ஶ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கில் 10,000 பக்தர்கள் பங்கேற்பு

3 mins read
31368faf-3644-44e5-9dcd-740d385be9a6
ஏழு கலசம் கொண்ட கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்படும் காட்சி. - படம்: த. கவி
multi-img1 of 3

மார்சிலிங்கில் ஏறத்தாழ 10,000 பக்தர்கள் பங்கேற்ற ஶ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை நடந்தேறியது. 

அதிகாலை 4 மணிக்கெல்லாம் பக்தர்கள் வரத் தொடங்க, காலை 8 மணியளவில் கடம் புறப்பட்டு சரியாக 9 மணிக்குக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. மந்திரங்கள் முழங்க மூன்றடுக்கு கோபுரத்தின் ஏழு கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து மூல தெய்வங்களின் வழிபாடுகளில் அவர் கலந்துகொண்டார். கோவில் புதுப்பிப்புப் பணிகளைக் கோவில் தலைவர் த.சுரேஷ் குமார் விளக்கிச் சொல்ல, கோவிலைச் சுற்றிப் பார்வையிட்டார் பிரதமர் வோங். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், மூத்தோருடன் அவர் கலந்துரையாடினார்.

அதிகாலை 4 மணிக்கு யாகசாலை வழிபாடுகள் தொடங்கி, 6.30 மணி முதல் மூன்று நாடி சந்தானம் நடைபெற்றது. தொடர்ந்து ஏழு முக தீபம் காட்டப்பட்டது. அதனையடுத்து, கோவிலின் தலைமை அர்ச்சகர் ‘சிவாகம ரத்தினம்’ சா.நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் சிங்கப்பூரின் பல்வேறு கோவில்களிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் வந்திருந்த 42 சிவாச்சாரியர்கள் இணைந்து குடமுழுக்கு விழாவை நடத்தினர்.

விழாவில் பங்கேற்ற மூத்தோர், சக்கர நாற்காலியில் உள்ளோர், உடற்குறையுள்ளோர் வழிபட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குடமுழுக்கைத் தொடர்ந்து அவர்கள் முதலில் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். பின்னர், மற்ற பக்தர்கள் கட்டங்கட்டமாக உள்ளே சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

புனித நீர் கொண்ட குடங்களை சிவப்புக் கம்பளத்தில் சிவாச்சாரியர்கள் ஏந்தி வர, திரண்டிருந்த பக்தர்கள் அவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர்.
புனித நீர் கொண்ட குடங்களை சிவப்புக் கம்பளத்தில் சிவாச்சாரியர்கள் ஏந்தி வர, திரண்டிருந்த பக்தர்கள் அவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். - படம்: த. கவி

தீவெங்கிலும் உள்ள 27 கோவில்கள், பீடங்களிலிருந்து, நிர்வாகிகள் வரிசைத் தட்டுடன் வந்து மரியாதை செலுத்தினர்.

காலையிலிருந்து காத்திருந்த பக்தர்களுக்குப் பழம், ரொட்டிகள், தண்ணீர் போத்தல்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. காலை 9.30 மணிக்கு அன்னதானம் தொடங்கியது. ஒரே நேரத்தில் 1,000 பேர் அமர்ந்து உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்ட நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நூற்றுக்கணக்கான தொண்டூழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்னதானக் கூடத்தில் உணவு பரிமாறவும் கூட்டத்தைச் சமாளிக்கவும் 500க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் பணியாற்றினர்.

ஶ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு பரிவட்டம், சால்வை, மாலை அணிவிக்கப்படுகிறது. 
ஶ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு பரிவட்டம், சால்வை, மாலை அணிவிக்கப்படுகிறது.  - படம்: த. கவி

“இக்குடமுழுக்கு விழாவிற்கு மூன்று மாதங்களாகப் பரபரப்பாக செயல்பட்டு வருகிறோம். அனவருக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் கோவிலைப் புதுப்பித்துள்ளோம். அவர்களுக்குச் சிறந்த அனுபவம் தர எண்ணினோம். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி,” எனச் சொன்னார் கோவில் நிர்வாகக் குழுச் செயலாளர் சிவராஜன்.

ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் சேவையாற்றி இதனைத் தடையின்றி நடத்தி முடித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

அதிகாலை முதல் காத்திருந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் தொண்டூழியர்கள்.
அதிகாலை முதல் காத்திருந்த பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் தொண்டூழியர்கள். - படம்: த கவி

இக்கோவிலின் இரு குடமுழுக்கைத் தரிசனம் செய்த சரஸ்வதி கோவில் புதுப்பிப்புக்குப் பின் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக அவர் கூறினார்.

“கடந்த இரு முறையைக் காட்டிலும் இம்முறை வெகு விமரிசையாக நடைபெற்றது. மூத்தோருக்கு முன்னுரிமை அளித்ததால் முதல் தரிசனம் கண்டேன். மகிழ்ச்சியான நாள் இது,” என்றார் திருவாட்டி சரஸ்வதி, 76.

“இந்தக் குடமுழுக்கு தரிசனத்தைக் காண காலை 7 மணி முதல் காத்திருந்தேன். சிறப்பான தரிசனம். கடவுளின் அருள் பூரணமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார் ஓட்டுநராகப் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர் அன்பழகன், 31.

“இக்கோவிலுக்கு அடிக்கடி வருவேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்தியர்களுக்கே உரிய கலாசாரம் சார்ந்த பெருமையான நிகழ்ச்சிகள். இதில் பங்கேற்றது சிறந்த அனுபவம்,” என்றார் உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர் சுதாகர்.

ஏறத்தாழ 23 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு வரும் உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர் சந்திரமதி, 55, மூன்று குடமுழுக்கையும் கண்டுள்ளதாகச் சொன்னார்.

“இது என் குடும்பக் கோவில் போன்றது. காலை 6.30 மணிக்கே வந்தேன். கருடன் பறந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது,” என்றார் அவர்.

அதிகாலை 4 மணி முதல் குடமுழுக்கு விழாவைக் காண திரண்டு காத்திருந்த பக்தர்கள்.
அதிகாலை 4 மணி முதல் குடமுழுக்கு விழாவைக் காண திரண்டு காத்திருந்த பக்தர்கள். - படம்: த கவி

“ஆலயக் குடமுழுக்கு விழாவில் அன்னதானம் போடப்பட்டது சிறப்பு. உணவின் சுவையும் அற்புதம்,” என்றார் புக்கிட் பாத்தோக் பகுதியிலிருந்து வந்திருந்த திருவாட்டி பத்மினி, 55.

தொடர்ந்து 40 ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் திரு ரமே‌ஷ் அப்பு, 62, குடமுழுக்கு விழாவிற்கு முந்தைய நாளிலிருந்தே சமையல், உணவுப் பறிமாறுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.

கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்படும் தருணத்தில், பக்திப் பரவசத்துடன், இருகரம் கூப்பி வணங்கும் பக்தர்கள்.
கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்படும் தருணத்தில், பக்திப் பரவசத்துடன், இருகரம் கூப்பி வணங்கும் பக்தர்கள். - படம்: த. கவி

நாள் முழுதும் பரபரப்பாக ஓடியாடிச் சேவை செய்த இவர், “பக்தர்களின் முகத்தில் பார்க்கும் திருப்தி களைப்பை‌ச் சரிசெய்து மனத்திற்கு இதம் தருகிறது,” என்றார்.

முதிர்ந்த வயதிலும் தொண்டூழியம் செய்து வருகிறார் தேக்கா குடியிருப்பாளர் பக்கிரிசாமி, 75.

“இந்த வயதிலும் என்னால் சேவை செய்ய முடியுமென்றால் எல்லாராலும் முடியும். என்னைப் பார்த்து இளையர்கள் சேவையாற்ற முன்வர வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்