இந்திய மரபுடைமை நிலையத்தில் இந்த வார இறுதியில் நடைபெறும் தீபாவளிச் சந்தைக்கு வருவோரின் கண்களுக்கு விருந்தாக, ‘ரீகல் லைஃப்ஸ்டைல் எஸ்ஜி’ (Regal Lifestyle SG) ஆபரணக் கடை அமையும்.
ஆனால், அக்கடையின் நிறுவனரான 41 வயது அமுதா குலசேகரன், கண்பார்வை குறைபாடுடையவர் என்பதைப் பலரும் அறிந்திருக்கமாட்டர்.
பெரும்பாலும் சாம்பல் நிற மங்கலான வடிவங்களைத்தான் அமுதாவால் பார்க்க முடியும். தம் கண்முன் ஒருவர் இருப்பது தெரியும்; ஆனால் அவர் யார் என்று தெரியாது. தம் கையிலிருக்கும் நகையின் உருவம்தான் தெரியும்; அது என்ன நகை என அறிந்திட கண்ணுக்கு மிக அருகில் கொண்டுவந்து கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும்.
வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது
தாம் 2018ஆம் ஆண்டு வாகனம் ஓட்டியபோது சாலையில் கோடுகள் மறையத் தொடங்கியதாக அமுதா குறிப்பிட்டார்.
“மெனிஞ்சியோமா (meningioma) எனும் வளரும் கட்டி ஒன்று என் வலது கண்ணை முன்னரே மறைத்துவிட்டதாகவும், இப்போது இடது கண்ணையும் மறைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்தது,” என்றார் அமுதா.
அமுதா 23 ஆண்டுகளாக ‘எஸ்டி லொஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிவந்த நிலையில், கடந்த ஆண்டு வேலையை விடும் அளவிற்குக் கண்பார்வை குன்றியது.
நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாகப் பரபரப்பான ஒரு சூழலில் கனரக வாகனம் ஓட்டி, ‘ஃபோர்க்லிஃப்ட்’ இயக்கிவந்த அமுதா, கண்பார்வை குன்றியதால் கொள்முதல், நிர்வாகப் பிரிவுக்கு மாறினார்.
ஆனால், எழுத்துகளும் தெளிவாகத் தெரியாமல் போனதால் அவர் மனமில்லாமல் வேலையை விட்டார். இதன் மத்தியில், ஒற்றைத் தாயாகத் தம்முடைய 14 வயது மகனை வளர்க்கும் பொறுப்பும் அவருக்கு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“அடுத்த ஆறு மாதங்கள் சுவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்க என்னால் முடியவில்லை. அப்போதுதான் நான் பிறரிடம் பேசவேண்டும்; ஒரு தொழில்முனைவராக என் பயணத்தைத் தொடரவேண்டும் என முடிவெடுத்தேன். எனக்குக் கை கால் நன்றாகத்தானே உள்ளன; ஏன் என்னால் நான்கு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்ய முடியாது?” என்றார் அமுதா.
நட்பின் வலிமை
தன் உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் கங்கா, ரஞ்சினியிடம் அமுதா தம் ஆசையைக் கூறியபோது இருவரும் உதவ ஒப்புக்கொண்டனர்.
அதனால், இவ்வாண்டு தமிழ்ப் புத்தாண்டன்று உருவெடுத்தது ‘ரீகல் லைஃப்ஸ்டைல் எஸ்ஜி’.
“இதற்கான முதலீட்டை நான் என் சேமிப்பிலிருந்து எடுத்தேன். தொழில்நுட்பம் மூலம் கைப்பேசியிலேயே பலரையும் தொடர்புகொண்டு நிறுவனச் செயல்பாடுகளை என்னால் நிர்வகிக்க முடிகிறது,” என்றார் அமுதா.
“ஆனால், இந்தியாவிற்குச் சென்று நகைகளைத் தேர்ந்தெடுக்கவும், கண்காட்சிகளில் கடைகள் அமைக்கவும் என் நண்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது,” என்றார் அமுதா.
தமது @regallifestylesg இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் தளங்களில் நேரலையாகவும் அமுதா அணிகலன்களை விற்றுவருகிறார்.
“என் நண்பர்கள் எனக்கு ஒவ்வோர் அணிகலனாக எடுத்துக் கொடுத்து, அதைப் பற்றி என்னிடம் சொல்வர். நான் அதை அப்படியே விற்பேன். வாங்குபவர்களுக்கு அஞ்சலில் அனுப்புவோம். சிலர் செங்காங்கிற்கு நேரடியாகவும் வந்து பெற்றுக்கொள்வர்,” என்றார் அமுதா.
தற்போது அமுதாவுக்கு அவருடைய பெற்றோர், சகோதரர்கள், மகன், நண்பர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்.
“நான் என் மகனுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்,” என்றார் அமுதா.
அணிகலன்களின் புதுமை
மக்கள் அணியும் உடைகளை மெருகேற்றும் ‘கவரிங்’ நகைகளை விற்றுவருகிறார் அமுதா.
பொங்கல் குடம் வைத்த வளையல், பல்லக்கு வளையல், கழுத்தோடு ஒன்றிய பதக்கம் (invisible chain), யானையும் கல்லும் பொறிக்கப்பட்ட கழுத்தணி, மஹாலட்சுமி ஜிமிக்கி போன்ற அணிகலன்களும் இவற்றில் அடங்கும்.
கண் தெரியாதவர்களுக்காக வேலைவாய்ப்புகளை அமைக்கும் பயணத்தில் தாம் செல்வதாகவும் கூறினார் அமுதா.
“பார்வையற்றவர்களால் என்ன செய்யமுடியும் என்பதைப் பற்றிப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சமூகத்தினர் வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார் அமுதா.

