எந்த நேரமும் வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் குணமுடைய தமக்குத் தொண்டூழியப் பணிதான் வாழ்க்கையில் சமநிலையைக் காண உதவியதாகச் சொன்னார் செல்வராஜ் சக்திவேல், 35.
‘டீம் நிலா’ தொண்டூழிய இயக்கத்தில் கடந்த மூன்றாண்டுகளாக ஈடுபட்டுவரும் சக்திவேல், 2024ஆம் ஆண்டிலிருந்து தொண்டூழியத் தலைவராகவும் உள்ளார்.
இவ்வாண்டின் ‘டீம் நிலா’ தொண்டூழியர் விருது வழங்கும் விழாவில், குறைந்தது 360 மணிநேரம் தொண்டூழியத்தில் ஈடுபட்டோர்க்கு வழங்கப்படும் தங்க நிலை விருதினை அவர் பெற்றார்.
கடந்த ஆண்டு (2025) நடைபெற்ற எச்எஸ்பிசி ரக்பி எஸ்விஎன்எஸ் சிங்கப்பூர் (HSBC Rugby SVNS Singapore), பெஸ்தா சுக்கான் போன்ற நிகழ்ச்சிகளில் பங்களித்ததுடன் பர்ப்பள் பரேட் நிகழ்ச்சிக்கான நடவடிக்கைகள், செயல்பாடுகளைத் திட்டமிடுவதிலும் பங்காற்றியுள்ளார் சக்திவேல்.
“தொண்டூழியத்தில் ஈடுபடுவது, பரபரப்பான வேலைச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை அணுகுமுறையையும் ஒருவித நிம்மதியையும் தருகிறது. தொண்டூழியத் தலைவராகும் வாய்ப்புக் கிடைத்து, அதற்கான பயிலரங்கில் பங்கேற்றேன். அதிலிருந்து திட்டமிடல், நிர்வாகம், மக்கள் மேலாண்மை உள்ளிட்ட திறன்களையும் கற்றுக்கொண்டேன். இது எனக்குப் பணியிலும் உதவியாக அமைகின்றன,” என்றார் சக்திவேல்.
இவ்விருது பெறுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகச் சொன்னார் சக்திவேல்.
ஆக அதிகத் தொண்டூழியர்களுக்கு ‘டீம் நிலா’ விருதுகள்
‘டீம் நிலா’ தொண்டூழியர் விருது விழாவில், கடந்த ஆண்டு மொத்தமாக 220,000 மணிநேரம் தொண்டூழியத்தில் ஈடுபட்ட 633 பேருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டிலிருந்து தொண்டூழியர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ஆக அதிகமானோர் விருதுகள் பெறுவது இதுவே முதன்முறை. இது கடந்த ஆண்டைவிட 50 விழுக்காடு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இவ்வாண்டு முதன்முறையாக மூவருக்குத் தொண்டூழியத் தலைவர் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
சனிக்கிழமையன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அவர், “எஸ்ஜி60 கொண்டாடிய வேளையில் அனைத்துலக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ‘டீம் நிலா’ சிறப்பாகப் பங்காற்றியது,” என்றார்.
இந்த வலுவான ஆதரவு, தொண்டூழிய மனப்பான்மையை ஊக்குவித்து, அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல விரும்பி ‘லிட்டில் டீம் நிலா’ தொடங்கப்பட்டு, அதில் 66 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்காற்றுவதைச் சுட்டினார்.
ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் நிலையில், அனைவரும் ஒன்றுகூடி கருத்துகளைப் பகிரவும், ‘டீம் நிலா’ குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடவும், ‘ஹோம் ஆஃப் டீம் நிலா’ எனும் திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவற்றின் கூடுதல் விவரங்கள் ஆண்டிறுதியில் பகிரப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய முன்னெடுப்புகள்
தொண்டூழியர்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தவும் திறன்களை வளர்க்கவும் புதிய தொண்டூழியர்களை ஈர்க்கவும் புதிய திட்டங்களும் அறிமுகம் காணவுள்ளன.
‘பிளே மோர்’, ‘சப்போர்ட் மோர்’, ‘ஜியோ மோர்’ ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் அமையும் இந்த முயற்சிகள், ‘டீம் நிலா’ குறித்த புரிதலை ஆழப்படுத்தி, விளையாட்டு மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த முயற்சிகள் குறித்த கூடுதல் விவரங்கள் ஆண்டு முழுவதும் படிப்படியாகப் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

