மூன்று தலைமுறை குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) இந்திய மரபுடைமை நிலையத்தில் ஒன்றிணைந்து தொடர்ந்து தைத்திருநாள் உணர்வில் திளைத்தன.
‘சிறகுகள்’ நடன அமைப்பின் ஏற்பாட்டில் ‘தலைமுறைகளை இணைக்கும் தமிழ் திருநாள்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
காளைமாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, பொங்கல், இதர இனிப்பு வகைகளை சுவைப்பது, பழைய பொருள்களை வீசுவது, வேண்டாத பழக்கவழக்கங்களைக் கைவிடுவது போன்ற நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 40 பேர் ஈடுபட்டனர்.
அத்துடன், இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான சிறப்பு உரையாடல் அமர்வு ஒன்றும் இடம்பெற்றது.
உரையாடலில் தாத்தா-பாட்டி, பெற்றோர் என இருதரப்பும் தங்கள் பொங்கல் கொண்டாட்ட அனுபவங்கள், மாறுபட்ட அம்சங்கள், தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் வழக்கங்களை பகிர்ந்தனர்.
பொங்கல் போன்ற கொண்டாட்டங்கள், அதன் புரிந்துணர்வு, சூழ்ந்துள்ள பாரம்பரியம் பொதுவாக ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஐஸ்வரியா சுந்தர், 35.
“மூத்த தலைமுறையினர் தங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்ள முன்வரவும் இளைய தலைமுறையினர் அந்த அறிவைப் பெறவும் நாங்கள் இந்த உரையாடல் வழி ஊக்குவிக்கிறோம்,” என்றார் அவர்.
சிறுவர்களுக்காக இந்திய மரபுடைமை நிலையத்தின் சுற்றுலா அங்கம் இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பொங்கல் திருநாளுக்காக நிலையம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் பானையில் வண்ணம் தீட்டுவது, நெல் புடைப்பது போன்ற இதர நடவடிக்கைகளிலும் வந்திருந்தோர் கலந்துகொண்டார்கள்.
ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் கொண்டாடுவதற்கு அதன் தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார் திருவாட்டி திரிஷ்னா, 39.
“அதனால்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் பற்றியது மட்டுமல்ல. இவற்றின் அர்த்தம், குடும்பங்கள் ஏன் தனித்துவமான முறையில் இவற்றில் ஈடுபடுகின்றன என்பது குறித்தும் சிறார்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன,” என்றார் அவர்.
தம் நான்கு பேரக்குழந்தைகளுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் திருவாட்டி உஷாராணி, 62. தம்மைப் பொறுத்தவரை, பொங்கல் என்பது குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கான ஒரு நேரமாகும், என்றார் அவர்.
“அதுதான் என் குழந்தைகளுக்கும் மற்றவர்களின் குழந்தைகளுக்கும் கடத்தப்பட வேண்டிய சாரம்சம்,” என்றார் அவர்.

