சிங்கப்பூர் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பது நாட்டின் அரசியலில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு, நாட்டின் மக்களாட்சிப் பண்புகளை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தப் பதவி, இப்போது நாடாளுமன்ற ஒழுங்கைக் காக்கப் பல கேள்விகளுக்கு உள்ளாகி, திரு சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத் தரப்பு முன்வைக்கும் வாதம் தெளிவானது. ஒரு நாட்டின் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் நாடாளுமன்றத்தில், கண்ணியம், நேர்மை, உண்மை ஆகியவை அடித்தளப் பண்புகளாகக் கருதப்படுகின்றன. ரயீசா கான் விவகாரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வருவதற்குப் பதிலாக அதை மறைக்க முற்பட்டதாக நீதிமன்றத்தால் திரு பிரித்தம் சிங் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டார். நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமனதாக ஏற்றுக்கொள்வதாகக் கூறி, விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தினார் திரு சிங்.
ஒரு தலைவர் என்பவர் நேர்மையின் அடையாளமாக இருக்க வேண்டும். பொய் சொன்னதாக நிரூபிக்கப்பட்டு தண்டனையை ஏற்ற ஒருவர், எதிர்க்கட்சித் தலைமைத்துவப் பதவியில் நீடிப்பது நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு என்று ஆளும் கட்சி கருதியது.
நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டாலும், தம் உள்மனத்தில் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்று தாம் நம்புகிறேன் என்றும், அது தமது சுய உரிமையென்றும் திரு பிரித்தம் கூறினார். இருப்பினும், நாடாளுமன்ற விவாதத்திற்குப் பின், ஆளும் கட்சியின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
திரு பிரித்தம் சிங்கின் நீக்கத்தைத் தொடர்ந்து, ஜனநாயக மரபுகளைப் பேணும் வகையில், மற்றொரு தகுதியான நாடாளுமன்ற உறுப்பினரைப் பரிந்துரைக்குமாறு பிரதமர் லாரன்ஸ் வோங் பாட்டாளிக் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பாட்டாளிக் கட்சி இந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்டுள்ள எதிர்க்கட்சியின் தலைவரே இயற்கையாக அந்தப் பதவிக்கு உரியவர் என்றும் வாதிட்டுள்ளது. இதன் விளைவாக, தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது வெறும் கௌரவம் மட்டுமல்ல. அது எதிர்க்கட்சியின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் பல சலுகைகளை உள்ளடக்கியது.
முதலாவதாக, எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும் அலுவலக வசதிகள், கூடுதல் உதவியாளர்கள், இரட்டிப்பு ஊதியம் ஆகியவை இப்போது கிடைக்காது. இது அரசாங்கக் கொள்கைகளை ஆழமாக ஆய்வு செய்யும் எதிர்க்கட்சியின் திறனைக் குறைக்கக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவதாக, விவாதங்களின்போது முதலில் பதிலளிக்கும் உரிமை, அமைச்சர்களுக்கு இணையாக நீண்ட உரையாற்றும் நேரம் ஆகிய சலுகைகளை எதிர்க்கட்சி இழக்கிறது.
மூன்றாவதாக, தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான முக்கிய அந்தரங்கப் பகிர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் எதிர்க்கட்சித் தலைவர் இழக்கிறார்.
இது எதிர்க்கட்சியினருக்கு மட்டும் பின்னடைவு அல்ல. நாடாளுமன்ற விவாதங்களில் அழுத்தமான, ஆழமான உரையாடல்களுக்கான வாய்ப்புகள் குறையும்போது, முழுமையான நாடாளுமன்ற வலிமையும் குறைகிறது. சிங்கப்பூர் அரசியல் பற்றி உலக நாடுகளின் கணிப்பும், அதன்வழி வரும் மதிப்பும் சற்று பாதிப்படைகிறது. பெரும்பான்மை ஆட்சியாளர்களின் முடிவுகள் சரியானவையாக இருந்தாலும், அவை புடம் போட்டவையா எனும் கேள்வி எழுகிறது.
சிங்கப்பூரின் ஆளும் கட்சியின் அபாரத் திறன் உலகம் அறிந்த ஒன்று. ஏதும் இல்லாமல் தொடங்கி, அனைவரும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்குக் கடந்த 60 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் சென்றிருக்கிறது ஆளும் கட்சி. அதற்கு அனைவரும் நன்றி கூறத் தயங்கமாட்டார்கள். இருப்பினும், பன்முகப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இன்றைய உலகில் சிங்கப்பூர் வெற்றியுடன் கைகோத்துத் தொடர, மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்கவேண்டும்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஆளும் கட்சியைச் சேராதோர் இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியினராக இருப்பவர்களின் பொறுப்பு அதிகமானவை.
அனைவரும் ஆமோதிக்கும் தீர்வுகளைவிட ஆட்சேபனைகளைத் தாண்டிவரும் முடிவுகள் சக்திவாய்ந்தவை.
இந்த அரசியல் சம்பவம் வருங்கால அரசியல் கட்டமைப்பை மாற்றக் கூடியது. எதுவாயினும் நமக்குச் சாதகமாய் அமையும் என எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

