சிங்கப்பூர் அரசியல் களம் கடந்த வாரம் பல மாற்றங்களைக் கண்டது. வாரம் தொடங்கியதும் திடுக்கிடும் செய்தியாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்துவந்த தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமின் திடீர் பதவி விலகல். அச்செய்தியை இன்னும் சரியாக ஏற்கமுடியாத நிலையில் மனத்தைக் குழப்பிக்கொண்டிருப்போர் ஏராளம்.
ஆனால், அதனைக் கடந்து முன்னோக்கிச் செல்லும்படி, பிரதமர் லாரன்ஸ் வோங், அமைச்சர் கா.சண்முகம், அமைச்சர் டெஸ்மண்ட் லீ முதலியோர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் சரிவர முழு விவரம் கிடைக்கவில்லை என்றாலும், திரு ஃபைஷால் தரப்பிலும் அரசுத் தரப்பிலும் அதனை ஏற்று நகரும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அச்செய்தி வெளிவந்து இரண்டே நாள்களில் பிரதமர் வோங் அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார். சிங்கப்பூரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் மாற்றங்கள் இவை. 2025ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முடிந்து 14 மாதங்கள் முடிந்த நிலையில், அவர் தமது அரசாங்கத்திற்கு மறுவடிவம் கொடுத்துள்ளார்.
அமைச்சரவை மாற்றங்கள் பற்றி சில மாதங்களாகச் சிந்தித்து வந்ததாகவும் இதுவே சற்று தாமதமாகச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார் பிரதமர்; இயன்றால் ஆண்டுதோறும் மாற்றங்களைச் செய்ய எண்ணியுள்ளதாகவும் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார்.
வெறும் நிர்வாக மாற்றங்களுக்கு அப்பால், தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பல முக்கியச் செய்திகளை உணர்த்துகின்றன. பல ஆண்டுகள் அரசாங்கத்தில் இருந்துவரும் அமைச்சர்களின் முதிர்ந்த அனுபவத்தின்மூலம் நாட்டின் நிர்வாகத்தை உறுதியாகக் கொண்டுசெல்லும் அதே வேளையில், அடுத்த தலைமுறை தலைவர்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டு விரைவுபடுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்பது நன்கு வெளிப்படுகிறது.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது நிர்வாகத்தின் உத்திபூர்வ நிலைத்தன்மைக்கு அரசாங்கம் அளிக்கும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நிலைகுலைந்துவரும் உலக அரசியல், பொருளியல் சூழலில் உறுதியான, செயலாக்க அரசாங்கத்திற்குத் தேவையான வழிகாட்டுதலையும் இளைய தலைவர்களுக்குத் தேவையான அனுபவப் பகிர்வையும் வழங்க மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் இணைந்து திரு சண்முகம் செயல்படுவார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஜெஃப்ரி சியாவ், டேவிட் நியோ, சிம் ஆன், ஜாஸ்மின் லாவ், கோ பெய் மிங் போன்ற தலைவர்கள் பதவி உயர்வு பெற்றிருப்பதும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதும் நான்காம் தலைமுறைத் தலைமைத்துவக் குழு முக்கிய உள்நாட்டுத் துறைகளின் பொறுப்புகளை உறுதியாகக் கையில் எடுத்திருப்பதைக் காட்டுகிறது.
இவை வெறும் பதவி மாற்றங்கள் அல்ல; மனிதவளம், கல்வி, வெளியுறவு போன்ற சிக்கலான கொள்கைத் துறைகளைக் கையாள்வதில் இளைய தலைவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அதனையும் தாண்டி, அரசாங்கங்கத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தைக் கொண்டு இத்தலைமைத்துவ மாற்றங்களை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்ற ஒர் அரசாங்க முதிர்ச்சி என்றேக் கூறவேண்டும்.
இதைப் போலவே, முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் நேரடியாக அரசியல் பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டிருப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
தங்களின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அவர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, சிங்கப்பூரில் அரசியல் தலைமைத்துவ மாற்றம் என்பது எப்போதாவது நடக்கும் நிகழ்வன்று என்பதையும் அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை என்பதையும் நினைவூட்டுகிறது. இது அரசாங்கத்திற்குப் புதிய பார்வையையும் பன்முகத்தன்மை கொண்ட செயல்பாட்டு அனுபவங்களையும் தொடர்ந்து கொண்டுசேர்க்கும்.
இந்த மாற்றம் ஆரோக்கியமான ஒரு சமநிலையைக் கொண்டுவந்துள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை அடித்தளமாய்க் கொண்டு, அதே வேளையில் இளைய தலைவர்களுக்குப் பரந்த வாய்ப்புகளையும் கூடுதல் பொறுப்புகளையும் வழங்குவதன்மூலம், தொடர்ச்சியையும் புதிய பார்வையையும் பிரதமர் ஒரே நேர்கோட்டில் இணைத்துள்ளார்.
அரசாங்கம் தனது இலக்குகளில் உறுதியாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும், எதிர்காலத்தை எதிர்கொள்ள தயார்நிலையிலும் உள்ளது என்பதை இந்த மாற்றங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.


