வழக்கொழிந்த பல இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்கின்றனர் இந்தியாவைச் சேர்ந்த ‘உருபாணர்’ இசைக்குழுவினர்.
சோழர் காலத்து ஐந்து முகத் தாள வாத்தியமான குடமுழா, பாணர் சுமந்துசெல்லும் சீரியாழ், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட 8.5 அடி உயரமுள்ள பேரியாழ், திருமுறையில் குறிப்பிடப்பட்ட செங்கோட்டியாழ், குழல், கொம்பு, கொக்கரை முதலியவை அவற்றுள் அடங்கும்.
இசைக்கருவிகளை மீட்டுருவாக்குவதுடன் அவற்றைக் கொண்டு மாறுபட்ட இசைக் கச்சேரிகளையும் அக்குழு நடத்துகிறது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த வகை இசைக் கச்சேரிகள் நடைபெறும் நிலையில் அதன் முதல் வெளிநாட்டுக் கச்சேரி சிங்கப்பூரில் நடைபெற்றது.
அண்மையில் கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘தொல் சங்கநாதம்’ நிகழ்ச்சியில் ‘உருபாணர்’ குழு நடத்திய இசைக் கச்சேரி, பங்கேற்பாளர்களிடம் பெருவரவேற்பைப் பெற்றது.
சூரியன் உதிப்பதை வாழ்த்திப் பாடும் தொடக்கப் பாடல், ஐந்திணை, அவற்றின் பொழுது, நிமித்தங்கள், உணர்வுகள், கதைகளை விவரிக்கும் பாடல்களையும் குழுவினர் இசையமைத்துப் பாடினர்.
‘பாணர்’ என்போர் சங்க காலத்தில் தமிழிசையை வளர்த்தவர்கள். யாழ் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு, ஊர் ஊராகச் சென்று பண் இசைத்துப் பாடும் பழமையான இசைக் கலைஞர் சமூகத்தினர். அக்கருவிகளையும் கருப்பொருளையும் மீட்டுருவாக்கம் செய்ததால் ‘உருபாணர்’ என்று தங்கள் குழுவுக்குப் பெயர்சூட்டிப் பயணம் செய்து வருகின்றனர் அக்குழுவினர்.
இந்தச் சிந்தனையின் பின்னணி, பணிகள், ஆர்வம், செயல்பாடுகள் தொடங்கி, இக்கருவிகளுக்கு உள்ள வரவேற்பு வரை பலவற்றையும் இக்குழுவினர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“நான் அடிப்படையில் கட்டடக்கலை வல்லுநர். சிறு வயதிலிருந்தே கிட்டார் உள்ளிட்ட பிரபல இசைக் கருவிகளை வடிவமைக்கும் ஆர்வம் இருந்தது. இந்திய இசைக்கருவிகளை நவீனமயப்படுத்தி அனைவரும் பயன்படுத்தும் வகையில் கொண்டுசேர்க்கும் வாய்ப்புகளை ஆராயத் தொடங்கினேன்,” என உற்சாகத்துடன் பேசினார் இக்குழுவின் நிறுவனர் தருண் சேகர்.
2019ஆம் ஆண்டிலிருந்து முழுநேரமாக இந்த மீட்டுருவாக்கப் பணிகளைச் செய்துவரும் தருண், யாழ் இசைக்கருவிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு இருப்பதாகக் கூறினார்.
“யாழுக்கு இசைக்கருவி என்பதற்கு அப்பால் தமிழ்ச்சமூகத்துடன் உணர்வுபூர்வமான பிணைப்பு உள்ளது. மறக்கப்பட்ட கருவியென்றாலும் அதற்குண்டான மதிப்பு வியப்பளிக்கிறது,” என்றார் அவர்.
கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன் இசைக்குழுவில் பயணம் செய்ததாகக் கூறிய தருண், இந்த இசைக்கருவிகளை உருவாக்குவதுடன் அவற்றைக் கொண்டு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தத் தாமும் தமது நண்பர் பிரவேகாவும் திட்டமிட்டதைச் சுட்டினார்.
தொடர்ந்து, இசைக்கருவி வாசிப்பவர்கள், தயாரிப்பாளர் உட்பட எட்டுப் பேர் கொண்ட குழுவாய் மாறியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
மொழியின்மீது தொடக்கத்தில் பெரிதாக ஆர்வம் ஏதும் இல்லையென்றாலும் தேவைக்காகப் படிக்கத் தொடங்கியதைச் சுட்டினார் தருண்.
தாங்கள் உருவாக்கும் கருவிகளுக்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை என்பதால் இலக்கியம், சிற்பங்கள் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளை நுணுக்கமாகக் கவனித்து, அவற்றின் வடிவம், அவை இசைக்கப்படும் இடம், வெளிப்படும் ஒலி, அவை தரும் உணர்வு என அனைத்தையும் கருத்தில் கொள்வதையும் தருண் குறிப்பிட்டார்.
“பல்வேறு இலக்கியங்களிலிருந்து வரிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அனைவரும் ஒன்றாக அமர்ந்து, இசை கோத்துப் பாடுவோம். அவை குறித்து நாங்களே கருத்துகளைப் பகிர்ந்து, தேவைக்கேற்ப மாற்றியமைப்போம். இது ஓர் உற்சாகமான அனுபவமாக அமைவதால் அதன் விளைவாக அந்தப் பாடல்களும் சிறப்பாக அமைகின்றன,” என்றார் உருபாணர் குழுவில் பாடல்களுக்கு இசை அமைக்கும் இசையமைப்பாளரும் புல்லாங்குழல் கலைஞருமான சக்திவிக்ரம்.
குழுவில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட சிந்தனைகள் உள்ளதைச் சுட்டிய இக்குழுவின் இசைக் கலைஞர் கெளதம் வாசு வெங்கடேசன், “எங்கள் அனைவருக்கும் திருப்தியளிக்கக்கூடிய இசை அமைந்தால், அது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
வடிவமைக்கும் ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு உணர்வைத் தூண்டும் எனச் சுட்டிய அவர், குழுவினர் பாடிய 12 நிமிட ஒப்பாரிப் பாடல், பார்வையாளர்களிடம் கண்ணீரை வரவழைத்ததையும் நினைவுகூர்ந்தார்.
கோவா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில், மொழியைத் தாண்டி, இசைக்கு வரவேற்பு இருந்ததையும் கௌதம் சுட்டினார்.
“தொடக்கத்தில் இக்கருவிகளைப் பார்க்கும் அனைவருக்கும் இது வியப்பைத் தரும். அது மகிழ்ச்சிதான். ஆனால், அவற்றைக் காட்சிப் பொருள்களாக வைக்காமல், பயன்படுத்தக்கூடிய கருவிகளாக மாற்றுவதே இலக்கு,” என்றும் அவர் தெரிவித்தார்.
பிற இசை நிகழ்ச்சிகளைப்போல அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட இசை நிகழ்ச்சி இது என்று பலரும் வாழ்த்துவதைப் பெருமையுடன் குறிப்பிட்டார் பிரவேகா ரவிச்சந்திரன்.
“பாடல் என்பது ஓர் உண்மை நிலையிலிருந்து மற்றொன்றிற்கு என்னைக் கடத்திச் செல்லும் கருவி. பாடலை உருவாக்கும்போது அதுவே நம்மிடம் ஒன்றைக் கோரும். உணர்வுக்குள் கடத்திச் செல்லும். பாடலின் ஆழம் புரியவரும். எனவே பாடல்களோடும், உணர்வுகளோடும் இணைந்தே பயணம் செய்கிறேன். அது பார்வையாளர்களையும் சென்றடையும்போது கூடுதல் மகிழ்ச்சி பிறக்கிறது,” என்று அவர் விவரித்தார்.
காங்கோஸ், தர்புகா ஃபுல்லா என லத்தின், அமெரிக்க பாணி இசைக் கருவிகளை மட்டுமே வாசித்துப் பழகிய விஷ்வா, தற்போது ஆகப் பழமையான சோழர் காலத்து ஐந்து முகத் தாள வாத்தியமான குடமுழாவை வாசிக்கிறார்.
“ஒரு பழங்காலத் தாளக்கருவியை மீட்டுருவாக்கம் செய்கிறேன் என்றபோது பெரிதாக எதிர்பார்ப்பு ஏதுமின்றி இருந்தேன். ஐந்து முகங்கள் கொண்ட குடமுழாவைப் பார்த்து வியந்துபோனேன். இதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கு எந்தக் குறிப்புகளும் இல்லை. இதில் ஒவ்வொரு முகமும் ஒவ்வோர் ஒலியை எழுப்பும். இதனை வாசிக்கும் முறை, உணர்வு என அனைத்திற்கும் நூல்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டு பயிற்சி மேற்கொண்டேன்,” என்றார் அவர்.
“ஐந்து முகம் கொண்ட குடமுழாவை வாசிப்போர் தற்போது யாருமில்லை. ஒவ்வொரு முறை இதனை மேடையில் வாசிக்கும்போதும் பெருமையாக உணர்கிறேன்,” என்று விஷ்வா தெரிவித்தார்.
முதன்முறையாக வெளிநாட்டில் கச்சேரி நடத்தியது சிங்கப்பூரில்தான் என்று குறிப்பிட்ட தருண், எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்ததாகச் சொன்னார். பலரும் அக்கருவிகள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியதில் மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ‘உரு இசைக் கருவிகள்’ எனும் நிறுவனம் மூலம் இசைக் கருவிகளைத் தயாரித்து விற்பதுடன், ‘உரு இசைப் பள்ளி’ மூலம் பலருக்கு அக்கருவிகளை வாசிக்கவும் குழுவினர் பயிற்றுவிக்கின்றனர்.
இன்னும் பலரை அக்கருவிகளை வாசிக்க வைப்பதையும் இசைக் கலைஞர்கள் பலரிடம் கொடுத்து அவற்றை இசைக்க வைப்பதையும் இலக்காய்க் கொண்டுள்ளதாகச் சொன்னார் தருண்.

