலிஹாவிற்கும் மிகவும் பிடித்த உணவுவகைகள். அவற்றை உண்டு மகிழ்வது மட்டுமல்லமால் அண்டைவிட்டாருக்கும் கொடுப்பது பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது. அதன்வழி பாரம்பரிய உணவுவகைகள், அண்டை வீட்டாருடனான உறவை வலுப்படுத்தவும் உதவுகின்றன என்று ஷஹிரா குறிப்பிட்டார்.
“என் பாட்டிதான் எனக்குச் சமையற்கலைமீது ஈர்ப்பை ஏற்படுத்தியவர். பாட்டி இப்போது எங்களுடன் இல்லை என்றாலும் அவரது சமையல் குறிப்புகளை நான் என்றும் நினைவில் வைத்து என் அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுப்பேன். குறிப்பாக ஜாலர், வட்டலப்பம், இடியாப்பம் போன்ற பாரம்பரிய இந்திய முஸ்லிம் சமையல் குறிப்புகள் அழிந்துவிடக் கூடா,” என்கிறார் ஷஹிரா.
உணவு என்பது ஒருவரின் பசியாற்றுவதற்கு அப்பால், குடும்பங்களையும் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலம் என்பதைத் தலைமுறை தாண்டிய பெருநாள் உணவுவகைகள் உணர்த்துகின்றன.

