இந்தியச் சமூகம் நல்ல கரங்களில் உள்ளது என்றும் அனைவரும் ஒன்றிணைந்து பெரிய அளவில் கனவு கண்டால், சமூகமாக பல முன்னேற்றங்களைக் காண முடியும் என்றும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.
ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற 2026 சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாடு, சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இளையர்கள் சமூகத்திற்குத் திருப்பித் தரவும் சமூகத்தை மேம்படுத்தவும் தெளிவான ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் சொன்னார்.
தமது பல்கலைக்கழகக் காலத்தை நினைவுகூர்ந்த திரு தினேஷ், 1994ல் தமிழ்ப் பேரவையின் ‘சங்கே முழங்கு’ நிகழ்ச்சியில் ஒளியமைப்புப் பணிகளில் தாம் ஈடுபட்டதைப் பகிர்ந்துகொண்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பேரவை அந்த அடித்தளத்திலிருந்து பன்மடங்கு வளர்ந்துள்ளதை அவர் பாராட்டினார்.
மேலும், வெற்றியின் இலக்கணத்தை ஒவ்வொருவரும் பரந்த நோக்கில் வரையறுக்க வேண்டும் என்று இளையர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு இளையர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
“மற்றவர்களுக்கு வேலை கிடைத்துவிட்ட நிலையில், உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். உங்களுக்கான வேலைவாய்ப்புகளும் நிச்சயமாகக் காத்திருக்கின்றன. எனவே, இல்லாத பிரச்சினைகளை எண்ணி, தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்,” என்று துணையமைச்சர் தினேஷ் கூறினார்.
பேரவையின் ஏற்பாட்டில் ‘இணை’ குழு, தமிழ் முரசு, சிண்டா, மக்கள் கழக நற்பணிப் பேரவை ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் இந்த மாநாடு சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாண்டு உருவாக்கப்பட்ட ‘இணை’ குழுவின் முதல் கருத்தரங்கு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்றதையடுத்து, இளையர்களை மையப்படுத்தி நடைபெறும் முதல் பெரிய அளவிலான மாநாடு இதுவாகும்.
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன், தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர் ஆகியோருடன் இதர சமூக அமைப்புகளின் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.
தமிழ் முரசின் 90ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வாகவும் இந்த மாநாடு அமைந்தது.
சமூகத்துடன் பயணத்தைத் தொடங்கி, இனி அது இளையர்களின் கைகளில் தொடரும் என்று திரு ராஜசேகர் குறிப்பிட்டார்.
எதிர்காலம் இளையர்களின் கைகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அடுத்த தலைமுறையினரை முழுமையாக நம்பி, அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். சவால்களை வாய்ப்புகளாக மாற்றிச் செயல்பட அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“இந்த மாநாடு வெறும் ஆய்வறிக்கைகளுடனோ பேச்சு களுடனோ முடிந்துவிடக்கூடாது. இது கட்டாயம் உறுதியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க வேண்டும்,” என்று தமிழ்ப் பேரவையின் தலைவரான மா.மோகனன் தமது உரையில் வலியுறுத்தினார்.
கடந்த ஆறு மாதங்களாக சமூகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோருடன் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களின்மூலம் இளையர்களின் விருப்பங்கள், மனநலம், கலை-கலாசாரம், சமூகத் தலைமைத்துவத் தொடர்ச்சி ஆகிய நான்கு முக்கியக் கூறுகள் ஆழமாக ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த சிண்டா, நற்பணிப் பேரவை போன்ற சமூக அமைப்புகளின் பங்காளித்துவம் மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.
சேகரிக்கப்பட்ட தகவல்களைத் தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்கள் மேடையில் படைத்தனர். அவர்களுடன் இணைந்து சிண்டா, நற்பணிப் பேரவை இளையர் பிரிவு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இளையர்களைச் சமூகப் பணிகளில் எவ்வாறு ஆழமாக ஈடுபடுத்துவது என்பது குறித்து மேடையில் பகிர்ந்துகொண்டனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் மேசைவாரியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். குழுக் கலந்துரையாடல்களின் முடிவுகள் சுருக்கமாக மேடையில் படைக்கப்பட்டன.
அத்துடன், கல்வியிலும் சமூக ஈடுபாட்டிலும் சிறந்து விளங்கும் ஐந்து மாணவர்களுக்குத் தமிழ்ப் பேரவையும் சிங்கப்பூர் இந்தியர் கல்விக் அறக்கட்டளையும் இணைந்து ஒவ்வொருவர்க்கும் $1,500 மதிப்பிலான கல்வி உதவிநிதியை வழங்கின.

