இளையர்களின் செயற்கை நுண்ணறிவுச் சார்புநிலை மனநலனைப் பாதிக்கும்: வல்லுநர்கள் எச்சரிக்கை

இளையர்களின் செயற்கை நுண்ணறிவுச் சார்புநிலை மனநலனைப் பாதிக்கும்: வல்லுநர்கள் எச்சரிக்கை

படம்: எஸ்பிஎச் மெகசின்ஸ்

11 Oct 2026 - 8:52 pm

3 mins read

செயற்கை நுண்ணறிவு மீது இளையர்களின் மிதமிஞ்சிய சார்புநிலை அவர்களது மனநலனைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது (ஏஐ) தொடக்கத்தில் பல்வேறு கருப்பொருள்களின்கீழ் படங்களை உருவாக்கவும் குறிப்பிட்ட சூழல்களில் பொருத்தமான குறுஞ்செய்திகளை எழுதவும் வேலைத் தேடலுக்கும் பணிச் சூழலை எளிமைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பயணத் திட்டங்களை வகுக்கவும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளைப் புரிந்துகொள்ளவும் பயன்பட்ட செயற்கை நுண்ணறிவு, காலப்போக்கில் செயற்கைத் தோழர்களை உருவாக்கித் தனிமையைப் போக்கும் ஒரு வழியாகவும் உருவெடுத்துள்ளது.

தற்போது செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் ஆட்கொண்டுள்ளதுடன், இணையத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பயன்பாட்டிலும் உரையாடலிலும் பரிவர்த்தனையிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மேலும், தரவு மையங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் இயற்கைக்கு மாறான வறட்சிச் சூழலை உருவாக்குவதுடன் சுற்றுச்சூழலுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இளையர்களிடையே செயற்கை நுண்ணறிவுச் சார்புநிலை தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்தச் சார்புநிலையின் தீவிரத்தைக் கணக்கிட ஆய்வாளர்கள் ‘செயற்கை நுண்ணறிவுச் சார்பு அளவுகோல்’ என்ற உளவியல் ரீதியிலான அளவீட்டுக் கருவியை உருவாக்கியுள்ளனர். இது, உரையாடல் முகவர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மீதான ஒருவரின் உளவியல், நடத்தை மற்றும் அறிவாற்றல் சார்ந்த மிதமிஞ்சிய சார்புநிலையை அளவிடப் பயன்படுகிறது.

மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு என்பது சரியான விடைகளைத் தேடும் நேரத்தைக் குறைத்து, சிந்தனை எல்லையை விரிவுபடுத்தும் கற்றல் துணைக் கருவியாகக் கருதப்பட்டது.

கல்வியியல் பணிகளுக்காக 94.9 விழுக்காடு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தினாலும், இதன் மீதான கடுமையான சார்புநிலை காரணமாகக் கணிசமான பயனர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவதைத் தவிர்த்து, எழுதுதல், சுருக்குதல் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் செயற்கை நுண்ணறிவையே நாடும் சூழல் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கல்வித் துறையைத் தாண்டி, சமுதாயக் கட்டமைப்பிலும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் ஊடுருவி, மனிதர்களுக்கிடையிலான தொடர்பை மாற்றி வருகிறது. பதின்ம வயதினர் மற்றும் இளம் பருவத்தினரில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சமூகத் தொடர்பு, உணர்வுபூர்வ ஆதரவு அல்லது காதல் உறவுகளுக்கு இத்தகைய கருவிகளையே சார்ந்துள்ளனர். இளையர்கள் புதிய தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்பவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள குருகிராம் எஃப்.எம்.ஆர்.ஐ. கோர்டிஸ் தேசிய மனநலத் திட்டத்தின் தலைவர் டாக்டர் சமீர் பரீக், இளம் வயதிலிருந்தே இணையத்தில் தேடவும் வாசிக்கவும் பழகிய சூழலில், அவர்கள் குறுஞ்செய்தி உரையாடல்களிலேயே அதிகம் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கணக்குச் சிக்கல்களுக்குச் சரியான விடையைத் தரும் செயற்கை நுண்ணறிவை அவர்கள் தங்களது தனிப்பட்ட உறவுமுறை ஆலோசனைகளுக்கும் பழகத் தொடங்குகின்றனர். மனிதர்களுக்கிடையிலான உரையாடல்களையும் தங்களது சொந்த அறிவாற்றல் சிந்தனையையும் தவிர்த்து, செயற்கை நுண்ணறிவு தரும் தகவல்களை இளையர்கள் நாடும்போது, அது அவர்களின் கல்வி, பணி மற்றும் சமூக வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கத் தொடங்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்

மனநலச் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது வழக்கமாக நம்பிக்கைக்குரியவர்களிடமோ அல்லது மருத்துவ நிபுணர்களிடமோ ஆலோசிக்கும் நிலை மாறி, உணர்வுகளை வெளிப்படுத்தவும் அறிவுரைகளைப் பெறவும் சாட்பாட்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரில் மனநலம் குறித்த ஏஷியாஒன் நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 1,007 பேரில், ஏறத்தாழ 47 விழுக்காட்டினர் கடந்த ஆறு மாதங்களில் மனநலச் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மனநலச் சவால்களைச் சந்தித்தவர்களில், தங்களது மனக் குமுறல்களைப் பகிர்ந்துகொள்ள நெருங்கிய நண்பர்கள் (34 விழுக்காடு), மனநல நிபுணர்கள் (26 விழுக்காடு) மற்றும் வாழ்க்கைத்துணை (21 விழுக்காடு) ஆகியோருக்கு அடுத்தபடியாக, நான்காவது முக்கியத் தேர்வாகச் செயற்கை நுண்ணறிவுச் சாட்பாட்களையே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில், ஐந்தில் ஒருவர் தங்களது மனக்கவலைகள் குறித்து யாரிடமும் பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்