வாழ்க்கை என்பது இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றியது மட்டுமன்று. மாறாக, நாம் ஒருவருக்கொருவர் எப்படி இரண்டாவது வாய்ப்பாக இருக்கிறோம் என்பதைப் பற்றியது என்றார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
60ஆம் ஆண்டு தேசிய தினச் சிறப்புக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டின் மஞ்சள் நாடா சமூகக் கலை விழா, கைதிகள் உருவாக்கிய 60 கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தும்.
கலை விழாவின் தொடக்கமாகக் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1), ‘ஒன் ஹாலந்து வில்லேஜ்’ வளாகத்தில் இந்தக் கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரது மனைவி ஜேன் இத்தோகி இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். பின்னர் அதிபர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“யாரும் தங்களுடைய தவறுகளால் வரையறுக்கப்படக்கூடாது என்பதை மஞ்சள் நாடா திட்டம் நமக்கு நினைவூட்டுகிறது,” என்றார் அதிபர் தர்மன்.
‘நாம் ஒருவருக்கொருவர் இரண்டாவது வாய்ப்பு’ என்ற கருப்பொருளை ஒட்டிக் கைதிகளின் உணர்வுகள், இன்னொரு வாய்ப்புக்கான நம்பிக்கை போன்றவற்றை இந்தக் கலைப்படைப்புகள் பிரதிபலிக்கின்றன. மேலும் இந்தக் கலைப்படைப்புகள் கைதிகளின் சமூகப் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பளிக்கின்றன.
‘ஒன் ஹாலந்து வில்லேஜ்’ வளாகத்தில் நடைபெறும் மஞ்சள் நாடா சமூகக் கலை விழாவைப் பார்வையிடும்படி அனைவரையும் ஊக்குவித்தார் அதிபர்.
மஞ்சள் நாடா முயற்சிக்கு இளையர்களின் ஆதரவைத் திரட்ட உயர்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இரு பரிமாணக் கலைப்படைப்பு அல்லது ஒரு குறுங்காணொளியை மாணவர்கள் போட்டிக்குச் சமர்ப்பித்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடந்த போட்டியில் கிட்டத்தட்ட 58 பள்ளிகளிலிருந்து மொத்தம் 294 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.
சிறந்த இரு பரிமாணக் கலைப்படைப்புக்கு சிங்கப்பூர்க் கலைப் பள்ளி முதல் பரிசு பெற்றது. சிறந்த குறுங்காணொளிப் பிரிவில் நீ ஆன் உயர்நிலைப்பள்ளி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
கலை விழாவில் முதல் முறையாக, கைதிகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஆடைகளைக் கொண்ட ஆடை அலங்கார நடை நிகழ்ச்சி இடம்பெற்றது. தொண்டூழியர்கள், ஆடை அலங்கார நிபுணர்கள், அழகிப் போட்டிகளின் பங்கேற்பாளர்கள் ஆகியோர் அந்த ஆடைகளை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மஞ்சள் நாடா சமூகக் கலை விழாவைப் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஒரு சிறப்பு ‘ஆர்ட்ஸ் டிரக்’ வாகனம் தீவு முழுவதும் பயணம் செய்யும். இந்த வாகனம் 12 உயர்நிலைப் பள்ளிகள், மேற்கல்வி நிலையங்களுடன் 7 பொது இடங்களுக்கும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதி நாள்களில் முன்னாள் கைதிகளின் இசை நிகழ்ச்சிகளையும் நேரடியாகக் கேட்டு ரசிக்கலாம். லாப நோக்கற்ற அமைப்பான ‘நியூ லைஃப் ஸ்டோரிஸ்’, கைதிகளின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சிறார்க்கு எடுத்துக்கூறும் வகையில் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு https://www.yellowribbon.gov.sg/yellow-ribbon-project/yellow-ribbon-community-arts-festival என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.