மனவளர்ச்சி குன்றியோரைப் பராமரிக்கும் தொண்டூழிய மருத்துவர்

2 mins read
ec8471e1-e98a-4787-8d93-b52176d0f29b
தொண்டூழிய மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் பவானி, நோயாளிகளின் குடும்பங்கள் மகிழ்வுறுவதைக் கண்டு நிறைவடைகிறார். - படம்: கி.ஜனார்த்தனன்

பிள்ளைகளுக்கான மருத்துவராகப் பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வந்த டாக்டர் பவானி, மனநலத்துறையில் புதுமையை உருவாக்கியவர். கற்றல் குறைபாடு கொண்டோரைப் பராமரிப்பதற்காக முழுமையாக இயங்கும் முதல் மருந்தகத்தை நடத்தும் பெருமை அவரைச் சேரும்.

அறிவுப்புலன் குறைந்தோருக்கான ‘மைண்ட்ஸ்’ அமைப்பின்கீழ் இடம்பெற்ற இந்த மருந்தகம், 2017ஆம் ஆண்டு 2 குவீன்ஸ் ரோட்டில் திறக்கப்பட்டது.

நவம்பர் மாதத் தொடக்கத்தில் ‘ஹெல்த்கேர் ஹியூமெனிட்டி’ (Healthcare Humanity) விருது பெற்றவர்களில் டாக்டர் பவானி, 66, தன்னலமற்ற சேவைக்கான பிரிவில் கெளரவிக்கப்பட்டார்.

சென்னையின் பெசண்ட் நகரைச் சேர்ந்த டாக்டர் பவானி, 1985ல் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்து, பின்னர் 1994லிருந்து இன்றுவரையிலும் சிங்கப்பூரில் வசிக்கிறார்.. கணவரும் இரண்டு பிள்ளைகளில் ஒருவரும் மருத்துவர்கள்; மற்றொரு பிள்ளை வழக்கறிஞர். 

தொடக்கத்தில் குழந்தைநலன் மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் பவானி, மதியிறுக்கம் கொண்டோரையும் கற்றல் குறைபாடு உள்ளோரையும் கவனித்து வந்தார். ஆனால் பிள்ளைப் பராமரிப்பு மருத்துவமனையிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றுவதற்கான தகுந்த பராமரிப்புப் கட்டமைப்பு இல்லாததை டாக்டர் பவானி கண்டிருந்தார்.

இவர்களைப் பெரியவர்களுக்கான திட்டம் ஒன்றுக்கு மாற வகை செய்யும் இடம் ஒன்று இல்லையே என நான் பார்த்தேன். அதனால் நான் மிகவும் கவலைப்பட்டேன். இந்த அக்கறையே, தொண்டூழியத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு எனக்கு உந்துதலாக இருந்தது, என்று டாக்டர் பவானி கூறினார்.

கற்றல் குறைபாடு உள்ள நோயாளிகளின் பிரச்சினையைக் கண்டறிவதற்கு அதில் பழக்கமில்லாத மருத்துவர்கள் திணறக்கூடும் என்று டாக்டர் பவானி கூறுகிறார்.

“நோயாளிக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிகிறது. ஆனால் அவர் என்ன என்னிடம் சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை என்று மருத்துவர்கள் சிலர் கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதற்காக அவர்கள், பராமரிப்பாளர்களை அதிகம் நம்பியிருக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.

தொடர்புக்கு எப்போதும் வாய்வார்த்தைகள் தேவைப்படாது என வலியுறுத்திய டாக்டர் பவானி, நோயாளிகளுக்கு எந்தத் தொடர்புமுறை பிடித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முற்படுவதாகக் கூறினார்.

“முகபாவனை, சைகைகள், எழுத்து, படங்கள் எனப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்த நினைக்கும் மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளை நன்கு தெரிந்தவர்களாக இருப்பது சிறந்ததாகும்,” என்றும் அவர் கூறினார்.

அக்கறைக்குரிய சூழ்நிலைகளில் நோயாளிகளைக் கையாண்டு அவர்களைச் சாந்தப்படுத்தும் முறையில் உள்ள மூன்று அங்கங்களை டாக்டர் பவானி விவரித்தார். 

“நோயாளிகளிடத்தில் சலனத்தைத் தூண்டுபவை யாவை என்பதை எமது பணியாளர்களும் தொண்டூழியர்களும் அறிவர். பராமரிப்பாளர்களை அவற்றைப் பற்றிச் சிறிய குறிப்புப் புத்தகத்தில் எழுதிவைப்பர். நாங்கள் இத்தகைய ஏட்டைச் சுகாதாரக் கடப்பிதழ் (Health Passport) என்போம்,” என்று அவர் கூறினார். 

“நமது பராமரிப்பு முறையை ஒவ்வொரு நோயாளிக்குத் தகவமைத்துக்கொள்வது மற்றோர் அங்கமாகும். மூன்றாவதாக, சில நேரங்களில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களைத் தொடர்ச்சியாக கண்காணிப்போம்,” என்றும் டாக்டர் தபவானி கூறினார்.

இந்தப் பணிச்சுமை அதிகம் என்றாலும் அதனால் குடும்பங்கள் அடையும் பெரும் நன்மை, தம்மை ஊக்கப்படுத்துவதாக அவர் கூறினார். “நோயாளிகள் மட்டுமின்றி அவர்களது உறவுகளும் பயனடைகின்றனர்,” என்றார் டாக்டர் பவானி.

குறிப்புச் சொற்கள்