எக்ஸ்போவில் ‘ஸாக் சலாம் இந்தியா’ மாபெரும் தீபாவளிச் சிறப்பு விற்பனை

எக்ஸ்போவில் ‘ஸாக் சலாம் இந்தியா’ மாபெரும் தீபாவளிச் சிறப்பு விற்பனை

20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
படம்: சுந்தர நடராஜ்

21 Oct 2026 - 5:08 am

3 mins read

தீபாவளியை முன்னிட்டு, ‘ஸாக் சலாம் இந்தியா’ விற்பனை விழா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) பெரும் வரவேற்புடன் தொடங்கியது.

2007ல் தொடங்கிய ஸாக் சலாம் இந்தியா, உள்ளூர் மக்களுக்கு இந்தியத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி அவற்றை விற்று வருகிறது. இவ்வாண்டு ஸாக் சலாம் இந்தியா அதன் 20வது ஆண்டு நிறைவைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது.

வழக்கமாக மூன்று நாள்களுக்கு நீடிக்கும் இந்த விற்பனை விழா, இம்முறை அக்டோபர் 16லிருந்து 25 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை, சிங்கப்பூர் எக்ஸ்போ ஹால் 9ல் பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வருவதோடு மக்கள் பொழுதைக் களிக்க ஏராளமான நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வெவ்வேறு விதமான பொருள்களை வாங்கும் அனுபவத்தை ஒரே கூரையின்கீழ், சிறப்பு தீபாவளித் தள்ளுபடியுடன் இவ்விழா வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

டெல்லி, மும்பை, தமிழ்நாடு போன்ற இடங்களுக்கு அப்பாற்பட்டு மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் ஆடை அணிகலன்களும் கைவினை நகை வேலைப்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

“வடஇந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வித்தியாசமான துணிமணிகளை இங்கு விற்பதாகக் கேள்விப்பட்டு வந்தேன். இங்குள்ள ஆடைகளின் தொகுப்பு மிகவும் விரிவாகவும் பல வடிவங்களிலும் வடிவமைப்புகளிலும் உள்ளன,” என குறிப்பிட்டார் வாடிக்கையாளரான பியன்கா, 26.

“தோடு, வளையல் போன்றவற்றையெல்லாம் தீபாவளிக்காக வாங்க வந்திருந்தேன். முந்தைய விற்பனை விழாவுடன் ஒப்பிடும்போது, இம்முறை விழா இன்னும் பெரிய ஹாலில் அமைந்துள்ளது. இதனால், பார்ப்பதற்கு நிறைய உள்ளது, அனுபவமும் இன்னும் சிறப்பாக உள்ளது,” எனக் குறிப்பிட்டார் கீதா சிவராமன், 33.

நவீன ஆடைகள், நவரத்தின நகைகள், நாவூறும் அறுசுவை உணவு என 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரர்களின் வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அங்கமாக விளங்கும் உணவங்காடிக் கடைகளை நினைவுகூரும் அதே நேரம், இந்தியக் கைவண்ணம் மாறாத ஓர் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறது ‘ஹாக்கர் பிரூ’.

‘ஹாக்கர் பிரூ’ கடையை நடத்திவரும்  (இடமிருந்து) அமீனா ஹைலூர் ரஹமான், 29, அப்ருல்ஹாக் ஃபைசார், 32, ஆஷிக் இலாஹி, 26.
‘ஹாக்கர் பிரூ’ கடையை நடத்திவரும் (இடமிருந்து) அமீனா ஹைலூர் ரஹமான், 29, அப்ருல்ஹாக் ஃபைசார், 32, ஆஷிக் இலாஹி, 26. - படம்: சுந்தர நடராஜ்

“தீபாவளிப் பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு வடை, சமோசா போன்ற இந்திய உணவுகளை விற்கிறோம்,” என்றார் ‘ஹாக்கர் பிரூ’ கடையைத் தம் கணவரோடு நடத்திவரும் அமீனா ஹைலூர் ரஹமான், 29.

சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தை வெளிப்படுத்த, சார்டீன் கறி பஃப் போன்ற சிங்கப்பூர் உணவுகளை விற்பதாக அவர் பகிர்ந்தார்.

மேலும், வீட்டு அலங்காரப் பொருள்கள், அன்றாட வாழ்க்கைக்கு அழகுக்கூட்டும் அம்சங்கள், வாசனைத் திரவியங்கள் போன்ற கடைகளும் விழாவில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு கடையும் தீபாவளியை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குகிறது. வாசனைத் திரவியங்களைச் சொந்தமாகத் தயாரிக்கும் ‘ஹண்ஸான்ஸ்’ கடையும் அதில் அடங்கும்.

“ஷனெல் போன்ற சின்னங்களின் வாசனைத் திரவியங்கள் அதிக விலைக்கு விற்கப்படும். ஆனால், அதே வாசனைத் திரவியத்தை கட்டுப்படியான விலையில், நீண்ட நேரத்திற்கு நீடிக்கக்கூடிய அளவிற்கு நாங்கள் தயாரிப்போம்.

“மக்களும் தங்களுக்கு விருப்பமான வாசனைத் திரவியத்தைத் தயாரிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் நறுமணங்களை நாங்கள் நேரடியாகக் கலந்து கொடுப்போம்,” என்றார் ‘ஹண்ஸான்ஸ்’ இணை நிறுவனர் முஹம்மது அன்சாரி, 43.

‘ஹண்ஸான்ஸ்’ வாசனைத் திரவிய நிறுவனத்தை நடத்திவரும் (இடமிருந்து) முஹம்மது அன்சாரி, 43, முஹம்மத் ஃபர்ஹான், 37, முஹம்மத் ஷாபிஈ, 42, முஹம்மது ஷார்ஃபிருதீன், 44.
‘ஹண்ஸான்ஸ்’ வாசனைத் திரவிய நிறுவனத்தை நடத்திவரும் (இடமிருந்து) முஹம்மது அன்சாரி, 43, முஹம்மத் ஃபர்ஹான், 37, முஹம்மத் ஷாபிஈ, 42, முஹம்மது ஷார்ஃபிருதீன், 44. - படம்: சுந்தர நடராஜ்

வாடிக்கையாளர்கள் வாங்கும் வாசனைத் திரவியங்களின் எண்ணிக்கைக்கேற்ப, தள்ளுபடி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22 வரை, கடன் அட்டையைக் கொண்டு குறைந்தபட்சம் $50க்கு வாங்கப்படும் பொருள்களுக்கு 96 மணி நேரத்திற்குள் ‘கேஷ்பேக்’ பெறலாம்.

காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிக்குள் விற்பனை விழாவிற்கு வரும் முதல் 100 குடும்பங்களுக்கு பிரத்தியேக அன்பளிப்புப் பைகளும் வழங்கப்படும்.

அத்துடன், துபாய், லண்டன், பாரிஸ், நியூயார்க், ரோம் உள்ளிட்ட நகர்களுக்குச் செல்ல விமானப் பற்றுச்சீட்டு வெல்லும் வாய்ப்பும் விழாவிற்கு வருகை தருவோருக்கு கிட்டும்.

அதுமட்டுமன்றி, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண இரண்டு நுழைவுச்சீட்டுகளை அதிர்ஷ்டக் குலுக்கில் தினமும் வெல்லலாம்.

விழாவுக்கு வருவோர் ரங்கோலி, சமையல், சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொண்டு திறனை வெளிப்படுத்தி பரிசுகளைத் தட்டிச் செல்லலாம். போட்டிகளில் கலந்துகொள்ள இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

அதோடு, ‘ஸாக் சலாம் சமூக விருதுகள்’ எனும் விருதளிப்பு நிகழ்ச்சியும் ஒரு சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 19 முதல் அக்டோபர் 22 வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ‘ஹர் யாசின்’ பிரியாணிக் கடை வழங்கும் அறுசுவை உணவு விருந்திலும் மக்கள் கலந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்