கானல் நீரென முடியும் வாழ்க்கை நெடுக கண்ணீர் வந்தாலும் சிரிப்புடன் எதிர்கொள்ளும் துணிவு தீப்பொறி போன்றது. பண்புள்ளோரின் கண்களே அந்தத் தீப்பொறிகளை ஏந்தும் அகல்விளக்குகள் என்பதைத் திருவாட்டி ஜஸ்மீத் கோர் போன்றோரிடம் காண முடிகிறது.
கம்பீரமாகவும் கலகலப்பாகவும் பேசக்கூடிய இவர், பல்லாண்டுகால அனுபவமுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியை.
திருவாட்டி கோருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் உறுதிசெய்தனர். அதனால், கூடிய விரைவில் தமது வாழ்க்கைமுறையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
“ஒரே வாரத்தில் நான் பணியை நிறுத்த வேண்டியதாயிற்று; வாழ்க்கையைப் புதிய கோணத்தில் அணுக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
“எனது முதலாவது வேதிச்சிகிச்சை (Chemotherapy) முறை முடியும் வரை எதையும் சிந்தித்து உள்வாங்கிக்கொள்ள எனக்கு நேரமே கிடைக்கவில்லை. அனைத்தும் அவ்வளவு அவசரமாக நடந்தன,” என்று திருவாட்டி கோர் நினைவுகூர்ந்தார்.
இருப்பினும், தீபாவளித் திருநாளைக் கொண்டாட இவர் உற்சாகமாகத் தயாராகி வருகிறார். குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் சிரித்துப் பேசிக்கொண்டும் பகடி செய்துகொண்டும் திருவாட்டி கோர் தீபாவளிக்குத் தயாராகி வந்தார்.
உடல்நலச் சவால்கள் தமக்கு முற்றிலும் புதிதானவை அல்ல என்றும் இவர் குறிப்பிட்டார்.
பரம்பரை மரபணுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள திருவாட்டி கோர், தம் தாயார் குடற்புற்றுநோயால் அவதியுற்றதையும் நேரில் பார்த்தவர்.
2016ஆம் ஆண்டு இவரது தாயார் 62 வயதில் வயிற்றுப் புற்றுநோயால் மறைந்தார். அதைத், தொடர்ந்து தாமும் முன்னெச்சரிக்கை மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆனால், இப்போது மார்பகப் புற்றுநோய் தாக்கியுள்ள நிலையில், அதற்குரிய வேதிச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பது தவிர்க்க முடியாத செயலாயிற்று.
சீக்கிய சமயத்தில் கூறப்படும் ‘சர்தி கலா’ (Chardi Kala), அதாவது மனவுறுதியோடும் எப்போதும் மிகுந்த உற்சாகத்தோடும் இருக்கும் பண்பைக் கடைப்பிடித்து வருகிறார் திருவாட்டி கோர். தீபாவளிக் கொண்டாட்டம் தமது மனவுறுதியை மேலும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது என்கிறார் அவர்.
சீக்கியச் சமூகத்திற்கு இந்நாள் ‘பந்தி சோர் திவாஸ்’ (Bandhi Chhor Divas) என்ற வரலாற்றுப் பெருநாளோடும் இணைந்து வருகிறது. ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் சிறைபிடிக்கப்பட்டிருந்த 52 அரசர்களை விடுவித்த வரலாற்று நிகழ்வை இந்நாள் நினைவுகூர்கிறது.
“’பந்தி சோர்’ என்றால் விடுதலை அடைவது அல்லது தளைகளிலிருந்து விடுபடுவது என்று பொருள்,“ எனத் திருவாட்டி கோரின் கணவர் திரு ஹர்வீன் சிங் கூறினார்.
“இருள் அகன்று வெளிச்சம் நிறைவதைப் போற்றுவதே தீபாவளியின் கருப்பொருள். எனவே, இந்துக்களோடு நாங்களும் தீபங்களை ஏற்றுவோம். சக சீக்கியர்களோடு இணைந்து எங்களது வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களில் இந்நாளை இறைவேண்டுதல்களோடு கொண்டாடுகிறோம்,” என்றும் அவர் விளக்கினார்.
குடும்பத்தைப் போற்றுவது, நம்பிக்கையைக் கைவிடாமல் இருப்பது, நன்றி உணர்வோடு வாழ்வது ஆகிய பண்புகளுக்குள் இப்பண்டிகை அடங்கிவிடுவதாகத் திருவாட்டி கோர் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு நாளும் சுமையாக இருந்தாலும் அந்நாளை அமைதியுடன் கடந்து மகிழ்ச்சி காண்போம்,“ என்கிறார் இந்தத் துணிச்சல் பெண்மணி.
