சிங்கப்பூரில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் சிலர் குறும்படம் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டனர்.
‘பிளாக்ஸ்பேஸ் மீடியா’ நிறுவனம், ‘விடியல்’ என்ற பயிலரங்குகள் மூலம் குறும்படத் தயாரிப்புப் பற்றி ஆசிரியர்களுக்குக் கற்பித்தது.
அந்தப் பயிலரங்குகளில், கதைக்கான கருவைத் தேர்ந்தெடுப்பது, கதை, வசனங்கள் எழுதுவது, காட்சிகளை இயக்குவது, ஒலி, ஒளியைக் காட்சிக்கு ஏற்றவாறு அமைப்பது, நடிப்பு, உடை உபகரணங்களைத் தேர்வுசெய்வது ஆகிய திறன்களைக் கிட்டத்தட்ட 20 தமிழ் ஆசிரியர்கள் கற்றுக்கொண்டனர்.
“ஆத்திசூடி, திருக்குறள் போன்றவற்றை மாணவர்களுக்குக் குறும்படம் மூலம் கற்பிக்க இந்தப் பயிலரங்கு மூலம் கற்றுக்கொண்டேன். பயிலரங்கில் தெரிந்துகொண்டதை மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கும்போது அவர்களின் கற்றல் இன்னும் சிறப்பாகும்,” என்றார் ஃபர்ன்கிரீன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருவாட்டி நசீரா நிசா.
மரியாதை, செவிசாய்த்தல், கனிவன்பு ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நிமிடங்களுக்குள் குறும்படத்தை ஆசிரியர்கள் தயாரித்தனர்.
“குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பதை மையமாகக் கொண்டு ‘கொஞ்சம் காது கொடுத்து கேளுங்களேன்’ என்ற குறும்படத்தை உருவாக்கினோம். இரண்டு மணிநேரத்தில்கூட ஒரு படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால், இரண்டு நிமிடங்களுக்குள் அனைத்தையும் குறும்படமாக உருவாக்குவது சிரமம்,” என்றார் செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப் பள்ளியின் பகுதிநேர ஆசிரியர் திரு கோ கலியபெருமாள்.
‘பிளாக்ஸ்பேஸ் மீடியா’ நிறுவனம், எட்டுப் பயிலரங்குகளை நடத்தியது. ஒவ்வொரு பயிலரங்கும் மூன்று மணிநேரம் நீடித்தது.
பயிலரங்குகளில் கற்றதை ஆசிரியர்கள் வெளிப்படுத்துவதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 30) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தங்கள் குழுவினருடன் குறும்படம் தயாரித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
“பல்வேறு பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் ஒன்றுகூடுவதால் நாங்கள் சில நேரங்களில் தொலைபேசி, ‘ஸூம்’ செயலி ஆகியவற்றின் மூலம் தொடர்புக்கொண்டு எங்கள் கலந்துரையாடல்களை நடத்தினோம்,” என்றார் குவோ சுவான் பிரெஸ்பெட்டெரியன் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் திருவாட்டி ஹருனிஷா.
“தமிழ் ஆசிரியர்கள் சிலர், மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதைப்போல தங்களுக்கும் குறும்படப் பயிலரங்குகள் நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவற்றின்மூலம் மாணவர்களின் மொழிவளத்தை வளர்க்க ஆசிரியர்கள் விரும்புகின்றனர்,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் திரு சலீம் ஹாதி.
“ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளக் காணொளிகள் சிறந்த ஊடகமாக அமைகின்றன. தமிழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து தன்னம்பிக்கை ஊட்டுவதே எங்கள் நோக்கம். இம்முயற்சியைப் மலாய், சீன மொழிகளில் விரிவுபடுத்துவதே எங்களது அடுத்த இலக்கு,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

