சிங்கப்பூரில் பவா செல்லதுரையின் பெருங்கதையாடல் நிகழ்ச்சி

சிங்கப்பூரில் பவா செல்லதுரையின் பெருங்கதையாடல் நிகழ்ச்சி

2 mins read
ed85f27f-f610-4868-9377-fa5c71fa813c
மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எனப் பல்வேறு உணர்வுகள் நிரம்பிய கதைகள், வாசகர்களை ஈர்ப்பதாகக் கூறினார் புகழ்பெற்ற எழுத்தாளரும் கதைசொல்லியுமான திரு பவா செல்லதுரை (இடமிருந்து இரண்டாமவர்). - படம்: நெப்போலியன்
Google News Preferred Icon

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் கதை சொல்லும் திறனால் பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்தவருமான திரு பவா செல்லதுரையின் பெருங்கதையாடல் நிகழ்ச்சி, சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் மே 30ஆம் தேதி நடைபெற்றது.

எழுத்தாளர் வண்ணநிலவனின் புகழ்பெற்ற படைப்பான ‘கடல்புரத்தில்’ நாவலைத் தமது பெருங்கதையாடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார் திரு பவா செல்லதுரை.

சிறந்த நாவல்களின் தன்மை, எழுத்தாளரின் நுட்பம் போன்றவற்றைத் தமது உரையில் எடுத்துரைத்ததுடன் சிறந்த வாசிப்பின் உச்சமாய்ப் படைப்புகளின் உண்மை நிலை அமைந்து விடுகிறது என்றார் அவர்.

மேலும், வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் கதாபாத்திரங்களாக மாற்றி, வாசகனுக்கு இயல்பாகக் கடத்தும் எழுத்தாளர்களின் திறமையையும் திரு பவா பாராட்டினார்.

மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எனப் பல்வேறு உணர்வுகள் நிரம்பிய கதைகள், வாசகர்களை ஈர்க்க முடிவதாக அவர் கூறினார்.

திரு பவாவின் இலக்கிய ரசிக நண்பர்களான எழுத்தாளர் உமாகதிர், பொறியாளர் பானுகுமார் ஆகியோர் நடத்திய இந்த நிகழ்ச்சியில், ‘பவா சொன்ன 50 கதைகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

கவிஞர் நெப்போலியன் நூலை வெளியிட, பொறியாளர் காமராஜ், பாக்கியா காமராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் எழுத்தாளர் பவா செல்லதுரையுடன் பார்வையாளர்களின் கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற்றது.

பதினாறு வயதில் ‘உறவுகள் பேசுகிறது’ என்ற நாவலை எழுதிய திரு பவா, ‘நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். 

‘சிதம்பர நினைவுகள்’, ‘சுமித்ரா’ போன்ற புகழ்பெற்ற மொழியாக்கங்களைச் செய்துள்ள அவர், விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கிறார்.

குணச்சித்திர நடிகராகவும் அவர், ‘வெந்து தணிந்தது காடு’, ‘பாராசூட்’ (வலைத்தொடர்), ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ‘சட்டம் என் கையில்’, ‘ஜெய் பீம்’, ‘மதிமாறன்’ ஆகிய படைப்புகளில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்