தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்கள், வெளிநாட்டு ஊழியர்களுடன் உருவான ‘தமிழர் கிரிக்கெட் அணி’

2 mins read
7b1b98fb-137e-4c58-ae9a-810f10234039
தமிழர் கிரிக்கெட் அணி, அதன் தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் இரண்டாம் நிலையைப் பிடித்தது. படத்தில் அணியுடன் அணியைத் தொடங்கி, போட்டிகளை ஏற்பாடுசெய்த அறிவன் (இடக்கோடி). - படம்: தமிழர் கிரிக்கெட் அணி
multi-img1 of 2

வெளிநாட்டு ஊழியர்கள், இளையர்கள், உள்ளூர் விளையாட்டாளர்கள் என வெவ்வேறு பிரிவினரை கிரிக்கெட் மூலம் இணைக்க ‘தமிழர் கிரிக்கெட் அணி’யைத் தொடங்கியுள்ளார் சொத்துச் சந்தை முகவர் கதிர்அறிவன் (அறிவன்), 52.

அணியின் தொடக்கத்தை முன்னிட்டு, ஜூலை 28ஆம் தேதி அவர் முதன்முதலாக ஆறு ஓவர் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்தார். 16 ஆட்டங்களில் தமிழர் கிரிக்கெட் அணி உட்பட எட்டு அணிகள் போட்டியிட்டன.

டெம்ப்சியில் உள்ள சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப்பின் கிரிக்கெட் திடலில் அப்போட்டி நடைபெற்றது.

ஓர் அணியில் குறைந்தது இரு வெளிநாட்டு ஊழியர்களும் 19 வயதுக்கு உட்பட்ட இரு விளையாட்டாளர்களும் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

“இளையர்களுக்கு இப்பொழுதே திறன்களைக் காண்பிக்க ஒரு தளத்தைக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறுவார்கள். வெளிநாட்டு ஊழியர்களையும் ஈடுபடுத்த விரும்பினேன். எனவே, இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டன,” என்றார் அறிவன்.

போட்டி நிறைவில் முதல் நிலையில் ‘யங் கன்ஸ்’, இரண்டாம் நிலையில் தமிழர் கிரிக்கெட் அணி, மூன்றாம் நிலையில் ‘கே-லைன் வாரியர்ஸ்’ ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. அவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல் இரு அணிகளுக்குப் பதக்கங்களும் கிடைத்தன.

விளையாட்டுத் தொடரின் தலைசிறந்த விளையாட்டாளருக்குத் திறன்பேசி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

ஆதரவாளர்களின் நிதியுதவியைத் தாண்டியும் இப்போட்டியை ஏற்பாடு செய்ய ஆயிரக்கணக்கில் செலவானாலும் தம் லட்சியத்தை அடைந்த மனநிறைவு தமக்குக் கிட்டியதாக அறிவன் குறிப்பிட்டார்.

“இந்த அணியைத் தொடங்கி, இப்போட்டியை ஏற்பாடு செய்வதே என் நெடுநாள் கனவு.

“கிரிக்கெட்டில் திறன்மிக்க தமிழர்களை அனைத்துலக மேடையில் வெளிக்காட்டும் பயணத்தில் இது வெறும் தொடக்கம்தான்,” என்றார் அவர்.

அடுத்தது சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தையும் தாம் குறிவைத்துள்ளதாகச் சொன்னார் அறிவன்.

குறிப்புச் சொற்கள்