சிங்கப்பூரில் ஃபுட்பாண்டா, ஷெங் சியோங் நிறுவனங்கள் இணைந்து அண்மையில் நடத்திய தினசரி $10,000 அதிர்ஷ்டக் குலுக்கில், 61 வயது ராணி இரண்டு முறை வெற்றிபெற்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
செயலி மூலம் வழக்கம்போல மளிகைப் பொருள் ஒன்றை ஆர்டர் செய்ததே, அவருக்கு இரண்டு முறை $10,000 பரிசை வென்றுத் தந்துள்ளது.
உயிரணு நிபுணராகப் பணியாற்றும் திருவாட்டி ராணி, தம் கணவர், மகன், இல்லப் பணிப்பெண் ஆகியோருடன் வசித்து வருகிறார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மாதந்தோறும் மொத்தமாக வாங்கும் இவர், அவசரமாகத் தேவைப்படும் காய்கறிகள், இறைச்சி உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ஃபுட்பாண்டா செயலியை வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறார்.
வானொலி விளம்பரம் ஒன்றின் வாயிலாக, ஷெங் சியோங் - ஃபுட்பாண்டா நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த அதிர்ஷ்டக் குலுக்கு குறித்து இவருக்குத் தெரியவந்தது.
முதல் வெற்றி அளித்த இன்ப அதிர்ச்சி
முதன்முறையாக $10,000 வென்றதாகத் தகவல் கிடைத்தபோது, அதைத் திருவாட்டி ராணியால் நம்ப முடியவில்லை. அது ஏதோ ஒரு மோசடியாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தார் இவர். பின்னர் ஃபுட்பாண்டா நிறுவனம் மின்னஞ்சல் மூலம் இதை உறுதிப்படுத்திய பிறகே தாம் உண்மையிலேயே பரிசு வென்றதை நம்பினார்.
“ஒரு சாதாரண ஆர்டருக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை,” என்று இவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
மீண்டும் வெல்ல மகனே காரணம்
தமது இரண்டாவது வெற்றிக்குத் தம் மகனே முழுக் காரணம் என்று திருவாட்டி ராணி கூறினார்.
‘புல்டாக் கார்பனாரா’ நூடல்சை சாப்பிட வேண்டும் என்று இவரின் மகன் விரும்பியதால், அதை ஏற்கெனவே வேறோர் இணையத்தளத்தில் ஆர்டர் செய்திருந்தார்.
ஆனால், அது வந்துசேர தாமதமாகும் என்பதால், ஃபுட்பாண்டாவின் உடனடி விநியோகச் சேவையைப் பயன்படுத்தி அதே பொருளை ஆர்டர் செய்யும்படி தம் மகன் வலியுறுத்தியதை இவர் நினைவுகூர்ந்தார்.
இதனால், இந்த அதிர்ஷ்டக் குலுக்கில் இரண்டாவது முறையாக $10,000 வென்ற முதல் வாடிக்கையாளர் என்ற பெருமை திருவாட்டி ராணியைச் சேரும்.
தமது வெற்றியைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், முதன்முறையாக $10,000 வென்றபோது அலுவலக சகாக்களுக்கு ‘கறி பஃப்’ வாங்கி கொடுத்த இவர், இம்முறை அவர்களுக்கு பிரியாணி விருந்தளிக்கத் திட்டமிட்டுள்ளார்.
மேலும், இரண்டாவது வெற்றிக்குத் தம் மகனே காரணம் என்பதால், அவர் விரும்பிய ‘ஃபிஃபா’ உலகக் கிண்ண இறுதிப் போட்டிப் பந்தையும் ‘யுஏஃபா’ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிப் பந்தையும் அன்பளிப்பாக இவர் வாங்கி கொடுத்துள்ளார்.

