சிங்கப்பூரில் உள்ள ஒரு தலைமுறைக்குத் தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மாவு மில்லின் சத்தமும் தூக்குவாளியோடு வரிசையில் நிற்கும் கூட்டமும் அரைத்த மாவின் வாசமும்தான்.
உடனடி மாவுப் பொட்டலங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் சிங்கப்பூரில் இன்றும் பல குடும்பங்கள் தீபாவளிக்காக மில்லைத் தேடுகின்றன. அதற்குக் காரணம் வெறும் மாவு அல்ல, அதன் பின்னால் இருக்கும் பாரம்பரியமும் ருசியும்தான் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
50 ஆண்டுகளாக இயங்கிவரும் அரவை மில்லில் ஏறத்தாழ 31 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் திரு ஏ.வீரமணி, “தீபாவளி என்றால் ஒன்றரை மாதத்திற்கு முன்பே வேலைகள் தொடங்கிவிடும். மல்லி, மிளகாய், மஞ்சள் போன்ற மசாலா அரவைகள் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கும். தீபாவளி நெருங்கும்போது மாவு அரவை சூடுபிடிக்கும்,’’ என்றார்.
செல்வி மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு வீரமணி, 59, வாடிக்கையாளர் வரவையும் நினைவுகூர்ந்தார்.
தூக்குவாளியில் தெரியும் கூட்டுக் குடும்பம்
“முன்பு தீபாவளிக் காலங்களில் ஒரு நாளுக்குச் சராசரியாக 40 முதல் 50 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று தேவையானதை அரைத்துச் செல்வார்கள். இப்போது ஒரு நாளைக்கு 5 முதல் 10 பேர்தான் வருகிறார்கள். வரவு 80 விழுக்காடு குறைந்துவிட்டது,” என்றார் திரு வீரமணி.
முன்பு கூட்டுக் குடும்பங்களாக இருந்ததால் ஒரு குடும்பத்தினரே 4 முதல் 5 கிலோ, 8 கிலோ வரை அரைப்பார்கள். இப்போது தனிக்குடும்பங்கள் என்பதால் 1 அல்லது 1.5 கிலோதான் அரைக்கிறார்கள் என்பது இவரது அனுபவம் கண்ட உண்மை.
தீபாவளிக்கு மக்கள் விரும்பி அரைக்கும் மாவுகளில் முறுக்கு மாவுதான் பிரதானம். அதன் பிறகு நெய் உருண்டை மாவு, கடலை மாவு, அதிரச மாவு ஆகியவற்றை மக்கள் கேட்கின்றனர் என்ற திரு வீரமணி, மாவு மில்லில் மறைந்திருக்கும் நுணுக்கம் ஒன்றையும் பகிர்ந்தார்.
சர்க்கரை அரைப்பது தனிவிதம் என்றார் அவர். “இயந்திரம் சூடாகிவிட்டால் சர்க்கரை பாகாகி இயந்திரம் நின்றுவிடும். அதனால் தினமும் காலையில் இயந்திரம் குளிர்ந்திருக்கும்போதே 50 முதல் 100 கிலோ சர்க்கரையை மொத்தமாக அரைத்து வைத்துவிடுவோம். அதிரசத்திற்கு ஈர அரிசியைக் கொண்டுவருவார்கள். அதை கொரகொரப்பாக அரைக்க வேண்டும்” என்றார்.
கலப்படம் இல்லாத மாவு, கலப்படம் இல்லாத பாசம்
மாவு மில்லின் வாசலில் காத்திருந்த திரு பகீரதி, 62, “பாட்டி காலத்துப் பாரம்பரிய செய்முறைக்கு இந்த மில்லில் அரைக்கும் மாவுதான் சரியான பக்குவம் தரும். என் சிறிய குடும்பத்திற்காக ஒவ்வொன்றும் ஒரு கிலோ வீதம் அச்சு முறுக்கு, முறுக்கு மாவு அரைக்க வந்தேன். கடையில் வாங்குவதைவிட வீட்டில் மனைவியும் மகளும் கைப்படச் செய்து இறைவனுக்குப் படைக்கும்போது கிடைக்கும் மனநிறைவும் பெருமையும் அலாதியானது,” என்றார்.
மனைவி மகளுடன் வந்திருந்த திரு சிவராமன் கிருஷ்ணா, 40, ‘‘முன்னோர் பாரம்பரியத்தை இப்போதும் தொடர்கிறோம். தீபாவளிக்காக லட்டு செய்வதற்குக் கடலை மாவு, ரவை, அதிரச மாவு அரைக்க வந்துள்ளோம். கடைகளில் வாங்கும் மாவில் லட்டுக்கான சரியான பக்குவம் கிடைக்காது. ஆனால், அரைக்கும் மாவில்தான் அந்த அருமையான பக்குவமும் நறுமணமும் கிடைக்கும்,’’ என்று கருத்துரைத்தார்.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அரவை மில்லுக்கு வருவதாகக் கூறிய திரு ஜெயராமன் சங்கர், 42, “நம் கண்முன்னே அரைத்துக் கொடுக்கும் அந்தத் தூய்மையும் மாவின் மணமும் பிடிக்கும். இப்போது முறுக்கு மாவு, அதிரச மாவு கோதுமை மாவு அரைக்க வந்திருக்கிறோம். நம் குடும்பங்கள் கைகொண்ட பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இது அவசியமானது,’’ என்றார்.
அவர் மனைவி திருமதி ராம் கிருத்திகா, 40, “தீபாவளிக்கு முள்ளு முறுக்கு, காராசேவு செய்ய மாவு அரைக்க வந்திருக்கிறோம்,’’ என்றார்.
‘‘முள்ளு முறுக்குக்குரிய மாவு கடைகளில் கிடைக்காது. இங்கு அரைத்தால்தான் அதன் அசல் சுவை வரும். வீட்டில் குழந்தைகளோடு சேர்ந்து பலகாரம் செய்யும்போதுதான் குடும்பத்தின் பாசமும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்குச் செல்லும்,’’ என்று மேலும் கூறினார் அவர்.
தீபாவளிப் பலகாரங்களுக்காக அரைத்து வைத்திருந்த மாவு வாடிக்கையாளர்களைச் சென்றடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்தியவாறு மீண்டும் பேசத் தொடங்கினார் திரு வீரமணி.
“2006, 2008ஆம் ஆண்டுவரை அரவை மிக அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்களோடு ஓர் ஆழமான பந்தம் இருந்தது. பலகாரம் செய்தோம், இரண்டு நாள்களில் தீர்ந்துவிட்டது, மறுபடியும் தாருங்கள்’ என்று வந்து அரைப்பார்கள். அந்த மூன்று முதல் நான்கு வாரங்கள் மில்லே திருவிழா போல கலகலப்பாக இருக்கும்” என்று நினைவுகூர்ந்தார் அவர்.
“சில்லறை அரவைக்கென்றே தனி இயந்திரம், தனி பிளேடு ஒதுக்கி மூன்று ஊழியர்களைப் போடுவோம். மதிய உணவு இடைவேளைகூட எடுக்க முடியாத அளவிற்கு வரிசையில் மக்கள் நின்றுகொண்டே இருப்பார்கள்,’’ என்றும் அவர் சொன்னார்.
“அப்போதெல்லாம் பிள்ளைகள், பேரன் பேத்திகள் வருகிறார்கள், அவர்களுக்காகச் சீடை, முறுக்கு செய்யப்போகிறோம்’ என்று ஆசையோடு பேசுவார்கள். ஆனால் இப்போது கூட்டம் குறைந்திருக்கலாம். அளவும் குறைந்திருக்கலாம். ஆனால் மில்லில் அரைத்த மாவில் சுடும் முறுக்கின் மணமும் அதைச் சுற்றி இணையும் குடும்பத்தின் பாசமும் இன்றும் குறையவில்லை. அதுதான் சிங்கப்பூரில் இன்றும் தென்படும் பழமையை மறக்காத தீபாவளி.” என்று நிறைவு செய்தார் திரு வீரமணி.
