ஆலயத்தின் நூற்றாண்டு கால வரலாற்றுப் பயணம்

ஆலயத்தின் நூற்றாண்டு கால வரலாற்றுப் பயணம்

2 mins read
71541e85-3f42-469c-aea9-abe0019d87c2
நூறாண்டுகள் கடந்து தரும முனீஸ்வரன் ஆலயத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் அரசமரத்தின் அருகில் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் வேலப்பன் துரைசாமி. - படம்: தரும முனீஸ்வரன் ஆலயம்

1900களின் தொடக்கத்தில் சிராங்கூன் வட்டாரத்தில் கால்நடை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த ஏறத்தாழ 30 இந்தியக் குடும்பங்களின் காவல் தெய்வமாக ஓர் அரசமரத்தடியில் அருள்மிகு ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம் உருவானது.

அப்போது ஒரு சிறிய சூலமும், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட அரைக்கோள வடிவக் கருங்கல்லுமே வழிபாட்டு அடையாளங்களாக இருந்தன.

நூறாண்டுகள் கடந்து இப்போதும் அந்தப் பழமையான அரசமரம், தரும முனீஸ்வரன் ஆலயத்தின் ஆணிவேராகவும் அடையாளமாகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

ஆலயம் படிப்படியாக வளர்ச்சியடைந்த நிலையில், 1969ஆம் ஆண்டில் மாரியம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட இதர தெய்வச் சிலைகள் ஆலயத்தில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டன.

காலம் மாறினாலும் பாரம்பரியம் மாறாத வண்ணம், அன்று அரசமரத்தடியில் இருந்த அதே கருங்கல், இன்றைய மூலவர் தரும முனீஸ்வரரின் பீடத்திற்கு அடியிலேயே பதிக்கப்பட்டு ஆலயத்தின் அடித்தளமாகப் பாதுகாக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் நகரச் சீரமைப்புப் பணிகளுக்கு இடையிலும், தனது இடத்தை மாற்றிக் கொள்ளாமல் அதே இடத்தில் நிலைத்து நிற்பவை ஒரு சில ஆலயங்களே. அதில், முக்கோண வடிவிலான நிலப்பரப்பில் அமைந்திருக்கும் தரும முனீஸ்வரன் ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1998ல் ஆலயத்தின் புதிய கட்டடம் கட்டப்பட்டபோது வரலாற்றுச் சின்னமான அரசமரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆலயத்தின் கட்டடம் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்றது. சிங்கப்பூர் ஆலயங்களிலேயே புத்தாயிரமாண்டின் முதல் குடமுழுக்கைக் கண்ட பெருமை ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயத்தைச் சாரும்.

அதன் பிறகு, 12 ஆண்டுகாலச் சுழற்சியை ஒட்டி 2013ஆம் ஆண்டு இந்த ஆலயத்தின் அடுத்த குடமுழுக்கு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்