அட்மிரல்டி வட்டாரத்தின் ‘ஏஸ் த பிளேஸ்’ சமூக மன்றத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற ‘வெற்றித் தீபாவளி 2026’ கொண்டாட்டத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தீபாவளிக் கொண்டாட்டத்தில் மக்கள் பார்வையாளர்களாக மட்டும் கலந்துகொள்வதற்குப் பதிலாக, இசை, கலை, மின்னிலக்க அனுபவங்கள், நிலைத்தன்மை சார்ந்த முயற்சிகளில் அவர்களைப் பங்களிக்க வைத்தது.
“நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது, செயற்கை நுண்ணறிவு முயற்சிகள், மூன்று நாள் கொண்டாட்டத்தின் வெற்றி ஆகியவற்றைக் காட்டிலும், குடியிருப்பாளர்கள், தொண்டூழியர்கள், பங்காளிகள், அடித்தளத் தலைவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்ததைக் காண்பதே மிகப் பெரிய சாதனை,” என்றார் வெற்றி - இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் எஸ். வெங்கடேஷ்வர்லு நாயுடு.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வெற்றி மயில் சிற்பம்.
முழுவதும் வெள்ளை நிறத்தில் உருவாக்கப்பட்ட சிற்பத்துக்கு, நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் வண்ணம் தீட்டினர். இதன்மூலம், சமூகத்தினர் இணைந்து வண்ணம் தீட்டிய மிகப் பெரிய முப்பரிமாண அச்சுச் சிற்பம் என்ற சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
“கலை மூலம் பொதுமக்களை ஒன்றிணைக்கும் இந்த யோசனை மிகவும் சிறப்பானது. சமூக மன்றத்தில் நடைபெற்ற மூன்று நாள் கொண்டாட்டத்தின்போது, பொதுமக்கள் இணைந்து இந்த மயில் சிற்பத்துக்கு வண்ணம் தீட்டியது சுவாரசியமாக இருந்தது,” என்றார் ‘மயூரா’ நிறுவனர் யோகா லட்சுமி சிவசங்கர்.
தீபாவளி அலங்காரப் பொருள்களை வீணாக்காமல் மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் ‘புரொஜெக்ட் ரீசைக்கிள் டெகோ’ என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய, பயன்படுத்தப்படாத அல்லது நல்ல நிலையில் உள்ள, மறுபயன்பாட்டுக்கு ஏற்ற தீபாவளி அலங்காரப் பொருள்களைப் பொதுமக்கள் நன்கொடையாக வழங்கலாம்.
இதற்கான சேகரிப்பு ஆகஸ்ட் 24 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை ஏஸ் தி பிளேஸ் (ACE The Place) சமூக மன்றத்தில் நடைபெறுகிறது.
சேகரிக்கப்படும் பொருள்கள் சமூக மன்றத்தை அலங்கரிக்க மீண்டும் பயன்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில அலங்காரப் பொருள்கள் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்காக ஒதுக்கப்படும். எஞ்சியவை பின்னர் சமூகத்தினரிடையே மறுபகிர்வு செய்யப்படும்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இரு முயற்சிகளும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
வெங்கடேஷ்வர்லு நாயுடு உருவாக்கிய ‘சிங்கப்பூர் தீபாவளி டாஷ்’ எனும் விளையாட்டு, ஆரோக்கியமான உணவுத் தெரிவுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. அக்டோபர் 17ஆம் தேதி, புகழ்பெற்ற உள்ளூர் நாடகக் கலைஞர் வடிவழகன் (வடி பிவிஎஸ்எஸ்) இதனை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
‘மெலடீஸ் ஆஃப் அவர் நெய்பர்ஹுட்’ (Melodies of Our Neighbourhood) என்ற மற்றொரு முயற்சியில், இந்திய இசைக் கலாசாரத்தைக் கொண்டாடும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட 20 இசைப் படைப்புகள் இடம்பெற்றன.
வெற்றித் தீபாவளிக் கொண்டாட்டம் உள்ளூர் நிறுவனங்கள், தொழில்முனைவோர் தங்கள் பொருள்களைப் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் வாய்ப்பளித்தது.
“இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டினர், உள்ளூர்வாசிகள், பல இனங்களைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் பங்கேற்றனர். இந்தியர்கள் மட்டுமன்றி, அனைவருடனும் நமது கலாசாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவி ஆர். சரஸ்வதி.
