கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் உதவும் ‘யுக்தி’ செயற்கை நுண்ணறிவு

கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் உதவும் ‘யுக்தி’ செயற்கை நுண்ணறிவு

3 mins read
தமிழக மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்குக் கைக்கொடுக்கும் புதிய கருவி
7337250e-cb1b-4e4b-8307-0f4488b8b5e9
தமிழக மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘சஸ்டெய்னபிள் லிவிங் லேப்’ நிறுவனம் தமிழ் மொழியில் இயங்கும் ‘யுக்தி’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. - படம்: சஸ்டெய்னபிள் லிவிங் லேப்
multi-img1 of 3

இன்றைய போட்டி நிறைந்த வேலைவாய்ப்புச் சந்தையில், ஏட்டுக்கல்விக்கு அப்பால் நடைமுறை அனுபவத்தை வழங்கும் செயல்திட்டங்களை உருவாக்குவது (project development) இந்திய கல்லூரி மாணவர்களுக்கு மற்றொரு முக்கியத் தேவையாக உள்ளது.

ஆனால், அத்தகைய செயல்திட்டங்களை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நேரில் வழிகாட்டப் போதிய நிபுணர்கள் இல்லை என்பதே தற்போது நிலவும் சூழல்.

இந்த வழிகாட்டுதல் இடைவெளியை நிரப்ப, சிங்கப்பூர் நிறுவனமான ‘சஸ்டெய்னபிள் லிவிங் லேப்’ (எஸ்எல்2) புதியவகை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் களமிறக்கியுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காகக் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு உதவுவதற்காகத் தமிழிலேயே இயங்கும் ‘யுக்தி’ (Yukti) என்ற புதிய குரல்வழி செயற்கை நுண்ணறிவு வழிகாட்டியை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சிங்கப்பூரில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது சென்னை, இந்தோனீசியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் விரிவடைந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் குறித்த பாடப்பிரிவுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

“இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுக்குச் செய்முறைத் திட்டங்களை உருவாக்குவதே முக்கிய அளவுகோலாக உள்ளது. ஆனால், மாணவர்களுக்கு அதற்கான போதிய வாய்ப்புகளோ, தனிப்பட்ட வழிகாட்டுதலோ கிடைப்பதில்லை,” என்றார் எஸ்எல்2 நிறுவனத்தின் நிறுவனர் வீரப்பன் சுவாமிநாதன், 41.

இந்தக் குறையைப் போக்குவதற்காகவே ‘யுக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதற்காக மாணவர்கள் எந்தவொரு புதிய செயலியையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. ‘டெலிகிராம்’ செயலி வழியாகத் தங்கள் குரலிலேயே இதனுடன் நேரடியாக உரையாடலாம்.

‘டெலிகிராம்’ செயலி வழியாக மாணவர்கள் ‘யுக்தி’ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம்.
‘டெலிகிராம்’ செயலி வழியாக மாணவர்கள் ‘யுக்தி’ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். - படம்: சஸ்டெய்னபிள் லிவிங் லேப்

இதில், எழுத்துவடிவில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. மாணவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து பேசினாலும், இந்த மென்பொருள் அதனைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு மிக இயல்பாகத் தமிழிலேயே பதிலளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனத் திரு வீரப்பன் கூறினார்.

“பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படும் சேட்ஜிபிடி (ChatGPT) போன்ற கருவிகள் உடனடியாகப் பதில்களைக் கூறிவிடும். ஆனால், ‘யுக்தி’ சாக்ரடீஸ் கல்வி முறையில் செயல்படுகிறது. மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வகையில் இதுவே எதிர்க் கேள்விகளை எழுப்பி அவர்களைச் சரியான தீர்வை நோக்கி அழைத்து செல்லும்,” என்றார் அவர்.

மாணவர்களின் தேவைக்கேற்ப செந்தில், கவிதா, ராஜன், லட்சுமி என நான்கு வெவ்வேறு பெயர்களில் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டிகள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை, வேளாண்மை போன்ற குறிப்பிட்ட துறைகளின் நிபுணராகச் செந்திலும், சந்தைப்படுத்துதல் வழிகாட்டியாகக் கவிதாவும், தொழில்நுட்ப வழிகாட்டியாக ராஜனும் செயல்படுகின்றன. தங்களின் திட்டத்தை எப்படிச் சிறப்பாகப் பேசுவது என்பதைக் கற்றுக்கொடுப்பவராக லட்சுமி செயல்படுகிறது.

மாணவர்களின் தேவைக்கேற்ப செந்தில், கவிதா, ராஜன், லட்சுமி என நான்கு வெவ்வேறு புனைப்பெயர்களில் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டிகள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் தேவைக்கேற்ப செந்தில், கவிதா, ராஜன், லட்சுமி என நான்கு வெவ்வேறு புனைப்பெயர்களில் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டிகள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன. - படம்: சஸ்டெய்னபிள் லிவிங் லேப்

ஆரம்ப நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஆதரவான அணுகுமுறையையும், போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடுவர்கள் போல் கடினமான கேள்விகளைக் கேட்கும் சவாலான அணுகுமுறையையும் இந்த வழிகாட்டிகள் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“பொதுவான மென்பொருள்களைப் பயன்படுத்துவது செலவுமிக்கது. அவை மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்ற துல்லியமான தகவல்களை வழங்குமா என்பதும் ஐயந்தான்,” என்று குறிப்பிட்டார் திரு வீரப்பன். இதனைத் தவிர்க்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தனித்துவமான தமிழ்மொழி மாதிரிகளை (Local LLM) அடிப்படையாகக் கொண்டு இந்த மென்பொருள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ‘யுக்தி’ செயற்கை நுண்ணறிவை தமிழ்மொழியில் பயன்படுத்தலாம்.
மாணவர்கள் ‘யுக்தி’ செயற்கை நுண்ணறிவை தமிழ்மொழியில் பயன்படுத்தலாம். - படம்: சஸ்டெய்னபிள் லிவிங் லேப்

தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதன் வடிவம் மேம்பட்ட ‘ஜெமினி 3.1 ஃபிளாஷ்’ (Gemini 3.1 Flash) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), இன்டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கிட்டத்தட்ட 400 மாணவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் தற்போது முன்னோட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. மின்னிலக்க பொது நன்மைகளை ஊக்குவிக்கும் ‘ஏக்ஸ்டெப்’ அறக்கட்டளை அமைப்பின் அங்கீகாரத்தையும் இந்தத் திட்டம் பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்குப் பதிலீடாக ஒருபோதும் அமையாது என்பதை திரு வீரப்பன் வலியுறுத்தினார்.

“இந்தத் தொழில்நுட்பம் வழிகாட்டுதலைப் பெரிய அளவில் விரிவுபடுத்த மட்டுமே உதவுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் செயல்பட்டாலும், எந்த மாணவர் சிரமப்படுகிறார், யாருக்கு மனிதர்களின் நேரடி உதவி தேவைப்படுகிறது என்பதைப் பின்புலத்தில் உள்ள எங்கள் குழுவால் எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு நேரடியாக உதவ முடிகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தைத் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும், இந்தோனேசியா போன்ற மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்