பெண்களின் நிதி மேலாண்மைத் திறனை வளர்க்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அன்-நஹ்தா பள்ளிவாசலில் சிறப்புப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) இந்திய முஸ்லிம் சமூக சேவைச் சங்கமும் (இம்சா) இணைந்து அதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
சிண்டாவின் ‘லெட் ஹெர் ஷைன்!’ திட்டத்தின்கீழ் நடைபெற்ற அந்தப் பயிலரங்கில் அன்-நஹ்தா, காசிம், தாருல் மக்முர், அன்-நயீம் ஆகிய பள்ளிவாசல்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
டிபிஎஸ் வங்கியில் இயக்குநராகப் பணியாற்றும் உமா முத்தையன் வழிநடத்திய அந்த ஒன்றரை மணி நேரப் பயிலரங்கில் கடன் மேலாண்மை, சேமிப்பு, அடிப்படை முதலீடுகள் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவாக விளக்கப்பட்டது.
இவ்விரு அமைப்புகளின் கூட்டுமுயற்சி மிகவும் அர்த்தமுள்ளது என இம்சா அமைப்பின் தலைவர் அனிசா ஃபருவீன், 36, குறிப்பிட்டார்.
“பெண்களுக்கு என்ன தேவை, அவர்களின் அறிவுத்திறனை எப்படி வளர்க்கலாம் என்பதை இம்சா அணுக்கமாக அறிந்துள்ளது. அதேவேளையில், சிண்டா வளங்களையும் ஆதரவையும் வழங்குகிறது. இந்த இரு பலங்களும் ஒன்றிணையும்போது அது சமூகத்திற்கு மிகுந்த நன்மையாக அமைகிறது,” என்றார் அவர்.
பெண்களின் தன்னம்பிக்கை வளரும்போது குடும்பம் வலுவடையும், குடும்பம் வலுவடையும்போது சமூகம் செழிக்கும் எனத் தெரிவித்த திருவாட்டி அனீசா, இந்நிகழ்ச்சி ஒரு தொடக்கமே தவிர முடிவன்று என்றும் சொன்னார்.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் சிண்டா நிர்வாகச் செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஹமீது ரசாக், எந்தவொரு செயலுக்கும் சரியான நோக்கம் அவசியம் என வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்று நாம் தூவும் இந்த நிதியறிவு எனும் விதை, நாளை வேரூன்றி ஒரு முழு மரமாக வளர்ந்து ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் வலிமை சேர்க்க வேண்டும்,” என்று அவர் நம்பிக்கையூட்டினார். மழை பெய்த ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகலிலும் நேரத்தை ஒதுக்கி வருகையளித்த பெண்களை அவர் பெரிதும் பாராட்டினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் முரசிடம் பேசிய டாக்டர் ஹமீது, இதுபோன்ற முயற்சிகள் சமூகத்தில் உள்ள இடைவெளிகளைக் களையும் ஒரு நீண்டகால அடித்தள முன்னெடுப்பு என்றார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பும் தாய்மார்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அடுத்தகட்டப் பயிலரங்குகள் அமையவுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, வேலைவாய்ப்பு நேர்காணல்களை எப்படிக் கையாள்வது, வேலைக்கான தன்விவரக்குறிப்பை (Resume) எவ்வாறு தயாரிப்பது போன்ற மனிதவள மேம்பாட்டுத் திறன்களைப் பெண்களுக்குக் கற்றுத்தரத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பலதரப்பட்ட பொறுப்புகளைச் சுமக்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைத்து, அவர்களின் மனநலனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் மட்டுமே தீர்வு காண முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் ஹமீது, சிண்டா, இம்சா போன்ற சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான நிலையத்தில் பணியாற்றும் ஆயிஷா, 44, கூட்டு வங்கிக் கணக்குகளில் உள்ள ‘அண்ட் / ஆர்’ (And/Or) விதிமுறைகளுக்கு இடையிலான வேறுபாட்டைத் தாம் முதல்முறையாக அறிந்துகொண்டதாகக் கூறினார். அத்தகைய குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளைக் கையாளும்போது இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இல்லத்தரசிகள் நிதிசார்ந்த விஷயங்களுக்குத் தங்கள் கணவரை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என அறிவுறுத்தினார் மற்றொரு பங்கேற்பாளரான ஷரிஃபா பீவி, 60.
தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு நிதி அதிகாரம் மிகவும் முக்கியம் என்ற அவர், குடும்பப் பணத்தைப் பாதுகாப்பாக நிர்வகிக்கப் பெண்கள் தங்களுக்கெனத் தனி வங்கிக் கணக்குகளைத் தொடங்கி நிதிச் சுதந்திரம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

