வழக்கமாகத் தமது பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர், அவரது நிறுத்தத்தில் இறங்காததை ‘டவர் டிரான்சிட்’ பேருந்துச் சேவை எண் 143ஐ ஓட்டும் சண்முகம் ராமசாமி, 39, கவனித்துவிட்டார்.
பயணியிடம் இதுகுறித்து சொல்லலாம் என்று சென்றவர், அந்த பயணி சுயநினைவின்றி காணப்பட்டதைப் பார்த்துவிட்டார். இன்னொரு பயணியின் உதவியுடன் சண்முகம் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளித்து பேருந்து செயல்பாடுகள் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
“பேருந்தை ஓட்டுவது மட்டும் என் பணி அல்ல. பேருந்தில் பயணம் செய்பவரின் நலனில் அக்கறை கொள்வதும் என் பொறுப்பாகும்,” என்று கூறினார் 9 ஆண்டுகள் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் திரு சண்முகம்.
தமது உதவி செய்யும் மனப்பான்மைக்கு நவம்பர் 27ஆம் தேதி கேப்பிட்டல் திரையரங்கில் நடைபெற்ற ‘போக்குவரத்துத் துறை தங்க விருது’ நிகழ்ச்சியில், திரு சண்முகம் உன்னதச் சேவை விருது பெற்றார்.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 25வது முறையாக நடைபெறும் இந்த விருது நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முன்மாதிரியாக விளங்கும் 1,384 போக்குவரத்துத் துறை ஊழியர்களை கௌரவித்தார்.
மேலும், திரு சண்முகம் உட்பட 37 ஊழியர்களுக்கு உன்னத சேவை விருது வழங்கினார்.
“நேர்மையான போக்குவரத்து ஊழியர்களை கொண்டாடுவதோடு நம் பணி அத்துடன் முடிந்துவிடாது. இது தொடரும் ஒரு சமுதாயப் பணியாகும். இதில் எல்லோருக்கும் பங்குண்டு,” என்று வலியுறுத்தினார் அமைச்சர் சீ.
ஆண்டுக்காண்டு இந்த நிகழ்ச்சியில் விருது பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் 638 விருதுகளும் 2023ஆம் ஆண்டில் 1008 விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் கூடுதலாக 10 ஊழியர்களுக்கு உன்னதச் சேவை விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
உன்னதச் சேவை விருது பெற்ற இன்னொருவர் ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ பேருந்து ஓட்டுநராக பத்தாண்டுகள் பணிபுரியும் காளிதாஸ் ராகவன், 44.
தீவு விரைவுச்சாலையில் ஒருமுறை பேருந்து ஓட்டிச்சென்ற அவர், தலையில் ரத்த காயத்துடன் தள்ளாடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைக் கண்டார். நிலைமையின் அவசரத்தை உணர்ந்த திரு காளிதாஸ், உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து பேருந்து செயல்பாடுகள் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
இரக்க குணம், துரிதமாகச் சிந்திக்கும் ஆற்றலுக்காகப் பாராட்டு பெற்ற திரு காளிதாஸ், மக்களுக்கு உதவும் மனப்பான்மை மிக முக்கியம் என்றார்.
“என் பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொருவரையும் என் குடும்பத்தில் ஒருவராகக் கருதுகிறேன்,” என்று புன்னகைத்தார் திரு காளிதாஸ்.

