உலகக் கிண்ணப் போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் பலருக்கும் காற்பந்து மோகம் கலைந்திருக்கலாம்.
ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த இளையர் இருவரின் காற்பந்துப் பயணமும் கனவும் தொடர்கின்றன.
சிங்கப்பூரிலிருந்து போர்ச்சுகல்வரை
தமது காற்பந்துக் கனவைத் தற்போது போர்ச்சுகலின் போர்ட்டோ நகரில் துரத்தி வருகிறார் 16 வயது கிரிஷவ் ராம் தமிழ் செல்வன்.
அவருக்குள் விளையாட்டின்மீதான வேட்கையையும் கனவையும் விதைத்தார் அவரது தந்தையார் தமிழ் செல்வன் கோவிந்தராஜு.
“கிரிஷவுக்கு ஏழு வயது இருக்கும்போது அவரது திறமையை நான் உணர்ந்தேன்,” என்று திரு தமிழ் செல்வன் கூறினார்.
அக்கட்டத்தில் விளையாட்டின் நுணுக்கங்களில் கிரிஷவ் சிறந்து விளங்கவில்லையெனிலும் அவருக்கு ஆட்டத்தின்மீதான புரிதல் பிற சிறுவர்களைவிட அதிகமாக இருந்ததெனத் திரு தமிழ் செல்வன் பகிர்ந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, கிரிஷவின் எட்டாம் வயதில் ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெற்ற அயாக்ஸ் குழுவின் இளையர் முகாமுக்குக் அவரை அழைத்து சென்ற அவரது பெற்றோருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
முகாமில் நடந்த ‘ஒன் வி ஒன்’ ஒற்றையர் போட்டியில் 12 வயதுவரையிலான போட்டியாளர்களைக் கிரிஷவ் வீழ்த்தி போட்டியில் வெற்றிபெற்றார்.
“அக்கட்டத்தில் எனக்கு உடல் வலிமை குறைவு என்பதால், வேகம், நிதானம் ஆகிய பிற உத்திகளைப் பயன்படுத்தினேன்,” என்றார் கிரிஷவ்.
பல இளைய விளையாட்டாளர்களிடம் இல்லாத விளையாட்டுத் திறன்களைக் கிரிஷவ் கொண்டிருந்ததாக உணர்ந்த அவரது பெற்றோர், அவரது காற்பந்துப் பயணத்திற்கு ஆதரவளிக்க முடிவெடுத்தனர்.
அதன்பின் சிங்கப்பூர் இளையர் காற்பந்து வட்டாரத்தில் தமக்கென பெயர்பதித்த கிரிஷவ், காற்பந்தாட்டத்தின் உயரிய நிலையில் தடம்பதிக்க தமது 12ஆம் வயதில் ஐரோப்பா செல்ல விரும்பினார்.
ஆனால், அவரது கனவுக்குக் கொவிட்-19 தடைக்கல்லாக நின்றது. அவ்வேளையில் தம் திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் நோக்கில் லயன் சிட்டி செய்லர்ஸ் இளையர் குழுவிற்காக அவர் விளையாடினார்.
கொவிட்-19 நெருக்கடி கடந்தபின்னர், கனவு மீண்டும் தலைதூக்கியது. அதை நிறைவேற்ற குடும்பம் முழுவதும் போர்ச்சுகலுக்கு இடம்பெயர்ந்தனர்.
அரசாங்க ஊழியர்களான கிரிஷவின் பெற்றோர்கள் தங்கள் பணிகளைத் துறந்தும் அவரின் இரு சகோதரர்கள் சிங்கப்பூர் வாழ்க்கையை மறந்தும் அவருடன் சென்றனர்.
14 வயதில் அங்குப் புதிய வாழக்கையைத் தொடங்கிய கிரிஷவுக்குத் தொடக்கம் கோணலாகவே இருந்தது.
ஓராண்டு காலம் சல்குயிரோஸ் காற்பந்துக் குழுவின் இளையர் பிரிவில் கிரிஷவின் ஆட்டம் மேம்படவில்லை என அவரது தந்தையார் கூறினார்.
அதைத் தொடர்ந்து, காற்பந்துப் பருவத்தின் நடுவே லேய்ஷோஸ் இளையர் குழுவிற்குக் கிரிஷவ் விளையாடிய தொடங்கிய பின்னர் அவரது ஆட்டம் மீண்டும் மேல்நோக்கி நகர்ந்ததென திரு தமிழ் செல்வன் பகிர்ந்துகொண்டார்.
கிரிஷவிற்கு முதல் கோணலாக இருந்தாலும் முற்றிலும் கோணலாக அமையவில்லை.
வரும் காற்பந்துப் பருவத்தில் கிரிஷவ் போர்ச்சுகலின் இளையர்களுக்கான தேசிய லீக் போட்டியில் லேய்ஷோஸ் அணி சார்பில் விளையாடவுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தின் பயணம் கரடுமுரடான பாதையைக் கடந்து வந்ததாக கிரிஷவின் தாயார் தர்ஷினி ராதா கிருஷ்ணன் கூறினார்.
“பல்வேறு நிதி நெருக்கடிகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டுதான் கிரிஷவின் கனவை நாங்கள் ஆதரித்து வருகிறோம்,” என்றார் அவர்.
கிரிஷவின் தங்கைக்குப் போர்ச்சுகலில் கல்வி கற்பது நல்ல அனுபவமாக அமையவில்லை. அதனால், தாயார், தங்கை, தம்பி, ஆகிய மூவரும் மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பிவிட்டனர்.
கனவை நனவாக்க கிரிஷவும் அவரது தந்தையும் தொடர்ந்து போர்ச்சுகலில் தங்கியுள்ளனர்.
எதிர்வரும் சில ஆண்டுகளில் சிறந்த ஐரோப்பிய காற்பந்துக் குழு ஒன்றிலிருந்து தொழில்முறை ஒப்பந்தம் பெறுவதே கிரிஷவின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது.
உருவம் சிறிது, கனவு பெரிது
கிரிஷவ் போர்ச்சுகலில் தமது கனவைத் துரத்தி வரும் வேளையில், சிங்கப்பூரில் தமது கனவை நனவாக்க முயன்று வருகிறார் ஜெயகணேஷ் கிருஷ்ணா, 12.
“என் குடும்பத்தினர் அனைவரும் காற்பந்து ரசிகர்களாக இருப்பதால், எனக்கும் சிறு வயது முதலே காற்பந்துமீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டது,” என்று அவர் கூறினார்.
பிரின்சஸ் எலிசபெத் தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவரும் அவரது திறமையை முதலில் கண்டறிந்தது அவரது தந்தையார் ரா. ஜெயகணேஷ்.
இளைய காற்பந்து வீரர்கள் பலர் பந்தை மட்டுமே பார்த்து விளையாடும் வேளையில், கிருஷ்ணா திடல் முழுவதையும் பார்த்து விளையாடியது தமக்கு வியப்பளித்ததாகத் திரு ஜெயகணேஷ் கூறினார்.
‘ஆக்டிவ் எஸ்ஜி’ காற்பந்து முகாம்களில் தொடங்கிய கிருஷ்ணாவின் பயணம், பின்பு 2023ல் பார்சலோனா காற்பந்துப் பள்ளியில் தொடர்ந்தது.
அக்குழுவுடன் சிறப்பாக விளையாடியதால் 2024ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற பார்சலோனா காற்பந்து பள்ளிகளுக்கான உலக கிண்ண போட்டியில் சிங்கப்பூரின் பள்ளியைப் பிரதிநிதித்து விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.
போட்டியிலிருந்து திரும்பிய பின்னர், 2024ன் பிற்பகுதியில் அவர் லயன் சிட்டி சைலர்ஸ் இளையர் குழுவில் இணைந்தார்.
தமது திறமையை வளர்த்துக்கொள்ள அவர் சென்ற ஆண்டு போர்ட்டோவின் சல்குயிரோஸ் இளையர் குழுவுடன் இணைந்து 10 நாள்கள் பயிற்சிபெற்றார்.
“முதல்முறை ஸ்பெயினிற்குச் சென்றபோது சற்று கடினமாக இருந்தது. குளிரான நாடு என்பதால் அந்தக் காலநிலையுடன் ஒத்துப் போக நேரம் எடுத்தது. ஆனால், அதற்குப்பின் போர்ச்சுகலில் விளையாடுவது எளிதாக இருந்தது,” என்று கிருஷ்ணா கூறினார்.
அவர் தமது பள்ளி காற்பந்து அணியிலும் திறம்பட விளையாடி வருகிறார்.
சென்ற ஆண்டு பள்ளிக் காற்பந்து அணியின் தலைவராகக் குழுவைச் சிறப்பாக வழிநடத்திய அவருக்குத் தேசியப் பள்ளி விளையாட்டுகளுக்கான சிறந்த விளையாட்டு நல்லுணர்வு (Sportsmanship) விருது வழங்கப்பட்டது.
காற்பந்துப் பயணத்தை ஆதரிக்கும் தாயார் கல்வியிலும் கவனம் முக்கியம் என்பதைக் கிருஷ்ணாவிற்கு வலியுறுத்துகிறார்.
“அவர் காற்பந்து சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியளித்தாலும், கல்வியிலும் அவரது கவனம் சிதறாமல் இருக்க நாங்கள் உதவி வருகிறோம்,” என்றார் திருவாட்டி பூ. கார்த்திகாயினி.
விளையாட்டில் சாதிக்கும் வேட்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம் கல்வியின் முக்கியத்துவத்தையும் அவர் நன்கு உணர்ந்துள்ளார்.
“காற்பந்துப் பயணம் நிலையற்றது. கல்வியில் சிறந்து விளங்கினால், காற்பந்து கனவு சிதறினாலும், வாழ்க்கைப் பயணம் சீராகத் தொடரும்,” என்றார் அவர்.
எதிர்காலத்தில் தொழில்முறைக் காற்பந்து வீரராரும் கனவை நோக்கி ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் கிருஷ்ணா.

