தீர்ப்புக்கு முன்னரே தீர்வு: மனங்களை வென்ற 90 வயது சமரச நாயகர்

தீர்ப்புக்கு முன்னரே தீர்வு: மனங்களை வென்ற 90 வயது சமரச நாயகர்

1 of 2
படம்: பே.கார்த்திகேயன்
படம்: செய்யது இப்ராகிம்

15 Nov 2026 - 6:00 am

3 mins read

சச்சரவு என்றாலே நீதிமன்றம் செல்லவேண்டும் என்பதில்லை. ஓர் அறையில், இருதரப்பினரும் எதிரெதிரே அமர்ந்து, ஒருவர் பேசுவதை மற்றவர் காதுகொடுத்துக் கேட்டாலே போதும், பல வழக்குகள் அங்கேயே முடிந்துவிடும். 

இந்த எளிய உண்மையை அரைநூற்றாண்டுக்கு முன்பே நம்பி, சிங்கப்பூரில் சமரசம் எனும் பண்பாட்டை விதைத்த முன்னோடிகளில் ஒருவர் திரு கிருஷ்ணா.

நாட்டின் பரபரப்பான வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புகளுக்கு இடையே, மனித மனங்களின் முரண்பாடுகளை மௌனத்தாலும் கனிவான சொற்களாலும் அன்பின் பாலமாக மாற்றிவரும் அயராத நீதிமன்றத் தொண்டூழியர் இவர்.

1936ஆம் ஆண்டு பிறந்து, இரண்டாம் உலகப் போரின் சூழல்களையும் சிங்கப்பூரின் மறுமலர்ச்சியையும் கண்ட திரு கிருஷ்ணா, தமது 90வது வயதிலும் சமூகப் பணிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையின் பெருமிதச் சான்றாகத் திகழ்கிறார். 

சட்டம் நீதியை நிலைநாட்ட உதவும். ஆனாலும், சமரசமே மனித உறவுகளை மீட்டெடுக்க உதவும் ஒப்பற்ற திறவுகோல் என்பதே இவரின் தாரக மந்திரம்.

தந்தை கொடுத்த திருப்புகழ்

போருக்குப்பின் பள்ளிக்கூடம் கிடைக்காமல் தவித்த காலத்தில், அக்கம்பக்க ஆசிரியரிடம் தமிழும் ஆங்கிலமும் கற்றார். தந்தை கற்பித்த செந்தமிழே இந்தத் தொண்டூழியரின் முதல் பாடம். 

‘‘திருப்புகழும் சீவக சிந்தாமணியும் தந்தை கொடுத்த முதல் நூல்கள். ‘ழ’கரத்தைப் பிழையின்றி உச்சரிக்கவில்லை என்றால் தந்தையிடம் சாட்டையடி கிடைக்கும்,’’ என்றபடி சிரித்தார் அவர். 

அந்தக் கண்டிப்பே திரு கிருஷ்ணாவை மொழியிலும் வாழ்விலும் செதுக்கியது. வாழ்க்கைப் பயணம் பொறியியலில் இருந்தாலும் பொறுமையைக் காக்கும் சமரசமே இவரது தனித்துவமாக மாறியது.

நீதிக்குத் துணை

சிங்கப்பூர்ச் சாலைகளின் சிற்பியாக பரவலாக அறியப்படும் திரு கிருஷ்ணாவின் இரண்டாவது அத்தியாயம் அவர் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றியபோது தொடங்கியது.

கட்டடம், அண்டைவீட்டார் சார்ந்த  சச்சரவுகள் , பூசல்கள் என நாள்தோறும் முறையீடுகள் வரும். அவற்றை நீதிமன்றத்துக்கு அனுப்பாமல், இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்துவந்தார்.

இதனைக் கவனித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை, “நீங்கள்தான் சமரசம் செய்கிறீர்கள், வாருங்கள் பயிற்சி பெறுங்கள்” என்று திரு கிருஷ்ணாவை அழைக்க, சிங்கப்பூர் சமரச நிலையத்தில் இவரது வாழ்க்கைப் பயணம் தனது கால்தடத்தைப் பதித்தது.

எளிய நெறியால் குடும்பங்களை இணைத்தவர்

“எனது சமரச அறையில் முதல் நெறி மிக எளியது. ‘ஒருவர் பேசும்போது மற்றவர் கேட்க வேண்டும். இருவரும் கூச்சலிட்டால் ஒன்றும் நடக்காது. உங்களைக் கேட்க நான் இருக்கிறேன்’ என்று சொன்னாலே போதும், சினம் பாதி குறைந்துவிடும்,” என்கிறார் திரு கிருஷ்ணா.

இவரது அனுபவத்தில் வீவக வீட்டு முற்றத்தில் செருப்பு வைத்ததற்காக எழுந்த அண்டை வீட்டுச் சண்டை முதல் பல தரப்பினர் தொடர்புடைய சவால்மிக்க கட்டுமான வழக்கு வரை பலவற்றையும் அறிவார்ந்த முறையில் சட்ட உதவியுடன் சமரசம் வாயிலாகவே தீர்த்துவைத்துள்ளார்.

சமரசம் செய்ததில் மறக்க இயலாத வழக்கு பற்றி கேட்டபோது நிதானமாக விவரிக்கத் தொடங்கினார். 

“ஏழுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கொண்ட அந்தக் குடும்பத்தில், பெற்றோரை யார் பார்த்துக்கொள்வது என்று நீதிமன்றம் படியேறக் காத்திருந்த பூசலுக்குச் சமரசம் கண்ட தருணம் மிகுந்த நிறைவளித்தது.” என்று கண்கள் மின்னச் சொன்னார் திரு கிருஷ்ணா.

அந்த சமரச ஆலோசனை நேரத்தில், பெற்றோரைப் பேணிவந்த ஒரு பிள்ளை எழுப்பிய ஒரே ஒரு கேள்வி இன்றும் தம் மனத்தைவிட்டு அகலவில்லை என்றவர், அதனை இவ்வாறு நினைவுகூர்ந்தார்: 

“அத்தனைப் பிள்ளைகளையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தனது வருமானத்தை கொட்டி வளர்த்தவர். இப்போது அவரைப் பேண போட்டாபோட்டி. ஒருவராலும் முடியவில்லையா?” அந்த ஒரு வரியில் மனக்கசப்பு கரைந்து போனது. 

‘‘ஒவ்வொருவரும் மாதந்தோறும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டு, பெற்றோரை நல்ல பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து, அனைவரும் அவரை பார்க்கவும் ஒப்புக்கொண்டனர். 

“அந்தத் தந்தையின் முகத்தில் மலர்ந்த புன்னகைதான் எனக்குக் கிடைத்த மிகப் பெருஞ்செல்வம்,” என்று நெகிழ்ச்சியுடன் திரு கிருஷ்ணா கூறினார்.

இன்று சமூக சமரச நிலையம் மக்கள் மனங்களை வென்றிருப்பதற்கு அது மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதே காரணம் எனக் குறிப்பிட்ட அவர், 90 அகவையில் இப்போது சமரசப் பணியை இளைய தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டார்.

“நான் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் யாரும் வரமாட்டார்கள். அவர்கள் செய்யட்டும். நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்,” என்று பெருமையுடன் புன்னகைத்தார் அவர்.

“குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அண்டை வீட்டினர் இணக்கமாக இருக்க வேண்டும். சண்டை இல்லாத சமூகமே ஒரு நாட்டின் உண்மையான வலிமை. அதனைவிட வேறு என்ன வேண்டும்?” என்கிறார் இந்த நெடுங்காலத் தொண்டூழியர்.

குறிப்புச் சொற்கள்