விசாக தினம்: பக்திப் பெருக்குடன் ஆலயங்களில் ஒன்றுதிரண்ட மக்கள்

விசாக தினம்: பக்திப் பெருக்குடன் ஆலயங்களில் ஒன்றுதிரண்ட மக்கள்

4 mins read
675094b1-2698-4ec1-92a5-627c7c984ca9
விசாக தினத்தன்று பல்வேறு பக்தர்கள் அதிகாலையிலேயே ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டனர். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 3

சிங்கப்பூரில் உள்ள பௌத்த ஆலயங்களில் விசாக தினக் கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 31) களைகட்டின.

புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது, வீடுபேறு அடைந்தது ஆகிய முப்பெரும் நிகழ்வுகளைக் குறிக்கும் இந்த நன்னாளில், பல்வேறு குடும்பங்கள் அதிகாலையிலேயே பெளத்த ஆலயங்களுக்குச் சென்று திரளாக வழிபட்டன.

இனம், சமயம் என்ற வேறுபாடின்றி மக்கள் பக்திப் பெருக்குடன் ஒன்றுகூடிச் சந்தித்து மகிழ்ந்தது வழிபாடுகளுக்குக் கூடுதல் சிறப்பைக் கொடுத்தது.

ஸ்ரீ லங்காராமய பௌத்த ஆலயம்

ஸ்ரீ லங்காராமய பௌத்த ஆலயத்தில் மக்கள் பக்திப் பெருக்குடன் வழிபட்டனர்.
ஸ்ரீ லங்காராமய பௌத்த ஆலயத்தில் மக்கள் பக்திப் பெருக்குடன் வழிபட்டனர். - படம்: சுந்தர நடராஜ்

செயிண்ட் மைக்கல்ஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ லங்காராமய பௌத்த ஆலயத்தில் வழிபாடுகள் களைகட்டின. இங்கு 40 வயது உடற்கட்டுப் பயிற்றுவிப்பாளர் யுவராஜ் துரியாதாசு, 41 வயது பொதுமக்கள் தொடர்புத் துறை மூத்த இயக்குநர் டெபோரா தயானி நாணயக்காரா தம்பதியினர் தங்கள் நான்கு குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

தமிழரான திரு யுவராஜ், சிங்கள, சீன வம்சாவளியைச் சேர்ந்த திருவாட்டி டெபோரா தம்பதிக்கு நான்கரை வயதில் ரக்‌ஷியா, மூன்று வயதில் ரிவன், ரிஷவ் ஆகிய இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இவர்களோடு இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு வயதை எட்டவுள்ள அக்‌ஷிரா என்ற கைக்குழந்தையையும் அவர்கள் ஆலயத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

“விசாக தினத்தன்று காலையில் முதலில் ஆலயத்திற்கு வந்து வழிபடுவதுதான் எங்கள் வழக்கம். அதன் பிறகே, அன்றைய நாளுக்கான ஏனைய வேலைகளைத் தொடங்குவோம்,” எனத் திரு யுவராஜ் தெரிவித்தார்.

இளைய மகளுக்கு விரைவில் முதல் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், அன்றைய தினம் தமது தாயாருக்கும் பிறந்தநாள் என்பதால் குடும்பத்தாரோடு இணைந்து உணவருந்திச் சிறப்பிக்க உள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்களாக வேலை செய்யும் 45 வயது நடேசன் விஜி நில்மினியும் அவரது தோழிகளும் தங்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை புத்தரை வழிபட்டு ஒன்றாகக் கழித்தனர்.

ஸ்ரீ லங்காராமய பௌத்த ஆலயத்திற்குத் தமது தோழிகளுடன் வழிபட வந்திருந்தார் 45 இல்லப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் நடேசன் விஜி நில்மினி (இடமிருந்து இரண்டாவது).
ஸ்ரீ லங்காராமய பௌத்த ஆலயத்திற்குத் தமது தோழிகளுடன் வழிபட வந்திருந்தார் 45 இல்லப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் நடேசன் விஜி நில்மினி (இடமிருந்து இரண்டாவது). - படம்: சுந்தர நடராஜ்

வெவ்வேறு இடங்களில் வேலை செய்தாலும், ஒவ்வோர் ஆண்டும் இந்த நன்னாளில் இவர்கள் சந்தித்து ஒன்றாக நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்து தந்தைக்கும் பௌத்த தாய்க்கும் பிறந்த விஜி, இரண்டு வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார்.

“இலங்கையில் விசாக தினத்தை எப்படிக் கொண்டாடுவோமோ அதே உணர்வு இங்கும் கிடைக்கிறது. புத்தரின் பிறப்பு, இறப்பு, ஞானம் பெற்ற நிகழ்வுகளை ஒரே நாளில் நினைவுகூர்ந்து கொண்டாடுவது மிகவும் சிறப்பானது,” என அவர் கூறினார்.

சாக்கிய முனி புத்த கயா ஆலயம்

சாக்கிய முனி புத்த கயா ஆலயத்தில் மக்கள் பக்திப் பெருக்குடன் வழிபட்டனர்.
சாக்கிய முனி புத்த கயா ஆலயத்தில் மக்கள் பக்திப் பெருக்குடன் வழிபட்டனர். - படம்: சுந்தர நடராஜ்

ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள சாக்கியமுனி புத்த கயா ஆலயத்திலும் பல பக்தர்கள் ஒன்றுகூடி வழிபட்டனர். இங்கு இந்து மதத்தைச் சேர்ந்த பலரும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தேக்கா சந்தையில் ‘சுகி ஜுவெல்லரி’ கடையை வைத்திருக்கும் க. குணசேகரன், கு. சுகந்தி தம்பதியர் ஒவ்வோர் ஆண்டும் விசாக தினத்தன்று புத்தரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தேக்கா சந்தையில் வியாபாரம் செய்யும் க. குணசேகரன் (இடமிருந்து மூன்றாவது), கு. சுகந்தி (இடமிருந்து இரண்டாவது), அவர்களுடன் இணைந்து கடையில் பணியாற்றுபவர்கள்.
தேக்கா சந்தையில் வியாபாரம் செய்யும் க. குணசேகரன் (இடமிருந்து மூன்றாவது), கு. சுகந்தி (இடமிருந்து இரண்டாவது), அவர்களுடன் இணைந்து கடையில் பணியாற்றுபவர்கள். - படம்: சுந்தர நடராஜ்

“புத்தரின் வழிகளும் அவரது அமைதியான தன்மையும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவரை வழிபட்டால் அந்த நாள் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் இங்கு வருகிறோம்,” என அவர்கள் கூறினர். அதிகாலையிலேயே சுவாமியைத் தரிசித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடங்கச் செல்வதாக அவர்கள் கூறினர்.

இளைய தலைமுறையினருக்கு அனைத்துச் சமயங்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கும் நோக்கில், நிர்வாகியாகப் பணியாற்றும் சுஜாதா வ. தமது குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு வந்திருந்தார்.

சிறுவயதில் தமது தாத்தா பாட்டியுடன் ஆலயத்திற்கு வந்ததை நினைவுகூர்ந்த அவர், தமது பிள்ளைகளும் பிற சமயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை ஆண்டுதோறும் அழைத்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகாலை வேளையில் கூட்டம் சற்று குறைவாக இருந்ததால், அமைதியாக வழிபட முடிந்ததாக அவரது 19 வயது மகள் ரோஷினி மு. தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் தமது பெற்றோரைப் பார்க்க வந்திருந்த மலேசியாவைச் சேர்ந்த 25 வயது தனுஷா மலர்செல்வன், உலக அமைதிக்காகப் புத்தரை வழிபடுவதாகக் கூறினார். மலேசியாவில் இருந்தாலும் சரி, சிங்கப்பூருக்கு வந்திருந்தாலும் சரி, மறக்காமல் ஆண்டுதோறும் விசாக தினத்தன்று ஆலயத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

“சிறிய வயது முதலே இந்த வழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். உலக அமைதிக்காகச் செய்யப்படும் ஒரு சிறிய வழிபாடு இது,” என்று அவர் கூறினார். குழந்தை புத்தருக்கு நீர் ஊற்றி வழிபடுவதோடு, ஊதுபத்தி ஏற்றித் தங்களது வேண்டுதல்களை முன்வைப்பதாக அவர் கூறினார்.

தமது குடும்பத்தினருடன் புத்தரைத் தரிசிக்க வந்திருந்தார் ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் கமலாதேவி பூமிநாதன், 75.

தமது குடும்பத்துடன் புத்தரைத் தரிசிக்க வந்திருந்தார் 75 வயது கமலாதேவி பூமிநாதன் (இடமிருந்து நான்காவது).
தமது குடும்பத்துடன் புத்தரைத் தரிசிக்க வந்திருந்தார் 75 வயது கமலாதேவி பூமிநாதன் (இடமிருந்து நான்காவது). - படம்: சுந்தர நடராஜ்

தமது குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்த ஆலயத்திற்கு வருவதாகக் கூறிய அவர், “ஓர் ஆண்டு வரவில்லை என்றாலும் மனத்திற்கு மிகவும் வேதனையாக இருக்கும். காலையில் வீட்டிலேயே கடவுளை வணங்கிவிட்டு, இங்கு வந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்,” எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்