தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் கிராமத்துப் பொங்கல்

2 mins read
211a3816-4d19-4e27-9481-77cb25c10d0f
பாரம்பரியக் கலையான கோலாட்டம். - படம்: வாங்கோ ஸ்டூடியோஸ்
multi-img1 of 3

சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதியின் லிம் சூ காங்கில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாலிவுட் பண்ணை பல்வேறு வகையான காய்கறி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல பழத்தோட்டங்களைக் கொண்டது.

2000ல் உருவாக்கப்பட்ட இத்தோட்டம், பறவைகளுக்கும் பலவகை உயிரினங்களுக்கும் மட்டுமல்லாது அங்கு செல்வோருக்கும் அமைதியான கிராமத்துச் சூழலை ஏற்படுத்தித் தருகிறது. தொலைதூர மிதிவண்டியோட்டிகளுக்கும் இளைப்பாறும் இடமாக மட்டுமல்லாது, மற்ற பலருக்கும் புத்துணர்வு தரும் வண்ணம் இயற்கைப் பின்னணியில் அமைந்துள்ள உணவகமும் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாக பதிவுசெய்யப்பட்டு இயங்கிவரும் இந்தியக் குலவழி அமைப்பான KINDS Family என்ற கள்ளர்கள் குழுமம், இவ்வாண்டின் பொங்கல் விழாவை கிராமத்துச் சூழலை வழங்கும் பாலிவுட் பண்ணையில் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடியது.

இவ்வாண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம், கோலாட்டம், கிட்டி ஆகிய பாரம்பரியக் கலைகளை இளையோரும் மகளிரும் பல மாதம் பயிற்சி பெற்று விழாவில் அரங்கேற்றினர். தமிழர் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை இளையோர் பலர் கற்றுத் தேர்ந்து படைத்தனர். பொங்கல் விளையாட்டான உறியடியும் பல நிகழ்ச்சிகளும் அரங்கேறிய இந்த நிகழ்ச்சி ஒரு கிராமத்துத் திருவிழாவாக அமைந்தது.

250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இவ்விழா, பெரியதொரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்தது என பாலிவுட் பண்ணை உரிமையாளர்கள் பாராட்டினர். பண்ணைக்குச் சென்ற பல்லின மக்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி தமிழர் கலை, கலாசாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் அமைந்தது.

அடுத்த தலைமுறையினருக்கு நமது கலை, கலாசாரத்தைக் கொண்டுசெல்லும் வண்ணம் இவ்வமைப்பு ஆண்டுதோறும் கோவில் அபிஷேகம், தீபாவளி, பொங்கல், ஏனைய சமூக ஒன்றுகூடல்களையும் நடத்தி வருகிறது.

மேலும், சமூகப் பங்களிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு ரத்த தானம், சுற்றுப்புறப் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொண்டூழியம், தமிழ்மொழி வளர்ச்சித் திட்டங்களில் ஆதரவு என பல வகையிலும் பங்காற்றி வருகிறது.

குறிப்புச் சொற்கள்