சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பங்காற்றிய காலஞ்சென்ற ஊடகவியலாளர் ஜே.எம். சாலிக்கான நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
விக்டோரியா சாலை, தேசிய நூலககக் கட்டடத்தில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஜூன் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்திய ‘கதைக்களம்‘ நிகழ்ச்சியில் திரு சாலிக்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
கழகத்தின் முன்னாள் தலைவரும் திரு சாலியுடன் மீடியாகார்ப்பில் இணைந்து பணியாற்றியவருமான திரு நா.ஆண்டியப்பன், தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளரும் எழுத்தாளருமான திரு பொன் சுந்தரராசு, எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, எழுத்தாளர் இலியாஸ், வளரும் எழுத்தாளர் மஹ்ஜபீன் ஆகியோர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
மே 30ஆம் தேதி காலமான திரு சாலியுடனான தங்களது அனுபவங்களையும் நினைவுகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இலக்கியம், எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுதல், சமூகப் பணிகளில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என திரு சாலியின் பண்புநலன்களையும் அரும்பணிகளையும் அவர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
ஏறக்குறைய 50 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, இலக்கிய மரபையும் சமூகப் பங்களிப்புகளையும் போற்றும் வகையில் அமைந்தது.
திரு சாலி எழுதிய ‘ஒரு கிளைப் பறவை’ என்னும் சிறார் நூலைத் திரு பிரம்மகுமார் அறிமுகம் செய்தார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தாமும் திரு ஜே.எம்.சாலியும் ஒரே செய்திப் பிரிவில் பணியாற்றியதாகத் திரு ஆண்டியப்பன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“அவர் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர்; மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர், செய்தியைக் கச்சிதமாக எழுதக்கூடியவர், பழகுவதற்கு மிக இனிமையானவர்,” என்று திரு ஆண்டியப்பன் குறிப்பிட்டார்.
திரு சாலி ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர், சக படைப்பாளர்களைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் தயங்காதவர் என்று கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ புகழாரம் சூட்டினார்.
திரு சாலியுடனான இனிய நினைவுகளைப் பகிர்ந்த தாரகை முத்தமிழ்க் கழகத் தலைவர் மஹ்ஜபீன், “எனக்கும் என் மகளுக்கு அவர் நிறைய ஊக்கமளித்தார். அங்கும் அவர் எனக்கு நிறையப் புத்தகங்களை வழங்கினார். அவர் யாரிடமும் கடிந்து பேசத் தெரியாதவர்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

