தீபாவளி உணர்வும் பண்பும் ஆண்டு முழுவதும் சுடர்விடட்டும்

தீபாவளி உணர்வும் பண்பும் ஆண்டு முழுவதும் சுடர்விடட்டும்

படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

08 Nov 2026 - 5:29 am

2 mins read

இருள் நீங்கி ஒளி பிறப்பதையும், தீமை அழிந்து நன்மை வெல்வதையும், அறியாமை அகன்று அறிவுச்சுடர் மிளிர்வதையும் பறைசாற்றும் திருநாளாகத் தீபாவளி போற்றப்படுகிறது. அத்தோடு, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதற்கான நம்பிக்கையையும் இத்திருநாள் மக்களுக்கு ஊட்டுகிறது.

கொண்டாட்டத்தில் திளைக்கும் மக்கள், தங்களின் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு, செல்வம், உடல்நலம் என வாழ்வின் ஆகச் சிறந்த பேறுகள் அனைத்தும் கிட்ட வேண்டும் என உளமார வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டுச் சூழலில், தீபாவளிக் கொண்டாட்டம் இல்லங்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது சமூக நல்லிணக்கத்தின் பாலமாகவும் மிளிர்கிறது. இத்திருநாளில் வசதி குறைந்தோர், ஆதரவற்றோருக்கு உணவும் புத்தாடைகளும் வழங்கி மகிழ்வது நமது சமூகத்தின் தலையாய அறமாகத் திகழ்கிறது. பலரும் தன்னார்வத்தோடு பிறருக்குச் சேவை செய்யவும் தேவையில் இருப்போருக்குக் கைகொடுக்கவும் முன்வருகின்றனர். அதேபோல், தாத்தா, பாட்டி உள்ளிட்ட மூத்தோரின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசிபெறும் குடும்பப் பண்பாடும் அனைவரையும் இன்முகத்தோடும் புன்னகையோடும் எதிர்கொள்ளும் கனிவும் இத்திருநாளுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

இத்தகைய உன்னதத் தருணத்தில் ஓர் அடிப்படைக் கேள்வி நம் நெஞ்சில் எழுகிறது. இந்த நற்பண்புகளையும் வாழ்த்துகளையும் நாம் தீபாவளித் திருநாளையும் தாண்டி ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது? 

வாழ்வில் நாம் அறிவைத் தேடுவதும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி உழைப்பதும் சக மனிதர்கள்மீது கருணை பொழிவதும் மூத்தோரைப் போற்றிப் பணிவதும் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு மட்டும் உரித்தான கடமைகள் அல்ல. ஒவ்வொரு நாளுமே தீபாவளியாக மலர வேண்டும். அன்றாடம் நாம் மகிழ்வோடு இருப்பதும், நம்மைச் சுற்றியுள்ளோரின் நல்வாழ்வுக்காகவும் உலக அமைதிக்காகவும் மனதார வேண்டுவதும் நமது அன்றாட வாழ்வியல் நெறியாக மாற வேண்டும். இத்தகைய உயரிய சிந்தனைகளும் நற்செயல்களும் வெறும் ஒருநாள் சடங்காகவோ கொண்டாட்டமாகவோ சுருங்கிவிடலாகாது.

ஒவ்வொரு மனிதரின் நெஞ்சிலும் இந்தத் தீபாவளி உணர்வு தினந்தோறும் சுடர்விடுமானால், நமது குடும்பம் அமைதி பெறும், சமுதாயம் ஒருங்கிணைந்து பலப்படும், சிங்கப்பூர் தேசமும் ஒட்டுமொத்த உலகமும் அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்கு உகந்த உன்னத இடமாக மாறும்.

தீபாவளி உணர்த்தும் இந்த உயரிய பண்புகள் குறிப்பிட்ட ஒரு சமயத்திற்கோ பிரிவினர்க்கோ மட்டும் உரியதன்று. அது மனிதநேயத்தை முன்னிறுத்தும் ஓர் உலகளாவிய செய்தி.

நமக்கு நாமே சிறந்ததை உருவாக்கிக்கொள்வதும் மற்றவர்களின் வாழ்விலும் நன்மைகள் பெருக வழிவகை செய்வதுமே இதன் அடிப்படைத் தத்துவம். மாணவர்கள் நன்றாகப் படித்து அறிவைப் பெருக்க வேண்டும், ஊழியர்களும் தொழில்முனைவோரும் கடினமாக உழைத்து நியாயமான வழியில் பொருள் ஈட்ட வேண்டும். அதன் மூலம், நாம் மகிழ்வோடு வாழ்வதோடு மட்டுமல்லாமல், நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க இடைவிடாது பாடுபட வேண்டும்.

அதுவே உண்மையான தீபாவளி. ஒளியை எந்நாளும் நம் சமூகத்திற்கு வழங்குவது தீபாவளி. இன்று கடந்தும் ஆண்டு முழுவதும் அதே தீபாவளி உணர்வோடு செயல்பட உறுதி மேற்கொள்வோம்.

குறிப்புச் சொற்கள்
தீபாவளிகொண்டாட்டம்ஒற்றுமை