தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடிய இரு விழாக்கள்

2 mins read
d9c1713f-2932-4069-9663-256595d768c5
இந்தியக் கலாசாரத் திருவிழாவின் ஓர் அங்கமாக 11 இந்திய அமைப்புகள் நடன நிகழ்ச்சிகளைப் படைத்தன. - படம்: லி‌‌‌ஷா

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினம் இவ்வாண்டு கொண்டாடப்படும் வேளையில், நம் முன்னோடிகளின் கடின உழைப்பைப் போற்ற வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற இந்தியக் கலாசாரத் திருவிழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தினார்.

“அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற சிங்கப்பூரை மேலும் வலுப்படுத்தி, மேம்படுத்த நாம் உறுதிபூண வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சித்திரைப் புத்தாண்டை வரவேற்கவும், சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையை கொண்டாடவும், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இரு நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த இந்தியக் கலாசாரத் திருவிழா, கடந்த வார இறுதியில் பிஜிபி மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது.

இந்தியக் கலாசாரத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார்.
இந்தியக் கலாசாரத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டார். - படம்: லி‌‌‌ஷா

வங்காளிகள், குஜராத்தியர், கன்னடர் உள்ளிட்ட 15 இந்திய சமூகங்களைப் பற்றிய கண்காட்சிகளும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றன.

இக்கண்காட்சிகளைச் சுற்றிப்பார்த்த துணைப் பிரதமர் ஹெங் அவற்றின் வண்ணமயமான தன்மையையும் இந்திய இளையர்களின் ஈடுபாட்டையும் பாராட்டினார்.

இவருடன் மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெனிஸ் புவா, கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டுடன் மேயர் டெனிஸ் புவா, துணை அமைச்சர் ஆல்வின் டான், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டுடன் மேயர் டெனிஸ் புவா, துணை அமைச்சர் ஆல்வின் டான், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: லி‌‌‌ஷா

“இக்கண்காட்சி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இது நமது எஸ்ஜி60 பயணத்தில் ஒரு முக்கியமான அங்கமாகும்,” என்றார் துணைப் பிரதமர் ஹெங்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, 11 இந்திய அமைப்புகள் நடன நிகழ்ச்சிகளைப் படைத்தன. இதில் பங்கேற்ற இளையர்கள் தங்கள் கலாசார நடனங்களை மேடையில் திறம்பட வெளிப்படுத்தியதை பாராட்டிய துணைப் பிரதமர், “சமூக ஒற்றுமையை வளப்படுத்தும் பணியில் நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கலாம்,” என்று சொன்னார்.

லி‌‌‌ஷாவின் கலாசாரக் கொண்டாட்டங்கள், ஏப்ரல் 12 (சனிக்கிழமை) நடைபெற்ற சித்திரைக் கலைவிழாவுடன் ஒரு நாள் முன்னதாகவே தொடங்கின.

சித்திரைக் கலைவிழாவில் சிறப்பு விருந்தினராகச் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை கலந்துகொண்டார்.
சித்திரைக் கலைவிழாவில் சிறப்பு விருந்தினராகச் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை கலந்துகொண்டார். - படம்: லி‌‌‌ஷா

இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் கருப்பொருளான ‘இளமை’யுடன் ஒத்துப்போகும் வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, தலைமைத்துவத் துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய இளையர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

சாதனை படைத்துள்ள 60 இளையர்களைச் சிறப்பிக்கும் பதாகைகளை லிஷா தற்போது சிராங்கூன் சாலை நெடுகிலும் வைத்துள்ளது.

அந்த அறுபது இளையர்களை சிறப்பித்துப் பாராட்டுவதற்காக அவர்களின் சாதனைகளை லிஷா ஒரு நூலாகத் தொகுத்து விழாவில் வெளியிட்ட தருணம் முத்தாய்ப்பாக அமைந்தது. அந்நூலின் முதல் பதிப்பு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளையிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாகத் தமிழ்மொழிக்காக அரிய தொண்டாற்றிய சிங்கப்பூரின் மூத்த கவிஞர் க. து. மு. இக்பாலுக்குப் பொன்னாடை போர்த்தி, லிஷா தமிழ்ப்பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

தமிழ்மொழிக்காக அரிய தொண்டாற்றிய சிங்கப்பூரின் மூத்த கவிஞர் க. து. மு. இக்பாலுக்கு லிஷா தமிழ்ப்பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
தமிழ்மொழிக்காக அரிய தொண்டாற்றிய சிங்கப்பூரின் மூத்த கவிஞர் க. து. மு. இக்பாலுக்கு லிஷா தமிழ்ப்பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது. - படம்: லி‌‌‌ஷா

அதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசைக்கவி திரு ரமணனும் திருவாட்டி பாரதி பாஸ்கரும் தமிழ்த் திரைப்படப் பாடல்களின்வழி தமிழ் இலக்கியம் பற்றிச் சொற்பொழிவாற்றினர்.

இசைக்கவி திரு ரமணனும் திருவாட்டி பாரதி பாஸ்கரும் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினர்.
இசைக்கவி திரு ரமணனும் திருவாட்டி பாரதி பாஸ்கரும் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினர். - படம்: லி‌‌‌ஷா
குறிப்புச் சொற்கள்