லிட்டில் இந்தியாவின் அடையாளமாகத் திகழும் கோமள விலாஸ் உணவகத்தைப் பற்றி பவித்ரா சுகுமாரன் விவரிக்கப் பயன்படுத்தும் அழுத்தமான வார்த்தை ‘அசல் சுவை’.
1947ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த உணவகம் பவித்ராவுக்கு ஒரு சைவ உணவகம் மட்டுமன்று. இது, தலைமுறைகளை இணைக்கும் ஒரு பாலம்.
லிட்டில் இந்தியாவில் வளர்ந்த அவருடைய தந்தை, சிறு வயதுமுதல் அங்கு சாப்பிட்டு வந்தவர். இப்போது பவித்ரா, தம் இரண்டு மகன்களையும் இரு வாரங்களுக்கு ஒருமுறை அங்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
“என் மகன்களுக்கும் அங்குள்ள தோசை என்றால் அலாதிப் பிரியம். அங்கு கிடைக்கும் மைசூர் மசாலா தோசைமீது எனக்கு தனி ஈர்ப்பு உண்டு,” என்று தமிழ் முரசிடம் அவர் பகிர்ந்தார்.
ஆனால், உணவகத்திற்கு வெளியே நாள்தோறும் காணப்பட்ட நீண்ட வரிசை இப்போது மாயமாகிவிட்டது.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி ‘மறுசீரமைப்புப் பணி’களுக்காக மூடப்பட்டதிலிருந்து கோமள விலாஸ் உணவகம், ஒருவித மர்மமான அமைதியுடன் உறைந்து போயுள்ளது. அங்கு எவ்விதப் புதுப்பிப்புப் பணியோ சத்தமோ துளிகூட இல்லாதது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
“உணவகம் இன்னும் திறக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை,” என்று சொன்ன பவித்ரா, 41, இப்போது பசியாற மற்ற உணவகங்களுக்குச் செல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சிறுவயதில் தவக்காலத்தின்போது தந்தை தன்னையும் தன் தங்கையையும் இந்திய சைவ உணவைச் சாப்பிட அங்கு அழைத்துச் சென்ற நினைவுகளில் இருக்கும் லெஸ்லி ஆன்சன், 33, போன்றோரும் இந்தக் கவலையை ஆழமாக உணர்கிறார்கள்.
“என் சிறுவயது நினைவுகளின் ஒரு பகுதியை நான் இழந்துவிட்டதுபோல உணர்கிறேன்,” என்றார் அவர்.
தற்போது சிங்கப்பூருக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அடிக்கடிப் பயணம் செய்யும் ஆயிஷா இக்பால், தென்னிந்திய சைவ உணவுக்கு கோமள விலாஸ் இன்றும் ஒரு தரமான அளவுகோலாக இருப்பதாகக் கூறினார்.
இருப்பினும், இந்தத் திடீர் மூடல் என்பது பாரம்பரிய உணவு, பானத் தொழில்களைத் தொடர்ந்து நடத்துவதில் உள்ள சவால்களை வெளிக்காட்டலாம் என்றார் காந்தி உணவகத்தின் உரிமையாளர் கீர்த்தி ராஜேந்திரன், 40.
பாரம்பரிய சமையல் முறைகளைப் பின்பற்றும் அதே நேரத்தில், உணவின் விலையை மக்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் வைத்திருப்பதும் போராட்டமே என்றார் அவர்.
“ஒரு வணிக ரீதியான பார்வையில், கோமள விலாஸ் மூடல் தற்காலிகமானதாக மட்டுமே இருக்க வேண்டும்,” என்று கூறிய கீர்த்தி, லிட்டில் இந்தியாவின் மதிப்பைக் கூட்டுவதில் கோமள விலாசின் பங்கு அளப்பரியது என்றார்.
இருப்பினும், வேறு சிலரோ அங்குள்ள கட்டுக்கடங்காத கூட்டத்தால் கோமள விலாசுக்கு அடிக்கடிச் செல்வதில்லை என்றும் அது மூடப்பட்டிருப்பது அவ்வளவு பெரிய பாதிப்பைத் தங்களுக்கு ஏற்படுத்தவில்லை என்றும் கூறினர்.
“கூட்டம் அதிகமாக இருந்தால் என் பெற்றோர் வழக்கமாக அங்கு உட்கார்ந்து சாப்பிடாமல் உணவை வீட்டுக்கு வாங்கி வருவர்,” என்றார் தேவி விஜயன், 37.
மற்ற சிலர், தூய்மைக் குறைபாட்டைக் காரணம் காட்டி அங்கிருந்து ஒதுங்கியுள்ளனர்.
“உணவகம் தூய்மையை மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தும் என நம்புகிறேன்,” என்றார் அபிராமி செல்வகுரு, 29.
கோமள விலாசின் கதவுகள் மூடப்பட்டிருப்பது வெறும் ஓர் உணவகத்திற்குக் கிடைத்துள்ள இடைவேளை அல்ல; அது நம் முன்னோர்களின் நினைவுகளும் மணம் மாறாத நம் பழைய கலாசாரத்தின் ஒரு பகுதியும் மெல்ல மெல்ல நழுவிச் செல்வதை உணர்த்துகிறது.
நவீன மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், சிராங்கூன் சாலையின் அந்தப் பழக்கமான உணவு மணமும் வாடிக்கையாளர் கூட்டமும் மீண்டும் திரும்புமா என்பதே பலரது ஏக்கம் நிறைந்த கேள்வி.

