அன்னையர், தாதியரைச் சிறப்பித்த வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சி

அன்னையர், தாதியரைச் சிறப்பித்த வாழ்வியல் இலக்கியப் பொழில் நிகழ்ச்சி

1 mins read
c0a180e2-a3f3-482d-94ff-7bc04a535ef6
கவிதை, கதை, சிற்றுரை ஆகியவற்றை ஒட்டிய மொழி நடவடிக்கைகளுக்கு இந்த அமைப்பு மாதந்தோறும் ஏற்பாடு செய்கிறது. - படம்: வாழ்வியல் இலக்கியப் பொழில்

அனைத்துலகத் தாதியர் தினத்தை முன்னிட்டு, தாதியரின் சேவையைச் சிறப்பிக்கும் உரை, கவிதை போன்ற அங்கங்கள், வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

பொங்கோல் சமூக மன்றத்தில் மே 9ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், தாதியர் பணியின் மகத்துவத்தை விளக்கும் வகையில் தாதி கற்பகலட்சுமி சிற்றுரை ஆற்றினார். தாதி ஹேமா பிரபாகரன் கவிதை வாசித்தார்.

சிறுவர் அங்கத்தில் திருக்குறள் கதைகள், ஔவையார் குறித்த உரைகள், சங்க இலக்கியம் தொடர்பான செய்திகளைச் சிறார் வழங்கினர். அமைப்பின் தலைவர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி ‘அறப்போர் மறப்போர்’ என்ற தலைப்பில் இலக்கிய உரை ஆற்றினார்.

இந்தியாவிலிருந்து இணையம் வழியாக இணைந்த ஹேமாஸ்ரீ, ‘சங்க இலக்கியத்தில் கூறியுள்ள கருத்துகள்’ பற்றிப் பேசினார்; ‘சங்க இலக்கியத்தில்  புறநானூறு கூறும் கருத்துகள்’ என்ற தலைப்பில் பூர்ணிமா உரையாற்றினார்.

‘காஹுட்’ விளையாட்டும் தமிழ்ப் பயிற்சித் தாள்களும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தன.

சிறப்பு அழைப்பாளராகப் புதுச்சேரியிலிருந்து இணையம் வழியாக இணைந்த முனைவர் க. ரேவதி, குறிஞ்சிப் பாட்டில் இடம்பெற்றுள்ள ‘அறத்தொடு நிற்றல்’ குறித்துப் பேசினார். 

நிகழ்ச்சியில், அன்னையர் தினக் கவிதை, சித்த மருத்துவக் குறிப்புகள் ஆகியவை பகிர்ந்துகொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்