இலங்கைக்கு உதவ ஒன்றிணைந்த சிங்கப்பூர் நடனக் கலைஞர்கள்

இலங்கைக்கு உதவ ஒன்றிணைந்த சிங்கப்பூர் நடனக் கலைஞர்கள்

3 mins read
f07de6a9-cd9a-45b2-a543-14ad4ab7fd96
தங்கள் நடனக் குழுவைப் பிரதிநிதித்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் வில்லியத்திடமிருந்து சான்றிதழ் பெற்ற நடனமணிகள். - படம்: லிஜேஷ் கருணாகரன் 

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் வீசிய ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளமும் நிலச்சரிவுகளும் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தின. 

அந்த இயற்கைச் சீற்றத்தினால் 646 பேர் உயிரிழந்தனர்; ஏறக்குறைய 2.35 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர்; 114,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

இந்த இக்கட்டான சூழலில், இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு உதவும் வகையில், சிங்கப்பூரில் உள்ள ‘இலங்கையின் நண்பர்கள்’ குழுவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து ‘ஒற்றுமையின் நடனங்கள்’ (Dances of Unity) என்ற கலைநிகழ்ச்சிவழி நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டன.

இந்தச் சிறப்புத் தொண்டு நிகழ்ச்சி, மார்ச் 5 வியாழக்கிழமை இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது. 

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குச் சென்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் முன்னாள் தூதர் கே. கேசவபாணியின் வழிகாட்டலில், அப்சராஸ் நடன நிறுவனமும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து இந்தச் சீரிய முயற்சியை மேற்கொண்டன. 

இந்த நிகழ்விற்கு சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம், மகா கருணா பௌத்த சங்கம், சிங்கப்பூர் சிங்கள பௌத்த சங்கம் ஆகியவை ஆதரவளித்தன.

இலங்கையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுவரும் மனிதநேயப் பணிகளுக்காக பொதுமக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்த நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் சேனரத் திசாநாயக்க, திரு கேசவபாணி, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் வில்லியம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

$25, $40 மற்றும் $100 விலையிலான அனுமதிச்சீட்டுகளை கிவிங்.எஸ்ஜி இணையத்தளம் வழியாகப் பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்குப் பார்வையாளர்கள் உதவினர். 50,000 வெள்ளி நன்கொடை திரட்ட இலக்கு வகுக்கப்பட்டது. 

அப்சராஸ் நடன நிறுவனம், பாஸ்கர்ஸ் கலைக்கழகம், ஈரா நடன நாடக சபா, ஓம்கார் கலைக்கூடம், ரே சின் ஓப்பரா சங்கம், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், சுயம்பு கலைக்கூடம், தத்வா புரொடக்‌ஷன்ஸ், கலைக்கோவில் ஆகிய ஒன்பது நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் தங்களது பங்களிப்பை வழங்கின. கிட்டத்தட்ட 90 கலைஞர்கள் 14 நடனங்களைப் படைத்தனர். 

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அப்சராஸ் நடனக் கலையகத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அப்சராஸ் நடனக் கலையகத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி. - படம்:  லிஜேஷ் கருணாகரன் 

சன்மானமின்றிப் பங்களிப்பு

“இந்த நிகழ்ச்சியின்மூலம் திரட்டப்படும் ஒவ்வொரு வெள்ளியும் துயர்துடைப்பு நிதிக்குச் செல்லவேண்டும் என்பதால் நாங்கள் அழைத்த ஒன்பது அமைப்புகளும் எந்தவித சன்மானமும் இன்றி தங்கள் பங்கை ஆற்றின,” என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அப்சராஸ் நடனக் கலையகத்தின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி கூறினார்.

நிகழ்ச்சியில் நடனமாடிய ‘தத்வா’ தயாரிப்பின் கலைஞர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 

மேடையில் கதக் நடனமாடும் நட்டாஷா தேஜுஜா.
மேடையில் கதக் நடனமாடும் நட்டாஷா தேஜுஜா. - படம்: லிஜேஷ் கருணாகரன் 

“இந்தக் கலைநிகழ்ச்சி கலைஞர்களின் அர்ப்பணிப்பால் சிறந்து விளங்கியது. பணிபுரியும் பெரியவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரும் தங்கள் நெருக்கடியான நேரத்திற்கு இடையிலும், பயிற்சியில் காட்டிய கட்டொழுங்கும் ஆர்வமும் என்னை நெகிழச் செய்தது,” என்றார் ‘தத்வா’ நிறுவனரும் ‘கதக்’ நடனக் கலைஞருமான நடாஷா தேஜுஜா.


மேடையில் கதக் நடனமாடும் சீமா புரோகித்.
மேடையில் கதக் நடனமாடும் சீமா புரோகித். - படம்: லிஜேஷ் கருணாகரன் 

‘தத்வா’  நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு கலைஞரான சீமா புரோகித், “பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடன் இந்திய செவ்வியல் நடனத்தைப் பகிர்ந்துகொள்வது மிகவும் சிறப்பான ஒன்றாக உணர்கிறேன். எனவே, கதக் நடனத்தின் சாரத்தையும், இந்தியக் கதை சொல்லும் மரபையும் ரசிகர்களிடம் கொண்டுசேர்க்க நான் முயல்கிறேன்,” என்று சொன்னார்.


சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தைச் (சிஃபாஸ்) சேர்ந்த  நடனமணிகள்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தைச் (சிஃபாஸ்) சேர்ந்த  நடனமணிகள். - படம்: லிஜேஷ் கருணாகரன் 

“‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய திரட்டப்படும் நிதிக்காகப் பல நடனப் பள்ளிகள் ஒன்றிணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கலையை ஒரு உன்னதமான நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது மிகவும் பெருமையாக உள்ளது,” என்று சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழக (சிஃபாஸ்) நடனமணி இசபெல் ஜோஷி, 18, கூறினார்.

இன்னொரு ‘சிஃபாஸ்’ நடனமணியான கோபிக்கா, 24, “எங்களைப் போன்ற நடனக் கலைஞர்கள் தங்கள் திறமையை ஒரு நல்ல நோக்கத்திற்காகப் பயன்படுத்த இது ஒரு சிறந்த தளமாகும். நமக்காக மட்டுமன்றி, மற்றவர்களுக்கு உதவும் ஒரு நல்ல முயற்சிக்காகவும் திறமையை வெளிப்படுத்துவது ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்