வாசகர் வட்ட ஆண்டுவிழாவில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மூவரின் நூல்கள் வெளியீடு கண்டன.
விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் ‘த பாட்’ அரங்கில் செப்டம்பர் 12ஆம் தேதி மாலை ‘வாசகர் வட்ட ஆண்டு விழா 2026’ நடைபெற்றது.
சித்ரா ரமேஷின் புதினமான ‘உத்தராயணம்’, ஷாநவாசின் உணவு குறித்த அல்புனைவான ‘ருசி பேதம்’, மஹேஷ் குமாரின் மூன்றாவது கவிதை மொழிபெயர்ப்பு நூலான ‘அடையாளங்களுக்கு அப்பால்’ ஆகிய நூல்கள் அந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.
திருவாட்டி பர்வதவர்த்தினி, திரு தமிழ் ஐயப்பன், திரு சிவானந்தம் நீலகண்டன் ஆகியோர் முறையே அந்நூல்களை அறிமுகம் செய்தனர்.
இம்மூன்று நூல்களையும் பதிப்பித்த ‘யாவரும் பதிப்பகம்’ ஜீவகரிகாலன் ஒரு பதிப்பாளராகத் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நடிகர், திரைக்கதை அமைப்பாளர், மேடைநாடகக் கலைஞர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவரான திரு இளங்கோ குமரவேல் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தமது கலைப்பயணம் குறித்துச் சுவாரசியமான பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். பார்வையாளர்களுடனான ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது.
பல தலைமுறைகளாக வாசிக்கப்பட்டுவரும் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புதினத்தை நான்கு மணிநேரத் திரைப்படமாக்க திரைக்கதை அமைத்ததில் சந்தித்த சவால்களையும் அந்தச் சிறப்பான அனுபவம் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.
நிகழ்ச்சியில் 1985வாக்கில் சிறு இலக்கியப் பகிர்வுக் குழுவாகத் தொடங்கியதுமுதல் இதுநாள் வரையிலான வாசகர் வட்டத்தின் நெடும்பயணத்தை விளக்கும் காணொளி காட்டப்பட்டது.
இடையிடையே நிகழ்ந்த ‘கல்பவிருக்ஷா நடனப்பள்ளி’ மாணவியரின் நடனங்களும் ‘நட்சத்திரா இசைப்பள்ளி’ மாணவமணிகளின் பாடல்களும் விழாவிற்குச் சிறப்பு சேர்த்தன.
