காமாட்சி சந்திரசேகர்
வகைவகையான, சுவையான தின்பண்டங்களை உற்றார் உறவினர், நண்பர்கள், அண்டைவீட்டினர் எனப் பலர்க்கும் கொடுத்து, பகிர்ந்துண்டு, இன்பத்தை இரட்டிப்பாக்கும் தித்திப்பான திருநாளே தீபாவளி.
முறுக்கு, அதிரசம், லட்டு எனப் பாரம்பரியத் தின்பண்டங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம்பெற்றுவிடும்.
இந்நிலையில், காலமாற்றத்திற்கு ஏற்ப கொண்டாட்ட முறைகளும் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றாற்போல் மாறிவருகின்றன. அவ்வகையில், ஒவ்வோர் ஆண்டும் புதுப்புதுத் தின்பண்டங்களும் தலைகாட்டத் தவறுவதில்லை. ‘குனாஃபா பிரவுனி’, ‘ரெட் வெல்வெட் குக்கீ’ என்ற புதுமையான தின்பண்டங்கள் மட்டுமின்றி, ‘ரசமலாய் வெண்ணெய் குக்கீ’, ‘சாக்லெட் லட்டு’ என்ற புதுப்பொலிவு பெற்ற தின்பண்டங்களும் இன்று பண்டிகை விருந்துகளில் பரிமாறப்படுகின்றன.
பட்டியலிட்டால் நீளும் பலகார வகைகளுடன் அவற்றை விற்கும் கடைகளின் எண்ணிக்கையும் கூடிவருகிறது. போதாக்குறைக்கு, இப்போது இணையவழித் தின்பண்டம் விற்கும் கடைகளும் பெருகிவிட்டன.
பாரம்பரியம் வேரூன்றி இருக்கக் காரணமான பெரியோர், புதுமையை எதிர்பார்க்கும் இளையர் - இதனால் பலகார வணிகமும் மாறிவருகிறது.
பாரம்பரியமும் புதுமையும்
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக பலவகைத் தின்பண்டங்களை விற்கும் நிறுவனங்களில் ஒன்று அஜ்மீர்.
“பலகார வணிகத்தில் அதிகரித்துவரும் போட்டியைச் சமாளிக்க, ஒண்டே ஒண்டே, திராமிசு குக்கீ, கப்புச்சீனோ லாட்டே குக்கீகள் போன்ற புதுவகைத் தின்பண்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இருப்பினும், பெரும்பாலோர் பாரம்பரியப் பலகாரங்களையே விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மக்களிடையே அவற்றுக்கான மதிப்பு குறையவில்லை,” என்றார் அஜ்மீர் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை நிறுவனரான திரு முகமது சபுருதீன், 30.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வீட்டிலிருந்தே தின்பண்ட வணிகம் செய்துவருகிறார் திருவாட்டி ஆயிஷா நஸ்ரின், 25. ‘ரீன் பேக்ஸ்’ என்ற அவரது இணையவழிக் கடையில் ‘குனாஃபா குக்கீ’, ‘நட்டெல்லா டார்ட்ஸ்’, ‘ரசமலாய் பட்டர் குக்கீ’ போன்ற புதுமையான தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன.
“பாரம்பரியப் பலகாரங்களைவிட நான் விற்கும் இதுபோன்ற தனித்துவமான பலகாரங்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. பாரம்பரியத் தின்பண்டங்களுக்குப் புதுப்பொலிவு கொடுத்து விற்கும்போது எல்லா வயதினரும் அவற்றை விரும்புகின்றனர்,” என்றார் திருவாட்டி ஆயிஷா.
பாட்டி தொடங்கிவைத்த பாரம்பரியப் பலகார வணிகத்திற்குப் புத்துயிரூட்டி, ‘சட்னி பேக்ஸ்’ என்ற கடையை நடத்திவருகின்றனர் திருவாட்டி ராஜலட்சுமி இளங்கோவும் அவரது இரண்டு சகோதரிகளும். தீபாவளியின்போது மட்டுமே அவர்கள் அவ்வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
“பல்லாண்டுகாலமாக நாங்கள் முறுக்கு, ‘சுஜி’ போன்ற பலகாரங்களை விற்று வருகிறோம். இருப்பினும், இவ்வாண்டுத் தீபாவளிக் காலத்தில் நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்திய பலகாரங்களையே விற்றிருக்கிறோம். அவற்றையே மக்கள் விரும்பி வாங்குகின்றனர்,” என்றார் திருவாட்டி ராஜலட்சுமி.
இருவகைக்கும் வரவேற்பு
மக்களின் விருப்பங்கள் மாறிவந்தாலும் இருவகைத் தின்பண்டங்களுக்கும் வரவேற்பு இருக்கிறது.
“புதிது புதிதாகத் தின்பண்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனாலும், பாரம்பரியப் பலகாரங்களை தீபாவளியின்போது மட்டுமே சுவைக்க முடிகிறது. அவையே கொண்டாட்டத்திற்கும் அழகுசேர்க்கின்றன,” என்கிறார் திருவாட்டி விஷ்ணுபிரியா.
“நான் பாரம்பரியப் பலகாரங்களையும் விரும்புகிறேன், புதுவகைப் பலகாரங்களையும் சுவைத்துப் பார்க்க ஆர்வம் கொள்கிறேன். புதுவகைப் பலகாரங்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் அவற்றின் தனித்துவத்திற்கு ஏற்றதாகவே இருப்பதாக நினைக்கிறேன்,” என்று திருவாட்டி காயத்ரி தமிழ்ச்செல்வம் கூறினார்.
“என குழந்தைகள் பெரும்பாலும் புதுவகைத் தின்பண்டங்களைச் சுவைத்துப் பார்ப்பதில் நாட்டம் கொள்கின்றனர். ஆனால் எனக்கோ, என் தாத்தா-பாட்டி சுவைத்த பாரம்பரியப் பலகாரங்களையே சுவைப்பதில் விருப்பம். அவற்றை நான் வீட்டிலேயே செய்து பண்டிகையைக் கொண்டாடுவேன்,” என்றார் திருவாட்டி செந்தாமரை சுப்பிரமணியம்.
