மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புதிய தாய்மொழிப் பயணம்

மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புதிய தாய்மொழிப் பயணம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Nov 2026 - 5:31 am

2 mins read

சிங்கப்பூரின் மாறிவரும் மொழியியல் சூழலும் நவீன மின்னிலக்கத் தொழில்நுட்பங்களும் தாய்மொழிகளுக்குப் புதிய உத்வேகம் வழங்கப் பல சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.

2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள், அனைத்து இனக் குழுக்கள் இடையேயும் ஆங்கில மொழி புழக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன.

குறிப்பாக, வீட்டில் தமிழில் அதிகம் பேசும் இந்தியர்களின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 36.7 விழுக்காட்டிலிருந்து 27.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் வீட்டில் பேசப்படும் மற்ற இந்திய மொழிகளின் பயன்பாடும் 13.2 விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாக சரிந்துள்ளது.

எனினும், இது கவலை தரும் செய்தி அல்ல. மாறாக, நமது தாய்மொழியைத் துடிப்புடன் மீட்டெடுப்பதற்கான ஓர் அழைப்பாகும்.

இளம் வயதிலிருந்தே தாய்மொழிப் பற்றை வளர்ப்பது நமது பண்பாட்டு வேர்களை உயிருடன் வைத்திருப்பதற்கு அவசியமாகும். இந்தச் சூழலில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீயின் அண்மைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஏப்ரல் 2027 முதல் விரிவுபடுத்தப்பட்ட லீ குவான் யூ இருமொழி நிதியத்தின்கீழ் 72,000 பாலர் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் தமிழ் முரசின் பாலர் முரசு உள்ளிட்ட தாய்மொழிப் பதிப்புகள் வழங்கப்படும்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் பங்காளித்துவச் செயல்நிறுவனகளையும் தனியார் பாலர் பள்ளிகளையும் இந்த மாணவப் பதிப்புகள் சென்றடையும்.

மேலும், மாணவர்கள் பதிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் முறை மாற்றப்பட்டு ஒவ்வொரு பாலர் பள்ளி மாணவருக்கும் தனித்தனிப் அச்சுப் பிரதி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

அதோடு ‘பாலர் முரசு’, ‘சிலிக் செர்டிக்’ (Cilik Cerdik) ஆகியவற்றுக்குத் துணையாகப் புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்படுவது காலத்திற்கு ஏற்ற உற்சாகமான மின்னிலக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

ஊடாடும் கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் இணைந்து கற்பதற்கான நவீன, சுவாரசியமான கருவிகளாக இந்தச் செயலிகள் திகழும்.

இருப்பினும், இத்தகைய தொடக்கக்கால முயற்சிகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவு அவசியம். இந்தப் பாலர் பள்ளி விரிவாக்கத்தைத் தவிர்த்து தமிழ் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து பாலர் முரசு இதழைத் தொடக்கநிலை ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கொண்டு செல்ல தமிழ் முரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நீட்டிப்பு இந்தக் காலகட்டத்திற்கு முக்கியமானது. மொழியின் அடிப்படையைப் புதிதாகக் கற்றுவரும் புதிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘பாலர் முரசு’ ஒரு முக்கியப் பாலமாகச் செயல்படுகிறது.

வகுப்பறைப் பாடங்களை மகிழ்ச்சியான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உள்ளடக்கங்களுடன் பாலர் முரசு வலுப்படுத்துகிறது. இதன்வழி வீட்டில் தமிழ் மொழியைக் கற்பதற்கான ஒரு முக்கியக் கருவியாகவும் இது அமைகிறது.

இருமொழிப் புலமை என்பது சிங்கப்பூரின் தனித்துவமான பலம். இது நமது பல்லினச் சமூகம் செழிக்கவும் உலகமயமாக்கப்பட்ட உலகில் கலாசாரங்களுக்கு இடையே பாலங்களை அமைக்கவும் உதவும் ஒரு வாழ்நாள் சொத்தாகும்.

நமது தேசியச் சிந்தனை நம்பிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும். தாய்மொழிகளின் வீழ்ச்சியைத் தடுப்பதை மட்டுமே நாம் இலக்காகக் கொள்ளக்கூடாது. மாறாக, இன்றைய இளையர்களுக்குச் சரியான கருவிகளை வழங்குவதன் மூலம் நமது தாய்மொழிகளின் வளர்ச்சியை நாம் துடிப்புடன் முன்னெடுத்துச் செல்கிறோம்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்பள்ளிபாலர் பள்ளிமாணவர் முரசு