சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவுக்கு நவம்பர் 15ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதை முன்னிட்டு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் சுப.அருணாசலத்தின் நினைவாக அவரின் குடும்பத்தினரின் நிதியாதரவுடன் ‘சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி’ நடைபெறவுள்ளது.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை ஒட்டி நாட்டின் வளர்ச்சியைப் போற்றும் வகையில் பாடலை எழுத வேண்டும். பாடல் வரிகள், சிங்கப்பூர்ச் சூழலில் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக மூன்று பாடல்கள் வரை அனுப்பலாம். ஒரு பல்லவியும் நான்கு சரணங்களும் இருப்பதோடு ஒவ்வொன்றும் நான்கு வரிகளில் மொத்தம் 20 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேரும் போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற உறுப்பினர்கள் பங்கேற்கலாம். போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.
https://forms.gle/ZZPX2GC7uPmHKie5A எனும் இணைப்பு மூலம் பாடல்களை செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
நடுவர்களால் தெரிவு செய்யப்படும் மூன்று பாடல்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு $300, இரண்டாம் பரிசு $250, மூன்றாம் பரிசு $150. முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.
திரு சுப.அருணாசலம், 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். அவரது கணீர்க் குரலைக் கேட்டவர்கள் எளிதில் அதை மறந்திருக்க முடியாது. அவரது நினைவாக 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் போட்டி ஆண்டுதோறும் கண்ணதாசன் விழாவை ஒட்டி நடத்தப்படுகிறது.
மேல்விவரங்களுக்கு திரு சு.முத்துமாணிக்கம் – 9675 3215, திருவாட்டி பிரேமா மகாலிங்கம் – 9169 6996, திரு அன்புச்செல்வன் – 9850 7271, திரு கோ.இளங்கோவன் - 9121 6494 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம், அல்லது www.singaporetamilwriters.com இணையத் தளத்தை நாடலாம்.


