டன்யர்ன் குளோஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்து $684,800 மதிப்புள்ள நகைகள், கைக்கடிகாரங்கள், பணம் ஆகியவற்றைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவர் புதன்கிழமை (மே 14) விசாரணைகளுக்காகக் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 51 வயது ஹெக்டர் டேனியல் கார்சியா இக்லேஸியஸும் மெக்சிகோ, கொலம்பியா நாடுகளின் குடியுரிமை பெற்ற 48 வயது மட்டயோ ஆண்ட்ரெஸ் கர்ஸஸ் முரில்லோவும் புக்கிட் தீமாவில் அமைந்துள்ள அவ்வீட்டிற்குப் பிற்பகல் 1.45 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சந்தேகத்துக்குரிய மூன்றாமவரான ஸ்பெயின், கொலம்பியா நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள 60 வயது ஹெர்னாண்டோ கிரால்டோ பிராங்கோ இக்குற்றத்தில் தொடர்புடைய கார் இருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்திலிருந்து வெள்ளை டீ-சட்டை, நீலக் காற்சட்டை அணிந்து, கால்களிலும் கைகளிலும் விலங்கு மாட்டியபடி முதலில் இறங்கினார் ஹெக்டர்.
நீல முகக்கவசம் அணிந்திருந்த அவர் வீட்டின் வெளியே சில நிமிடங்கள் ஸ்பானிய மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் காவல்துறையினருடன் பேசினார்.
அதன் பின்பு வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஏறக்குறைய 15 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் காவல்துறை வாகனத்திற்குத் திரும்பினார்.
பின்னர், மேடியோ வாகனத்திலிருந்து இறங்கி, காவல்துறையினருடன் பேசினார். அதன் பின்னர், வீட்டிற்குள் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
காவலாளிகள் வீட்டின் வெளியே கேள்விகள் கேட்கையில், இருவரும் வீட்டின் வலப்புறம் சாலையின் தொடக்கத்தில் அமைந்திருந்த குன்றைச் சுட்டிக்காட்டிப் பதிலளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இருவரும் பிற்பகல் 2.30 மணியளவில் குற்றம் நடந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த மூன்று ஆடவர்களும் அவ்வட்டாரத்தில் வேறு இரண்டு வீடுகளிலும் புகுந்து திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குளூனி பார்க் வட்டார வீடு ஒன்றில் மே 9ஆம் தேதி இரவு 11 மணியளவிலும் எங் நியோ அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் மே 10ஆம் தேதி இரவு 10 மணியளவிலும் அவர்கள் திருடியதாகக் கூறப்பட்டது.
அவர்கள் மே 9ஆம் தேதி இரவு 9.55 மணியளவில் டன்யர்ன் குளோசில் அமைந்துள்ள வீட்டின் சாளரம் வழியாகப் புகுந்து $421,300 மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் கொள்ளையடித்தவற்றுள் ஒரு கார்டியர் கைக்கடிகாரம் உட்பட $80,000 மதிப்புள்ள 7 சொகுசுக் கைக்கடிகாரங்கள், $11,500 மதிப்புள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பணக்கட்டுகள் ஆகியவையும் அடங்கும்.
காவல்துறைக் கண்காணிப்பு கேமரா பதிவுகள், விசாரணைகள் மூலம் இம்மூவரைக் கண்டறிந்த காவல்துறை, அவர்களை மே 11ஆம் தேதி கைது செய்தது.
இம்மூவரும் சமூக வருகை அனுமதி வழி கடந்த இரு வாரங்களில்தான் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்தது.
ஒரு கார், வட்ட மின்ரம்பம், நகை வகைகள், $18,000த்திற்குமேல் மதிப்புள்ள வெவ்வேறு நாட்டுப் பணக்கட்டுகள் ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
இவர்கள் மற்ற குற்றங்களைப் புரிந்திருக்க வாய்ப்புள்ள நிலையில் பெரிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிசெய்ய எவ்வித ஆதாரமும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.
இம்மூவரும் மே 19ஆம் தேதி விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுச் சிறையும் அபராதமும் விதிக்கப்படும்.

