பொறியியல் துறையிலிருந்து 2010ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்விக் கழக ஆசிரியராக மாறினார் வித்தியாவதி மோகன்.
இளவயதிலிருந்தே கல்வி கற்கும் மாணவராகவும் கற்றுத்தரும் ஆசிரியராகவும் இவர் தம்மைக் கருதுகிறார்.
“பொறியியல் துறையில் பணியாற்றியபோது அனுபவமிக்க பொறியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அதே சமயம் மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்களுக்குப் பணி நோக்கம், பாதுகாப்பான பணி நடைமுறைகள் குறித்து கல்வி கற்பிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது,” என்று தமிழ் முரசிடம் திருவாட்டி வித்தியா கூறினார்.
அந்த அனுபவம், மற்றவர்களுக்கு கற்றுத்தரும் ஆசிரியராக இவரை ஊக்குவித்தது.
கடந்த 14 ஆண்டுகளாக மாணவர்களைத் தன் பணியின் மையமாகக் கொண்டுவருவதாகத் தெரிவித்தார் வித்தியா.
“மாணவர்களுக்கு வழிகாட்டும்போது மரியாதை, பொறுப்பு போன்ற விழுமியங்கள் அவர்களிடம் வேரூன்றத் தொடங்குவதைக் கண்டுள்ளேன்,” என்றார் இவர்.
தன் மாணவர்கள், கல்வியில் மட்டுமன்றி குணநலன்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்ப்பது தமக்குப் பெருமை அளிப்பதாகச் சொல்கிறார் திருவாட்டி வித்தியா.
மாணவர் மேம்பாட்டிலும் தொழில்துறை ஒத்துழைப்பிலும் பத்தாண்டுகளுக்குமேல் அனுபவம் கொண்ட திருவாட்டி வித்தியா, வேலை பார்த்துக்கொண்டே படிக்க வழிவகுக்கும் மின்பொறியியல் பாடப் பட்டயப் படிப்பை (Work - Study Diploma) உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உண்மைத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு பாடத்திட்டத்தை வடிவமைக்க தொழில்துறைப் பங்காளிகளுடன் இவர் நெருக்கமாகப் பணியாற்றினார். மேலும், பள்ளிக் கற்றலுடன் பயிற்சியை இணைக்கும் பணிச்சூழலைச் செயல்படுத்துவதற்கும் இவர் பொறுப்பு வகித்தார்.
“வேகமாக வளர்ந்துவரும் தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தைச் சீரமைப்பதும், வேலை-கல்வி கற்றல் அணுகுமுறையை திறம்படச் செயல்படுத்துவதும் முக்கியச் சவால்களாக இருந்தன,” எனக் குறிப்பிட்டார் திருவாட்டி வித்தியா.
வகுப்பறையைத் தாண்டி, கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல், கற்றல் பயணங்கள் போன்ற முயற்சிகளை தன் மாணவர்களுடன் இவர் முன்னெடுத்துள்ளார்.
“இத்தகைய நடவடிக்கைகள் நீடித்த நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு, தலைமைத்துவம், தகவல் தொடர்புத் திறன், வலுவான சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன,” என்கிறார் இந்த ஆசிரியை.
திருவாட்டி வித்தியாவின் பணிகளைச் சிறப்பிக்கும் வண்ணம் அவருக்குக் கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதி ‘தொழில்நுட்பக் கல்விக் கழக ஆசிரியர்’ விருது வழங்கப்பட்டது.
தம் மாணவர்களுக்கான தமது கனவுகள் தொழில்நுட்பச் சாதனைகளுக்கு அப்பாற்பட்டவை எனக் கூறும் இவர், “என் மாணவர்கள் பரிவுணர்வுமிக்கவர்களாகவும், நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும், தங்கள் பணியிடத்திலும் சமூகத்தின் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உறுதிபூண்டவர்களாகவும் திகழ வேண்டும்,” என்றும் விரும்புகிறார்.
kirthigaravi@sph.com.sg

