சமய சேவைகளுக்கு வயது ஒரு பொருட்டன்று என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றனர் முஹம்மது இஸ்மாயீல், முஹம்மது நிஷாத் என்ற இரு இளையர்கள்.
பல்வேறு வயது, அனுபவங்கள் கொண்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளிவாசலில் திரண்டிருக்க முன்னின்று தொழுகையை நடத்துகின்றனர் இந்த இளையர்கள்.
சமயத்தின்மீது ஆழமான பற்றுகொள்ளவும், திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கும் வயது என்பதைத் தாண்டி ஆர்வமே அடிப்படை என்பது இவர்களது ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.
இவ்விருவர் மட்டுமன்றி, பென்கூலன் பள்ளிவாசல் மதரசாவிலிருந்து கிட்டத்தட்ட 12 பேர் முழு திருக்குர்ஆனையும் மனப்பாடம் செய்து தீவெங்கிலும் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் தொழுகையை வழிநடத்துகின்றனர்.
ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் கொண்ட திருக்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்ய குறைந்தது மூன்றாண்டுகள் ஆகலாம்.
கடந்த 2018ஆம் ஆண்டில் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கி நிதிச் சேவைத் துறை மாணவரான நிஷாத், 18, ரமலான் மாதத்தின் கடைசி 10 நாள்களில் இரவுநேரத் தொழுகையான ‘கியாமுல் லைல்’ தொழுகையை வழிநடத்தினார்.
“பென்கூலன் பள்ளிவாசலில் இவ்வாண்டு தொழுகையை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இதற்காகக் கடந்த ஓராண்டாகப் பயிற்சி மேற்கொண்டேன்,” என்றார்.
முதன்முறையாக நூற்றுக்கணக்கானோர் திரண்ட தொழுகையை முன்னின்று நடத்தியபோது பதற்றம் ஏற்பட்டதை நினைவுகூர்ந்த அவர், “பயமும் பதற்றமுமாகத் தொழுகையை வேக வேகமாக முடித்துவிட்டேன். சிலர் என்னிடம் வந்து சற்றே நிதானம் கொள்ளும்படி ஆலோசனை கொடுத்தனர். அதற்கேற்றவாறு அடுத்தடுத்த நாள்களில் மேம்படுத்திக்கொண்டேன்,” என்றார் நிஷாத்.
தொடர்புடைய செய்திகள்
முதலில் குர்ஆனைப் படிக்கத் தொடங்கியபோது தொழுகையை வழிநடத்துவேன் என நினைக்கவில்லை என்ற அவர், தற்போது மதினாவின் இமாம் ஷேக் அப்துல்லாவைப் பார்த்து வியப்பதாகவும் தெரிவித்தார்.
முழுக் குர்ஆனையும் மனப்பாடம் செய்து ரமலான் மாத இரவுகளில் மக்கள் முன்பு ஓதவேண்டும் என விரும்புவதாகச் சொன்னார் நிஷாத்.
தேசிய சேவையையும், குர்ஆன் வாசிப்பையும் ஒருசேர மேற்கொண்டு வருகிறார் முஹம்மது இஸ்மாயீல், 21.
பகுதிநேரமாக வார இறுதிகளில் மதரசாவில் பயின்றாலும், அன்றாடம் குறைந்தது இரண்டு மணிநேரம் குர்ஆன் படிக்க அவர் செலவிடுகிறார். “பெருவிரைவு ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது வசனங்களைப் படிப்பேன்,” என்றார் இஸ்மாயீல்.
இவ்வாண்டு முதன்முறையாக பென்கூலன் பள்ளிவாசலில் தொழுகையை முன்னின்று நடத்திய இவர், “நூற்றுக்கணக்கானோர் திரண்ட தொழுகையை வழிநடத்தியபின் பலரும் வந்து வாழ்த்தினர். அது இன்னும் சிறப்பாகச்செயல்பட ஊக்குவிப்பாக அமைந்தது,” என்றார்.
முழு திருக்குர்ஆன் மனப்பாடம் செய்வதுடன், அதன் அர்த்தத்தையும் உணர்ந்து படிக்க ஆசை என்றும் தெரிவித்தார் இஸ்மாயீல்.
முழு குர்ஆனையும் மனனம் செய்துள்ள இரு சகோதரர்களைக் கண்டு ஊக்கம் பெற்று வாசிக்கத் தொடங்கியுள்ளார் உயர்நிலைப் பள்ளி மாணவர் முஹம்மது அப்துல்லா,13.
“இரண்டு ஆண்டுகளாகப் பயில்கிறேன். இன்னும் ஈராண்டுகளில் முழுவதுமாக மனனம் செய்துவிடுவேன் என நம்புகிறேன். என் சகோதரர்களைப்போல, மதினா இமாம்களைப் போல தொழுகையை வழிநடத்த ஆசை,” என்றார் இவர்.
கடந்த 16 ஆண்டுகளாக பென்கூலன் பள்ளிவாசல் மதரசாவில் குர்ஆன் ஆசிரியராக உள்ள மெளலவி ஹாபிஜ் எஸ் ஏ கலீல் அஹமது ஹசனி, 49, “குர்ஆனில் உள்ள ஒழுக்கம் உள்ளிட்ட நற்கூறுகளைக் கற்றுக்கொண்டு இளம்பிள்ளைகளைச் சிறந்த மனிதர்களாக உருவாக்குவதே நோக்கம்,” என்றார்.
அவர்களை வழிநடத்துவோராக உருவாக்க உழைப்பதில் பெருமையென்றும், அதற்கு நிர்வாகம் அளிக்கும் ஆதரவு அளப்பரியது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பென்கூலன் பள்ளிவாசல் தலைவரான ஹாஜி மு.யூ. முஹம்மது ரஃபீக், 61, “இமாம்கள் அதிக நேரம் செலவிட்டு இளம் இமாம்களை உருவாக்க உழைக்கின்றனர். அவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக நிர்வாகம் அமைகிறது,” என்றார்.
மேலும், சிங்கப்பூரில் மாணவர்களுக்குக் கல்வி, பிற நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் குர்ஆனையும் பயிலும் சூழல் அமைவது கடினம். அதனைத் தாண்டிய அவர்களது அர்ப்பணிப்பும், பெற்றோர் காட்டும் ஆர்வமும், இமாம்களின் உழைப்பும் அதற்குக் காரணம் என்றார் திரு ரஃபீக்.

