தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டுச் சுவையில் இளம் சமையல் நிபுணரின் ‘நாசி லெமாக்’

2 mins read
cd196757-a255-4e3c-90f7-a311ea3a5958
வீட்டிலிருந்து இயங்கும் ‘நாசி லெமாக்’ வியாபாரமான ‘கம்போங் கெம்பங்கான்’ இவ்வாண்டு ஜனவரியில் தொடங்கி விரைவில் பிரபலமடைந்தது. - படம்: அசூர் மோகன் 

கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்தார் விரும்பி உண்ணும் ‘நாசி லெமாக்’ கடை மூடப்பட்டபோது சுவையான ‘நாசி லெமாக்’ கிடைப்பது சிரமமானது என்று உணர்ந்தார் சிங்கப்பூரைச் சேர்ந்த சமையல் நிபுணர் அசூர் மோகன், 26.

அதன் விளைவாக இவ்வாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘கம்போங் கெம்பாங்கான்’ விரைவில் பிரபலமடைந்தது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ‘கம்போங் கெம்பங்கான்’ வழி கிட்டத்தட்ட 100 பேர் ‘நாசி லெமாக்’ வாங்குவார்கள். இதில் பலர் தொடர்ந்து வருபவர்கள்.

சிங்கப்பூரின் பல பகுதிகளில் இருந்தும் இந்த வீட்டுச் சமையலைத் தேடி வருகிறார்கள்.

கெம்பாங்கான் வட்டாரத்தில் உள்ள அவர்கள் கூட்டுரிமைக் குடியிருப்பில் ‘நாசி லெமாக்’ தயாராகிறது. அசூருக்கு அவருடைய தாய், தந்தை, இல்லப் பணிப்பெண், எதிர்கால மனைவி அனைவரும் கைகொடுக்கின்றனர்.

அசூர் சிறு வயதிலிருந்தே சமையலில் ஆர்வம் கொண்டவர். பெற்றோர் இரவு உணவு தயாரிக்கும்போது அசூர் உடன் இருப்பார். சமையல் ஒரு பேரார்வம் மிக்கது 3 வயதில் உணர்ந்தார்.

விக்டோரியா தொடக்கக்கல்லூரியில் ஓராண்டு படித்தபின்னர், அசூர் துணிந்து முடிவெடுத்து தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சமையல் துறைசார்ந்த படிப்பில் சேர்ந்தார்.

“சிறுவயதிலிருந்தே சமையல் கலையில் ஆர்வம் கொண்டிருக்கும் அசூர் சமையலைத் தனது வாழ்க்கைத் தொழிலாக தேர்ந்தெடுக்க போவதாக கூறியபோது எங்களுக்கு அது ஒரு இயல்பான முடிவுதான் என்று தோன்றியது,” என்று அவரது தாய் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்று அசூரின் திட்டங்களைத் தாமதப்படுத்தியது. இருப்பினும் கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு தன் நண்பர்களுக்குச் சமைத்துக் கொடுத்தார்.

தொடர்ந்து, லண்டனில் உள்ள ‘லி கார்டன் புலு’ (Le Cordon Bleu) உலகப் புகழ்பெற்ற சமையல் பள்ளியில் சேர்ந்து தனது திறன்களை வளர்த்துக்கொண்டார். அதன்வழி லண்டனில் உள்ள மிசிலின் கையேட்டில் இடம்பெற்றிருக்கும் ‘மண்டிகா’ (Manteca) என்ற இத்தாலிய உணவகத்தில் எட்டு மாதங்கள் பயிற்சி பெற்றார்.

சிங்கப்பூர் திரும்பிய இந்த இளம் சமையல் நிபுணருக்கு சவால்கள் காத்திருந்தன.

“சிங்கப்பூரில் குழுவாக, ஒற்றுமையாகச் செயல்படுவது சற்று சிரமமானதாக இருந்தது. மேலும், நீண்ட நேர உழைப்பிற்கான சம்பளம் குறைவு. அதனால் உணவகம் தொடங்க விரும்பவில்லை,” என்றார் அசூர்.

சமையல் கலையில் புகழ்பெற்ற மிசிலின் ‘ஸ்டார்’ பெற்ற ‘நோரி’ (Nouri) உணவகத்தில் பணிபுரிந்தபின் அத்துறையிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்தார் அசூர்.

தற்போது விற்பனை, சந்தைப்படுத்துதல் துறையில் பணியாற்றுவதால் ‘கம்போங் கெம்பாங்கான்’ உருவெடுத்தது என்றார் அசூர்.

“வியாபாரத்தை விரிவாக்குவது அல்ல என் நோக்கம். மக்களுக்கு சுவையான உணவு கொடுப்பதே என் குறிக்கோள்,” என்று அவர் கூறினார்.

‘கம்போங் கெம்பாங்கான்’ வீட்டுத் தொழிலின் ‘இன்ஸ்டகிராம்’ சமூக தளத்தின்வழி பொதுமக்கள் ‘நாசி லெமாக்’ உணவை ஞாயிறு காலைகளில் வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்