மிக நீளமான வாழைத்தார், கண்ணீர்த் துளிகளைப் போன்ற தோற்றம் கொண்ட போர்ச்சுக்கீசிய பிகின்ஹோ மிளகாய் (Biquinho pepper), மாறுபட்ட வடிவம் கொண்ட ‘தங்கக் கொக்கி’ பூசணிக்காய் என வெவ்வேறு விதமான தாவரங்கள், காய்கறிகள், பழங்களுடன் களைகட்டியது சிங்கப்பூர்ப் பூங்கா விழா.
சமூகத் தோட்டங்களை ஊக்குவிக்கவும், தோட்டக்கலைஞர்களின் திறன்களைக் கொண்டாடவும் பூங்கா விழாவில் ஆண்டுதோறும் போட்டிகள் இடம்பெறுகின்றன. அவ்வகையில் இவ்வாண்டும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
சிங்கப்பூர்ப் பூங்கா விழாவின் முதல் நாளான ஜூலை 4ஆம் தேதி கரையோரப் பூந்தோட்டங்களில் உள்ள ‘த மெடோஸ்’ வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது
விழாவில், பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வென்றோர்க்கு விருது வழங்கினார்.
பூங்கா விழாவின் பத்தாம் ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், “தேசியப் பூங்காக் கழகத்தின் ‘சமூகத் தோட்டக்கலைத் திட்டம்’ 20ஆம் ஆண்டை எட்டியுள்ளது. ஏறத்தாழ ஈராயிரம் குழுக்கள், தோட்டக்கலை ஆர்வலர்கள் 48,000 பேரைக் கொண்ட கட்டமைப்பாக இது உருவெடுத்துள்ளது. இதனை மேம்படுத்த பூங்காக் கழகம், தோட்ட ஒதுக்கீட்டுத் திட்டம், தோட்டக்கலை எஸ்ஜி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது,” என்றார்.
தொடர்ந்து, ‘சிங்கப்பூரிலுள்ள ‘1,001 தோட்டச் செடிகள்: புதிய தொகுப்பு’ எனும் புகழ்பெற்ற பதிப்பு, இலவச மின்னிலக்க இதழாகக் கிடைக்கும் எனவும் அவர் அறிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள 2,700க்கும் மேற்பட்ட செடிகள் குறித்த விவரங்கள், அவற்றை வளர்க்கும் முறைகள் அடங்கிய புத்தகம் அது.
தோட்டக்கலைப் போட்டிகளும் விருதுகளும்
விழாவின் முத்தாய்ப்பாகச் சிங்கப்பூர்த் தோட்டக்கலைக் கிண்ணம், சமூகத் தோட்டங்களிலிருந்து வந்த உண்ணக்கூடிய விளைபொருள்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.
பத்து வகையான விளைபொருள்கள் பிரிவிலும், ஒரு பொதுப் பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் விளைபொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அன்றாட வாழ்வில் பசுமையை இணைத்தல், மலர் அலங்காரம், போன்சாய், கற்கள் கொண்டு செய்யும் அலங்காரம் உள்ளிட்டவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மனிதர்களால் கைவிடப்பட்டு எறும்புகளால் கைப்பற்றப்பட்ட தோட்டம் எனும் கருப்பொருளில், இருவழித் தொடர்பு அனுபவ வடிவமைப்பில் பங்காற்றியவர் தோட்டக்கலை ஆர்வலரான ரெஹ்னா முகம்மது மின்ஹாஜ், 50.
களிமண், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு எறும்புகளையும், அவற்றைச் சுற்றித் தாவரங்களைப் பயன்படுத்தியும் இவ்வடிவமைப்பை அவரது குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள எறும்பு இனங்கள், பல்லுயிர்ச்சூழல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட அவர், அதுகுறித்து மாணவர்களுக்கும் வழிகாட்டுகிறார்.
“இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலே அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். மாணவர்கள் பலரும் அதில் உதவினர். மக்கள் பலரும் அதனைக் கண்டு ரசிப்பதும், எறும்புகள் குறித்தும், அவற்றுக்கும் தாவரங்களுக்கும் இடையிலான உறவு குறித்தும் அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி,” என்றார் ரெஹ்னா.
‘மலர்களின் விழா’ எனும் கருப்பொருளையொட்டி, ஒரு திருவிழா போன்ற அங்கங்களுடன் நடைபெறும் இவ்விழா ஜூலை 12ஆம் தேதி வரை இடம்பெறும்.

