அண்மையில் தமிழ் முரசு நடத்திய செயற்கை நுண்ணறிவின்வழி தமிழைக் கற்பிக்கும் பயிலரங்கில் பங்கேற்ற தமிழாசிரியர்கள் 100 பேரும் பயன் பெற்றாலும், செயற்கை நுண்ணறிவுப் படைப்புகளில் தமிழ்ப் பிழைகள் இருப்பதைக் காண முடிந்தது. பிற மொழிகளை ஒப்பிடுகையில் தமிழில் பிழைகள் அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். இதற்கு நாம் என்ன செய்யலாம்? எதிர்காலத்தில் பிழைகள் குறையும் என அமைதியாய் இருந்துவிடலாம். இல்லையேல், பிழைகளைக் குறைப்பதில் நாம் பங்கு வகிக்கலாம். தமிழ்ச் சமூகமாக இச்சவாலை எதிர்கொண்டு, செயற்கை நுண்ணறிவுத் தளங்களை நமக்குப் பயன்படும் வகையில் உருவாக்கிக் கொள்வது நம் கைகளில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவின் அன்றாடப் பயன்பாடுகளின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆகையால், சிங்கப்பூர்த் தமிழைச் சரிவர வெளிப்படும் வகையில் அமைப்பது மாணவர்களுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும், அரசாங்கம் சார்ந்த அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்பது திண்ணம்.
எதிர்நோக்கும் சவால்களும் பிழையற்ற உருவாக்கமும்
இன்றைய முன்னணிச் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே பேரளவிலான பயிற்சித் தரவுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடுகையில், தமிழுக்கான உள்ளடக்கத் தரம் இன்னும் முழுமையான நிலையை எட்டவில்லை. இதனால் மொழிபெயர்ப்பு, கட்டுரை உருவாக்கம், தகவல் மீட்டெடுப்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பல நேரங்களில் இலக்கணப் பிழைகளையும், பிழையான மொழி நடையையும், சூழலுக்குப் பொருந்தாத வரிகளையும் வெளியிடுகின்றன.
குறிப்பாக, சொற்களின் நுட்பமான பொருள் வேறுபாடுகள், வாக்கிய அமைப்பு, மரபுத்தொடர்கள், வினைமுற்றுகள் ஆகியவற்றைக் கையாள்வதில் செயற்கை நுண்ணறிவு இன்னும் தடுமாறவே செய்கிறது. பிழையற்ற, துல்லியமான வெளியீடுகளைப் பெறாமல் முழுமையாக நம்பிப் பயன்படுத்த முடியாது. இந்த இடைவெளியைக் களைந்து, தமிழைச் செயற்கை நுண்ணறிவு உலகிற்குத் தகுந்தவாறு கொண்டுசெல்வதே தற்போதைய சவாலாகும்.
தரமான உள்ளடக்கமும் பயனாளர்களின் பயிற்சியும்
செயற்கை நுண்ணறிவு என்பது ‘உள்ளீடு எதுவோ, அதுவே வெளியீடு’ என்ற கோட்பாட்டின்படி இயங்குவது. அதற்கு நாம் எத்தகைய தரவுகளை ஊட்டுகிறோமோ, அத்தகைய முடிவுகளையே அது வழங்கும். நாம் செயற்கை நுண்ணறிவிற்குப் பயிற்சி அளிக்கும் படைப்பாளர்களாகவும் மாறவேண்டும். அதை ஒரு சமூகமாகச் செய்யும்போது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு
இப்பணியில் சிங்கப்பூரின் தமிழ்ச் சூழல் உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும். சிங்கப்பூரில் தமிழ்மொழியைத் தொழில்முறையாகவும் அன்றாடப் பயன்பாட்டிலும் நேர்த்தியாகக் கையாளும் திறன்வாய்ந்த வல்லுநர்கள் பலர் உள்ளனர்.
அவர்களில் ஒரு முக்கிய பிரிவினர் ஆசிரியர்கள். தமிழ் ஆசிரியர்களின் பாடத்திட்டக் குறிப்புகள், மாணவர்களுக்கான விளக்கவுரைகள், இலக்கண விதிகளைக் கற்பிக்கும் பயிற்சித் தாள்கள் ஆகியவற்றைச் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் புரிந்துகொள்ளும் வகையில் வகைப்படுத்தி அவற்றில் புகுத்தலாம். இம்முயற்சியைக் கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் முன்னின்று ஒருங்கிணைப்பது அவசியம்.
செய்தியாளர்களும் ஊடக வல்லுநர்களும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். சிங்கப்பூரில் தமிழை அன்றாடப் பயன்பாடாய்க் கொண்டவர்கள் இவர்கள். ‘தமிழ் முரசு’ ஊடகத்தினரும், ஒலி-ஒளி ஊடகத்துறையினரும் சமகால அரசியல், பொருளியல், உலக நடப்புகள் தொடர்பான செழுமையான, பிழையற்ற செய்திக் கட்டுரைகளையும், பல ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வைத்த சொற்பட்டியல்களையும் நெறிமுறைகளையும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயிற்றுவிக்க மாதிரிப் பயிற்சிகளாய் வழங்கிப் பங்களிக்கலாம்.
சிங்கப்பூர் நீதிமன்றம், நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர்கள் மிகக் கடினமான சட்டச் சொற்கள், ஆட்சி நிர்வாகக் கலைச்சொற்கள் ஆகியவற்றிற்கான முறையான தமிழாக்கங்களைத் தந்து நம் செயற்கை நுண்ணறிவுத் தளங்களைத் தரப்படுத்த உதவலாம்.
கூட்டுமுயற்சியின் பலம்
இவர்கள் தனித்தனித் தீவுகளாக இயங்கினால், இலக்கைத் தாமதமாகத்தான் அடைய முடியும். தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் ‘எஸ்ஜி மொழிபெயர்ப்பு’ (SG Translate) திட்டம், சிங்கப்பூர் தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றத்தின் திட்டங்கள் ஆகியவற்றுடன் கைகோத்து ஓர் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். சிங்கப்பூர்த் தமிழ் செயற்கை நுண்ணறிவுத் தரவு வங்கியை (Singapore Tamil AI Corpus) உருவாக்கி, சிங்கப்பூர்ப் பயன்பாட்டுச் சூழலையும் தேசியக் கலைச்சொற்களையும் உள்ளடக்கிய தரவுகளைப் பதிவேற்ற வேண்டும். அதோடு, தமிழ் மின்அகராதிகளையும், இலக்கண விதிமுறைகளையும் ஊட்டவேண்டும்.
தமிழ் மொழியை நவீன யுகத்திற்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்வது ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டுப் பொறுப்பாகும். செயற்கை நுண்ணறிவின் வருகை நம் மொழிவளத்தைப் பெருக்கும் அரிய வாய்ப்பு. ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடக வல்லுநர்கள் எனத் தமிழ் எழுதும் கரங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து உழைத்தால், செயற்கை நுண்ணறிவு உலகிலும் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும். பிழையற்று நடைபோடும். வாழும் மொழியாய்ச் செழித்தோங்கும்!
