எதிர்காலப் பொருளியல்: சவால்களை வென்று சாதனை படைப்போம்

எதிர்காலப் பொருளியல்: சவால்களை வென்று சாதனை படைப்போம்

2 mins read
d13673ea-8220-4658-875d-a51cec1f96d7
மாறிவரும் உலகச் சூழலில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி, தொழில்களையும் ஊழியர்களையும் காலத்திற்கேற்ப தயார்ப்படுத்துவது காலத்தின் கட்டாயம். - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களின் அதிவேக வளர்ச்சிக்கு மத்தியில், சிங்கப்பூர் தனது பொருளியல் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற எதிர்காலப் பொருளியல் மாநாட்டில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் வெளியிட்ட பொருளியல் உத்திமுறை மறுஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கை, நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கான புதிய வழிகாட்டியாக அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட 7,700க்கும் மேற்பட்ட வணிகங்கள், தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுடன் ஒன்பது மாதங்கள் விரிவாக ஆலோசித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் 32 பரிந்துரைகளும், சிங்கப்பூரை ஒரு நெகிழ்வுத்திறன் மிக்க உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஏனைய வல்லரசு நாடுகளைப்போல பெரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நேரடியாகப் போட்டியிடாமல், பாதுகாப்பான, நம்பகமான தொழில்நுட்பத் தீர்வுகளை உலகிற்கு வழங்கும் முதன்மை மையமாக சிங்கப்பூர் உருவெடுக்கும் என்ற அறிவிப்பு, நாட்டின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

அத்துடன், விண்வெளித் தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தித் துறை போன்ற புதிய எல்லைகளில் முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கப்படவுள்ளன. உள்ளூர் நிறுவனங்கள் உலகளவில் கால்பதிக்கவும் விநியோகத் தொடரை வலுப்படுத்தவும் புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன.

மறுபுறம், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை இந்த அறிக்கை உறுதிசெய்கிறது.

எளிதில் தானியக்கமாக்க முடியாத பராமரிப்புச் சேவைகள், சமூகப் பணிகள் போன்ற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் மேம்படுத்தப்படும். வேலையிழப்பை அல்லது பணி மாற்றங்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஆதரவு வழங்குதல், நிறுவனங்களின் வேலை சார்ந்த பயிற்சிகள், வாழ்நாள் கற்றல் மூலம் ஊழியர்களை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் அரணாகும்.

அதே சமயம், பொருளியல் வளர்ச்சி என்பது சமூக மேம்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பதை இம்மாநாடு ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது.

இதற்குச் சான்றாக சிறு, நடுத்தர நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பை எளிதாக்க ‘வோலென்டியர்இங்க்’ (VolunteerInc.) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்துடன் இணைந்து இந்த அணுகுமுறையை அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் 2030க்குள் 600 நிறுவனங்களைச் சேர்ந்த 6,000 ஊழியர்களைத் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் உலகச் சூழலில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி, தொழில்களையும் ஊழியர்களையும் காலத்திற்கேற்ப தயார்ப்படுத்துவது காலத்தின் கட்டாயம். அரசு, நிறுவனங்கள், ஊழியர்கள் என முத்தரப்பும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த மாபெரும் பொருளியல் உருமாற்றத்தை நாம் வெற்றிகரமாகச் சாத்தியமாக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்