‘நம் மரபு: ஒரு பார்வை’யில் உருமி மேளம்

‘நம் மரபு: ஒரு பார்வை’யில் உருமி மேளம்

2 mins read
f32921ca-c922-4b07-8783-645460749e2e
2025ஆம் ஆண்டின் ‘ஆனந்தக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் உருமி வாசித்த கலைஞர்கள். - படம்: த. கவி

ஆ. விஷ்ணு வர்தினி

கோயில் திருவிழாக்கள், சமூக மன்ற நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்வுகள் என்று சிங்கப்பூரில் பல இடங்களிலும் ஓங்கி ஒலிக்கிறது உருமி மேளம்.

புலியின் உருமலை நினைவூட்டும் சிறப்பு ஒலியால் ‘உருமி’ எனப் பெயர்பெற்ற இவ்விசைக்கருவி தமிழர்களின் முக்கிய இசை அடையாளங்களில் ஒன்று. பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக, தமிழ் முரசும் ‘ஆட்டம்’ அமைப்பும் இணைந்து வழங்கும் ‘நம் மரபு: ஒரு பார்வை’ தொடரில் இக்கலை குறித்த சுவாரசியமான விவரங்கள் இடம்பெறுகின்றன.

சிங்கப்பூருக்கே உரிய பாணியிலும் தோற்றத்திலும் இன்று மிளிர்கிறது உருமி மேளம். கடந்த ஆண்டு ‘ஆட்டம்’ அமைப்பின் ஏற்பாட்டில் அரங்கேறிய ‘ஆனந்தக் கொண்டாட்ட’ மேடையில், கலைஞர் யங் ராஜாவின் “போடு மைக்” சொல்லிசைக்குப் புதுமையான வகையில், கம்பீரமாகத் துணை நின்றது உருமி. இந்த வாத்தியத்தின் வரலாற்றையும் சிங்கப்பூரில் அது பதித்துள்ள தடத்தையும் குறித்து நம் மரபுக் காணொளித் தொடரில் விவரித்துள்ளார் திரு கார்த்திஷ் ஜேம்ஸ், 32. கடல்சார் துறையில் மேலாளராகப் பணிபுரியும் இவர், ‘வீரவேல் உருமி மேளம்’ குழுவின் தலைவராகத் தொடர்ந்து இக்கலையைப் பேணி வருகிறார்.

பதின்ம வயதிலிருந்தே உருமி வாசித்துவரும் திரு கார்த்திஷ், பாரம்பரிய இசை நுணுக்கங்களை நவீனச் சூழலுக்கு ஏற்ப கொண்டுசெல்வதில் ஆர்வம் கொண்டவர். இளையர்களுடனும் சமூக அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றும் அவர், இக்கலையைப் பயிற்றுவிப்பதிலும் பாதுகாப்பதிலும் தொடர் முயற்சிகள் எடுத்து வருகிறார். உருமியின் அடிநாதத்தில் பின்னிப்பிணைந்துள்ள தனது பயணத்தையும் இத்தொடரில் பகிர்ந்துகொள்கிறார் திரு கார்த்திஷ்.  

பல்வேறு சமூகங்களின் புராணக்கதைகளில் உருமி மேளம் வலம் வருகிறது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த வாத்தியம், இன்று சிங்கப்பூரின் பல்லினக் கலாசார விழாக்களிலும் நவீன மேடை நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்று, தனித்துவ ஒலியை ஆழமாக நிலைநாட்டியுள்ளது.

பல்வேறு இந்திய மரபுக்கலை வடிவங்களைப் பயின்று மேடையேற்றிய கலைஞர்களின் நேரடி அனுபவப் பகிர்வாக இக்காணொளித் தொடர் அமைகிறது. இப்புதிய கலைப்பயணத்தை இங்கே காணலாம்:

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்