வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு. ஆனால், உலகப் போக்கில் இப்போது ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் புறக்கணிக்க முடியாதவை.
ஒருபுறம், புனித ரமலான் மாதம் என்பது அன்பு, கருணை, ஒருவருக்கு ஒருவர் மரியாதையைப் போதிக்கும் ஒரு காலமாகும். ‘அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், ஒருவரை ஒருவர் மதியுங்கள்’ எனும் போதனைகள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தப் போதனைகளுக்கு நேர்மாறாக, உலகின் ஒரு பகுதியில் போர் மூண்டுள்ளது.
உலகம் முழுவதும் பல போர்கள் நடந்துகொண்டிருப்பதாக நாம் படித்துக்கொண்டிருந்தாலும், உலகப் பெருநாடுகள் சம்பந்தப்படும் மிகப் பெரிய போர்கள் அனைவரையும் பாதிக்கும் வண்ணம் அமைகின்றன. உக்ரேன், காஸா போர்களைப் புறந்தள்ளிவிட்டு, ஈரானியப் போர் பிரம்மாண்டமாய் உருவெடுத்துள்ளது. போர்களால் உலகப் பொருளியல் பாதிக்கப்படுகிறது; ஏற்றுமதி இறக்குமதிகள் தடைபடுகின்றன; உலக மக்களின் வாழ்க்கையே புரட்டிப் போடப்படுகிறது.
இப்போது ஈரானில் மூண்டிருக்கும் போர், மத்திய கிழக்கு நாடுகளை அவசரநிலைக்குக் கொண்டுசென்றிருக்கிறது. இப்போர் ஈரானையும் தாண்டி, பல நாடுகளில் பரவியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்; மருத்துவமனைகள், பள்ளிகள், இல்லங்கள் சக்திவாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்படுகின்றன. அங்குள்ள மக்கள், தங்களுக்குப் பழக்கமான வாழ்க்கையை ஒரே நொடியில் இழந்து நிற்கிறார்கள்.
போரில் சிக்கித் தவிப்போர் எதிர்கொள்ளும் உடல்வலியையோ, அச்சத்தையோ சிங்கப்பூரராக நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஓரளவிற்குப் பாதுகாக்கப்பட்ட சூழலில் நாம் வாழ்கிறோம். தொலைக்காட்சிச் செய்திகளில் காணும் காட்சிகளும், பத்திரிகையில் படிக்கும் செய்திகளும் நமக்குக் கதைகளாகத் தெரியக்கூடும். சிங்கப்பூரர்கள் அங்கே சிக்கி, பல வழிகளில் நம் நாட்டிற்கு வந்துசேர்ந்ததைப் பார்க்கும்போது, போர் சற்று அருகில் வந்துவிட்டதுபோல் உணர முடிகிறது.
திரும்பிவந்த சிங்கப்பூரர்கள் ஈரானிலிருந்து வரவில்லை. விமானப் பயணம் ரத்தானதால் வேறு பல நாடுகளில் சிக்கியவர்கள். குண்டுகள் வானில் சீறிச் செல்லும் ஒலியையும், எட்டி விழுந்து அவை கிளப்பிய புகைமூட்டத்தையும் கண்டே அச்சம் மனத்தைக் கவ்வியதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அக்குண்டுகள் விழுந்த இடங்களில் வசித்தவர்களின் நிலை என்னவாகியிருக்கும்?
நம் அரசாங்கத்தின் திறனில் நமக்கிருக்கும் நம்பிக்கையும், நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் சேமிப்பும் நமக்குப் பாதுகாப்புக் கவசங்களாக இருக்கின்றன.
பெட்ரோல் விலை உயர்வு அல்லது வணிகத் தடைகளால் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தால் நாம் சலித்துக்கொள்வதோடு கவலை நின்றுவிடுகிறது. ஆனால், அந்த விலைவாசி ஏற்றத்திற்குப் பின்னால் உலகம் எதிர்கொள்ளும் உண்மையான துயரத்தையும் விபரீதத்தையும் நாம் உணரத் தவறுகிறோமா எனும் எண்ணம் எழுகிறது.
தொடர்புடைய செய்திகள்
போரைப் பொறுத்தவரை, வெற்றியாளர் என எவருமே இல்லை. தாக்குபவர், தாக்கப்படுபவர் என இருதரப்புமே இழப்புகளைச் சந்திக்கின்றன. பொருளியல் நோக்கில் பணம் மற்றும் வளங்கள் வீணடிக்கப்படுகின்றன. மனிதநேயம் மண்ணில் புதைகிறது. விலைமதிப்பற்ற உயிர்களும் எதிர்காலத் தலைமுறையின் கனவுகளும் சிதைக்கப்படுகின்றன. ஒரு போரிலிருந்து மீண்டு வருவது என்பது எளிமையானதன்று. அது ஒரு பெருமுயற்சி. அதற்குப் பல பத்தாண்டுகள் அல்லது சில தலைமுறைகள்கூட ஆகலாம்.
புவியியல் அடிப்படையில், மத்திய கிழக்கு நாடுகள் சிங்கப்பூரிலிருந்து வெகுதொலைவில் இருக்கலாம். ஆனால், அந்தத் தொலைவு நமக்கு ஒரு போலிப் பாதுகாப்பை வழங்கிவிடக்கூடாது. பொருள்களின் விலை உயரும்போதுதான் போரின் தாக்கம் சிங்கப்பூரில் அதிகம் பேசப்படுகிறது.
இது ஒரு தன்னல அணுகுமுறையா எனும் கேள்வியை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை நாம் உளமார உணர முயல்வதோடு, அவர்களுக்கு உதவும் வழிகளையும் தேடவேண்டும். நம்மால் இயன்ற நிதியுதவி அல்லது இதர உதவிகளை அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் வழங்க முன்வர வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில், பொறுப்புள்ள குடிமக்களாய் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, நமது செலவுகளை மறுபரிசீலனை செய்வது நன்மைதரும். உலகச் சூழலைக் கருத்தில்கொண்டு, தேவையற்ற ஆடம்பரப் பயணங்களைத் தவிர்க்கலாம்.
தொலைவில் எரியும் நெருப்பு நம்மைச் சுடாதுதான். அதனால், அமைதியாக இருந்துவிட முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையாக நிற்பதே மனிதநேயம். எல்லாச் சமயங்களும் அதனையே போதிக்கின்றன.
இந்த ரமலான் மாதத்தில் நோன்பிருப்பவர்கள் இப்போரில் சிக்குண்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. கூடிய விரைவில் போர் முடிவிற்கு வந்து, அமைதி திரும்பும் எனும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

